07
உடன்.., சகலமும் மறந்து, குளக்கட்டின் வழியே.. கரைவாகுவட்டையூடாக மேற்குக் கரைப் பக்கமா
நடக்க ஆரம்பித்தோம். தூரத்தே நாங்கள் அடையவேண்டிய அந்த அழகிய கனவுப்பள்ளத்தாக்கு
தெரிந்தது. உற்சாகத்துடன் புரன்தரை
வழியே ஓடி
நடந்தோம்.
இடையிடையே குறுக்கிடும் பெரு நாணற்புதர்கள்..
பூவரசு மரங்கள்.. மஞ்சோனா மரங்களின் உச்சியில் கர்வமாய் அமர்ந்து கூவும் குயில்
கூட்டம்.. அங்கொன்று இங்கொன்றாக சாய்ந்த, மருது மரங்களில்.., கிளைக்குக் கிளை வர்ணக் கிளிகள்..
இனம்புரியாத நீண்ட மரங்களில்... தூக்கணாங்குருவிக் கூடுகள்.. ஓயாத ‘..கீச்சுக்கீச்சு...’க்
கீச்சொலிகள்.. பகலிலும் இருட்டான அஞ்சிரா வாளைப் புதர்களிடையே ‘வவுக்கும்..வவுக்கும்..’ என முனகும் வக்காப்
பறவைகள்.. ‘விர்ர்ர்....’ரென்று காதருகில் கூட்டமாகச் சிதறிப் பறக்கும் ஊம்பிப்
பூச்சிகள்.. வலதுபக்கமாக
காய்ந்த
தாழைமடல் பற்றைகளுக்குள் சரசர ஊர்வினங்கள்.. பயமாகவிருந்தது.
எமது பாட்டுக்களையும் சலசலப்புகளையும் நிறுத்தி
வாய்மூடி நடந்தோம்.. ‘புச்’செனத் தாவி மறையும் சாம்பல் முயல்கள்.. மனிதரைக் கண்டாலே காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டிப் பறவைகளின் ‘காச்சுக்காச்சுக்காச்’சென்ற கர்ணகடூர எச்சரிக்கை
ஒலிகள். தூரத்தில் கண்டதும் மறையும் நிலச் செண்பகங்கள்.. கலகலத்து
மிரண்டோடும் காட்டுக் கோழிகள்.. சிறுமரக் கிளைகளிலிருந்து வெருண்டு மேலெழுந்து
வர்ணமயமாய் சிறகுகள் விரித்தெழும் நீல மரங்கொத்திகள்..
‘டுட்டீர்..டுட்டீர்..’ரென்று குதித்துக்
கீச்சிடும் உள்ளான் குருவிகள்.. எமக்குப் பயப்படாமல் சாவதானமாக நடந்து செல்லும் பேயாமைகள்..
இரண்டுகால்களில் நின்றுகொண்டு சிறுபுதர்களுக்கு மேலாக தலைநீட்டிப் பார்க்கும் கருங்கீரிப்பிள்ளைகள்.. பீஉருட்டி வண்டுகளின் மேல் மினுமினுப்பு..
நிலங்களில் வளையெடுத்து வாசலில் எட்டிப் பார்க்கும் காட்டெலிகள்.. கறையான்
புற்றுக்கள்.. உரிக்கப்பட்ட பாம்புச் சட்டைகள்..
எல்லாம் கடந்து வழி முடியுமிடத்திலிருந்து ஆரம்பமாகும் தரிசான
வயல்வெளிகள். நூறேக்கர் கணக்கில் விஸ்தாரப் பெருவெளி.. ஊதிக் கூவும் பலமான கொண்டல்காற்று.. மேட்டுநிலத்தின் அடர்நாணற் புதர்களைக் கடந்தபோது
‘எண்டம்..மோ..வ்..எ..பா..பா..!’ அலறினான் குண்டன்.
‘என்னடா..என்னடா..?’
‘ப...ஆ....ம்...பு....அந்தா
பாரு.. சாந்தமாமோவ்..’
பிரப்பம் பற்றைக்குள்ளிருந்து பளபளக்கும் செம்மஞ்சள்
கலரில் நீளமாக ஊர்ந்து வெளியே
வந்தது ஒரு பாம்பு. தனது ஒன்பதடி நீளத்தை அலையலையாக
அசைத்தது. சற்று முன்னேறி எங்களை நோக்கி வந்தது. துணுக்குற்றுப் போய் சற்று நின்றது. ஊர்ந்த தலையை உயர்த்தியது. நிச்சயமாக எங்களைப் பார்த்தது..
திடீரென அதன் தலைப்படம் அகலமாக விரிந்தது. இருபிளவான அதன் நாக்குகள் பளிச்பளிச்சென வெளிவந்து வெளி வந்து மறைந்தன. படத்தை மறுபுறமாகத் திருப்பி... இரு பக்கமும் ஆடியது.
‘எண்டம்மோ..வ்..’
சிறுமிகள் மூவரும் வீறிட்டலறி திக்கொருவராக
ஓடிப்பறக்க நானும் குண்டனும் பயந்தொடுங்கிப்போய் சாந்தமாமாவின் பின்னால் ஒட்டி ஒளிந்துகொண்டு
பார்த்தோம். சண்முகத்தைக் காணவேயில்லை. ஆனால் சாந்தமாமா ஒன்றுக்கும்
பயப்படவில்லை. சட்டென இரண்டடி துள்ளியோடி ஒரு பெரிய கேட்டிக்கம்பை
முறித்தான். சுழற்றி வேகமாக பாம்பை நோக்கி வீசினான். மேலும் படபடவென கைக்குக் கிடைத்த கம்பு.., தடி,, கல்.. மட்டை முதலான எதனாலும் தொடர் தாக்குதல்
நடத்தினான் வெகுண்டெழுந்த பாம்பு அம்ம்..மாடி.. எட்டு அடி உயரத்திலிருந்து எங்களைப் பார்த்து ‘.....ர்ர்ர்ர்ஸ்ஸ்’ஸீறிக் கொண்டு ஒரே துள்ளலில் புதருக்குள்
பாய்ந்தது. அதன் நீள வால் சரசரசரவென்று அலைந்தபடி முற்றிலுமாக உட்சென்று மறைந்தது.
‘வாங்கடியே..ய்.. டே..
சம்முவோ..ம்.. வாடா ! பாம்பு ஓடிட்டு’
‘வாடா போவம்.. ம்மாடி..
என்ன பாம்புடாது.?’
“பொடையன்
...ல்லோடா .””
“ல்லடா
... சார...”
தொடர்ந்து நடந்து வக்காத்துக் குளம் வந்து சேர்ந்தோம்.
௦
தொடர்ந்து நடந்து ஒரு காலத்தில் வக்காத்துக்
குளம் இருந்த இடம் வந்து சேர்ந்தேன்.... இதுவா,,,? இதுவா,,, வக்காத்துக் குளம்.....? குளம்
எங்கே...தாமரைகள்
எங்கே,,,,,பறவைகள் எங்கே...
தாவரங்கள் எங்கே.....? என்
கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆட்கள்தான்
எங்கே.... வக்காத்துக் குளம் இருந்த
இடம் ஒரு அரிசி ஆலை தொழிற்சாலையாகி
விட்டிருந்தது...உள்ளே பற்பல
தொழிலாளர்கள்... உறுமி உறுமி வரும்..செல்லும் லொறிகள்....வாகனங்கள்......ஊறல் அரிசியின் நாற்றம்.....ஒஹ் ,,........
௦
வக்காத்துக்குளம்….! முப்பதடி
அகல நீள விஸ்தீரணத்தில் தாமரை இலைகள்
படர்ந்து நிறைந்திருந்த ஒரு நீர்க்குட்டை. ஆஹா..என்ன அழகு.. சின்னச் சின்ன செந்தாமரைகள் கூம்பிய இதழ்களுடன்...நூற்றுக்கணக்கில்.. விரிந்தவை.. கூம்பியவை.. வாடியவை.. அன்றலர்பவை.. நேற்றிதழ்கள் விரித்தவை..என்று தாமரைத்தடாகத்தின் ஆட்சி.. அவற்றின் அகல இலைகள் குட்டையை மூடி நீரில் ஆடின.. அதன் மேல் குந்தியிருக்கும் தவளைகள்.. நீண்ட ஊசிச் சொண்டுகளுடன் பூரம்குருவிகள்.. இடையிடையே ஊதா வர்ணத் தாழம்பூக்கள் நீண்டு நிமிர்ந்து கமகமத்து மணத்தன. பின்னணியில் தூரிகைதூரிகையாய் ஆளுயரத்தில் கண்ணாரப்
புற்கள்.. பீலிபீலியாக மடல்வாழைகள்.. சல்பேனியாச் சல்லுகள்.. கரையோரம் முழுக்க வர்ணமயமாகக் கருங் குரோட்டன் இலைச் செடிகள்.. பற்றைபற்றையாக நள்ளிப் புற்களின் அடர்த்தி. அதற்குள்ளிருந்து ‘கூ..ஹ்க்கூ..ய்..
கூ..ஹ்க்கூ..ய்.. டூட்டு.. டூட்டு.. சிக்கிக்சிக்கீஹ்..
சிக்கிக்சிக்கீஹ்.. பட்டீர்.. பட்டீர். . நங்ஙி.. நங்ஙி.. உள்ளா.. உள்ளா..’ என்றெல்லாம் ஆயிரம் வித
ஒலிகளில் பற்பல ஜந்துக்களின் புகலிடம்.
‘ஒருத்தரும் சத்தம் போடக்
கூடா’
கண்டிப்பாகக் கட்டளையிட்ட சாந்தமாமா தனது ஆயுதப் பொதியை அவிழ்த்து கண்ணிவலை தயாரித்து அதற்குள் இரை பரப்பி இலக்கு தேடி.., இரப்பரால் பொறிவெடிக்கல்
வைத்து,, சிற்சில வேட்டை வியூகங்கள்
வகுத்து.., ஓ..ஹ்..!
சாந்தமாமாவுக்குத்தான் எத்தனை மூளை..
அன்று இரண்டுமணி நேரத்துக்குள் இருபது கீச்சான் பறவைகளும், பதினைந்து
வக்காப்பறவைகளும், இரண்டு முயல்களும், பிடித்திருந்தோம். சாந்தமாமா மாலைவெள்ளிக்கு மட்டும்
விசேஷமாக ஒரு ‘பெத்தம்மா’க் கிளி பிடித்துக்
கொடுத்ததைப் பொருட்படுத்தாதிருந்தோம்.. காரணம் வேட்டைப் பங்காக எமக்கே கணிசமானளவு பறவைகள் கிடைத்திருந்தன..
எனினும் சாந்தமாமா மாலைவெள்ளிக்கு கொடுத்த அன்பளிப்பு பற்றி கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. திரும்பி
வரும் வழியெல்லாம் மாலைவெள்ளி கிளியை
பெத்தம்மா...பெத்தம்மா...” என்று கொஞ்சிக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக்
கொண்டே வந்தது இன்னும் கோபமாக
இருந்தது.... சாந்தமாமா மீது கோபமாகவும்
இருந்தது... இதே யோசனையாக வந்த போது மீண்டும் சின்னக் குளத்தை கடக்கும் முறை வைத்து ஒவ்வோர்
ஆளாக சாந்தமாமாக் கப்பலில் கடக்கும் போது
இக்கரையில் வைத்து மாலைவெள்ளி திடீரென என்னிடம் தன கிளிக்குஞ்சை தந்துவிட்டாள் ...
“சதக்கா...இது
ஒனக்குத்தான்,,,,” என்றாள் ...
“ஏண்டீ..?” என்றேன் ...
“அப்பிடித்தான்,,,” என்று
ஒரு வெட்கப் பார்வை பார்த்தாள் ...
ஏனோ...அந்தப் பார்வையுடன் நான் பரவசமாகி குதூகலம்
திரும்பி பெத்தம்மாவை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்....
௦
பாரமான மனதுடன்
திரும்பி நடக்கத் தொடங்கினேன்,,,,யார்
யாரோவெல்லாம் கடந்து சென்றனர்...எனக்குக்
களைப்பு மிகுந்தது...சற்றுத் தூரத்தில்
இருந்த ஒரு ஹோட்டலை அடைந்தேன்.....நவீன முறையில் ஹொட்-டோக்ஸ் ,,, கோகா குளிர்பானங்கள்....ம்ம்..
குஞ்சான் காக்காவின் வட்டக் கடை,,,அதில்
புளிச்சப்பம்...வட்டர்...ரசிக் ...சுடச் சுட தேநீர்...எல்லாம் மலையேறிவிட்டது...
ஒரு கோலா
வாங்கிக் கொண்டு வெளியில்
உட்கார்ந்தேன்...பக்கத்துக் கடையில் திரைப்பட சீ.டீ க்கள் விற்பனைக்கு
அடுக்கியிருந்தன... பெரிய
போஸ்டர்களில் யாரோ முகமும் பெயரும்
தெரியாத நடிகர்கள்...மார்பு திறந்த
முக அழகற்ற நடிகைகள்... பார்க்கவே சகிக்கவில்லை....
௦௦
08
‘படம் பாக்கயா.. சாந்தமாமா..? தேட்டருக்கா..?’
‘ஓண்டா.. அரசன் தேட்டருல
புதுப்படம் வந்திரிக்கி.. எஞ்சியார்ர படம்.. ம்... எங்க வீட்டுப்பிள்ளை!.’----- எங்கள் வீராதிசூரக் கதாநாயகனின் படமா..?
‘எஞ்ஜியாரா..?’ –
‘ஓண்டா.. அந்தப் பாட்டு.. நா..ன் ஆணையிட்டாஆஆல்.. அது நடந்து விட்டாஆஆல்;;.. – சாந்தமாமா பாடிக்காட்டடி பாட்டின் முடிவில் திடீரெனத் துள்ளித்
திரும்பி
‘ஷ்ஷ்ஆஹ்-..’ என் மூக்கில் சொடுக்கி காற்று நம்பியாரை
இடித்துத் துவைத்து புரட்டி எடுத்துவிட்டு திரும்பி எங்களைப் பார்த்து
‘ தவது செய்தவதை வித மாத்தேன்..’ என்றபோது சாட்சாத் அந்த எம்ஜீயாரே எதிரில்
நின்றார். சாந்தமாமாவின் நடிப்பில் இலயித்து
ஆர்வமீக்குற்றோம்.
‘செரி..செரி.. எப்ப
சாந்தமாமா போற..?’
‘நாளைக்கி சித்திரத் தேரு இளுக்கிற. தேரு பாக்கப் போறம் ண்டு சொல்லிட்டு சைக்கிள்ள போவம். ஆளுக்கு
ஒரூவாக் காசி எடுத்துட்டு வாங்க.. எஞ்சியாருட ‘டவுளைட்டுப்’ படம். ரெண்டு எஞ்சியார்
மெய் எஞ்சியாரு... மத்தது பொய் எஞ்சியாரு..
மெய் எஞ்சியாரு சாட்டையோட நிப்பாரு..’
‘எம்ஜியாரு ‘டபுள் அய்ட்டா’..?’
‘எனக்கிட்ட காசி ல்ல.’ என்றாள் சுபைதா.
‘நாங் கோயிலுக்குப்
போவனும்.. அப்பாம்மா விடமாட்டாங்கப்பா..’ என்றாள் பார்வதி.
‘நான் இவளுஹள் ல்லாம எப்பிடி வார..?’ மாலைவெள்ளியும்
பின்வாங்கினாள்.
‘அதாஞ் செரி.. கொம்புளப் புள்ளயள் வேணா.. நாம போம் சாந்தமாமா..’
‘அதாஞ் செரி..’
‘செரி’ ஒப்புதலளித்தான்
சாந்தமாமா.
‘நாஆன் ஆஅணையிட்டாஆஆல்...’
‘போடா மூக்கோடி..’
‘போடி வங்கோடி..’
‘லுக்குடி லூலி.. லுக்குடி
லூலி..’
‘மாக்கறுப்பா..
மாக்கறுப்பா..’
சிறுமிகள் பொறாமையால்
ஏசிப் பிரிந்தனர். எங்கள் திட்டத்தை உடன் அமுலாக்கினோம். அடுத்தநாள் பூமரத்தடியில் உச்சிப்பகலில் சைக்கிளோடு தயாராகக்
காத்திருந்தான் சாந்தமாமா.
‘வாங்கடா கெதியா.. காசி
கொண்டாந்தயா..?’
‘ஆர்ர சாந்தமாமா சக்கிள்..? ‘
“எங்கட மாமாட சைக்கிள் ..” சண்முகம் பெருமையுடன் கூறினான்
‘டிங்.டிங்.. கொண்டாங்கடா காசை.. செரி.. சதக்காவும் சமுவமும் வாருல ஏறுங்கடா.. நீ குண்டா பின்னுக்கு கரியல்ல ஏறுடா..ஙா செரி..’
சாந்தமாமா விரைவாக சைககிளை
மிதித்துச் சென்றான். வழி நெடுக எங்கவீட்டுப்பிள்ளை படக் காட்சிகளை இடையிடையே
கதைவசனம் பாடல்களுடன் சொல்லி ஆர்வமூட்டினான். முக்கால் மணி நேரத்தில் அரசன் தியேட்டரை
அடைந்தோம்.
எல்லாம் ஒரே பிரமிப்பாகவிருந்தது. சாந்தமாமா என்ன
ஒரு கெட்டிககாரன்.. அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் சிவப்புச் சேர்ட்டும் மஞ்சள் லோங்ஸ_ம் அணிந்து நீண்ட சாட்டையைத்
தோளுக்குப் பின்னால் இருகைகளிலும் விரித்துப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நின்று சிரிக்கும் எம்ஜீஆர்.
அவரது மடித்து விடப்பட்ட அரைக் கை சேர்ட்டுக்குள் புஷ்டியான கைச்சந்து.. கீழே அடிபட்டு விழுந்து கிடக்கும் நம்பியார்..... கற்களால் கட்டியெழுப்பிய மாதிரி
எழுத்துகளில் எங்கவீட்டுப் பிள்ளை!.
ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள்..
திமுதிமுத்த சனங்கள்.. முதலாம் இரண்டாம்,,, களரி வரிசைகள் பிதுங்கி வழிந்தன..
‘ம்மாஆஆடி.. என்ன சனம்..
நமக்கு டிக்கட்டுக் கெடைக்கிமா சாந்தமாமா..?’
‘டெ... நான் போய் டிக்கட் எடுத்திட்டு வாரன்.. நீங்க
மூணுவரும் அந்தா பாரு தேட்டரு முன்
விராந்தையில ஒட்டியிரிக்கிற அந்த புளக்குகளப் பாத்துட்டு நில்லுங்க.. அங்கஞ்ச
போய்ராதங்க.. செரியா..’
எச்சரித்துவிட்டு சாந்தமாமா முதலில்
சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய் டிக்கட் எடுத்து வைத்துவிட்டு களரி வரிசைக்குள் கம்பிவேலி ஊடாக சட்டவிரோதமாக வீறாப்புடன் உட்புகுந்து வரிசை நடுவில் களேபரங்களுக்கு மத்தியில் இடம் பிடித்ததை மட்டற்ற மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சற்று நேரத்தில் சாந்தமாமா வரிசையில்
நெருக்கியடித்த சனங்களுடன் ஏதோ வாக்குவாதப்பட்டு தனது கிளிக்கத்தியை
எடுத்து விசுக்கிக் காட்டி
நெருக்கி
நெருக்கி இடம் எடுத்து வரிசையின் முதலில் இடம் பிடித்ததைக் கண்டு துள்ளிக்
குதித்துக் கொண்டாடினோம். அடுத்து பத்தே நிமிடத்தில் சாந்தமாமா மூண்டு அரை டிக்கட்டும் ஒரு முழு டிக்கட்டுமாக தொப்பலான வியர்வையுடன் வந்து சேர்ந்தான்..
சிரித்தான்..
‘எப்பிடி.. பாத்தியளாடா..
குண்டா.. டிக்கட் கெடைக்கிமா..ண்டாயே..? எப்பிடி..?’
‘சாந்தமாமா நீ மெய்யா
மெய்யா எஞ்சியாருதான்..’
அதை பெருமனதுடன் ஏற்றுக் கொண்ட சாந்தமாமா முன் களரி வாசலின் உடாக தியேட்டருக்குள் கூட்டிச் சென்றான். ஆ..அம்மா..டி.. எத்தனை பெரிய வெண்திரை.. எத்தனை கதிரைகள்..
வாங்குகள்.. கொஞ்சமாய் இருட்டு.. உள்ளே சனங்கள் வந்து கொண்டிருந்தனர்.. எங்களை வாங்கில் வசதியாக உட்கார வைத்த சாந்தமாமா தியேட்டரைப் பற்றி சற்று முன்னறிவித்தல் சொன்னான்.
‘டே.. அதப் பாரு.. அதான் ‘வெலுக்கணி’.. மேலூடு.. காசி கூட..
கீழுக்கு ‘வெஸ்ற் கிளாசி’.. அதுக்குப் பொறகு.. ‘செக்கன். கிளாசி. நாம இரிக்கிற ‘களரி’. அந்தா தெரியிது பாரு..
மூணு ஓட்டை.. அதாலதான் ‘மிசின’; படம் காட்டும்.. இந்தத் தெரையில் படம் ஓடும்.. பாரன்.. எஞ்சியாரு வெருவான்.. பாரன்..’
‘அந்த ஓட்டையாலயா சாந்தமாமா
எஞ்சியாரு வெருவான்..?”
‘ஒண்ட குண்டு வாய்க்குள்ளால
வெருவான்.. மடயா..! தெரையில் பெரிசா எஞ்சியாரு வெருவான் பாரேன்.. தொப்பி ‘கூலிங்கௌhஸ’; போட்டு சப்பாத்தும் போட்டு..
முதக் கட்டத்துல ஓடி வெருவான்.. சண்டக் கட்டம் மூணு இரிக்கி.. பாரன் நம்பியாரு
வெருவான்.. கடசிச் சண்ட கப்பலுக்குள்ள இரிக்கி.. நாக ஸிம் இரிக்கான்.. நம்பியாரப்
பாத்தா பயந்து மூத்திரம் வெரும்.. ப்பிடி உருட்டுவான்..’
திரைப்படம் ஆரம்பிக்கும்
முன்னரே முழுக்கதையையும்
சொல்லிவிட்டான்.. எங்கள் சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் இரண்டு
மடங்;காகி விட்டன.. வியர்த்து வழிந்தது. கிணுகிணுவென்று மணி அடித்தது.
‘மூண்டாம் வெல்லும்
அடிச்சிட்டான்.. படம் ஓடப் போகுது..’
சாந்தமாமா அறிவித்தான். உடனே
முழுத் தியேட்டரும் கடும் இருட்டானது.. ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸெ’ன்று மூன்று ஒளிக்கற்றைகள் ஊடுருவித் திரையில் பரவின. திடீரெனத் திரையில் கறுப்பாக ஒரு அறிவித்தல்
விழுந்தது. ‘முக்கிய அறிவித்தல்.. படம்
பார்த்து முடியும் வரை உங்கள் டிக்கட்டுகளை கவனமா...’ வாசித்து முடிப்பதற்கிடையில் சட்டென்று ‘புஸ்ஸ்’ஸென்ற விநோத ஒலி காதுகளை
கிழிக்க படீரென்று திரைக்குப் பின்னாலிருந்த ஒலிபெருக்கியில் வாத்தியங்கள் ஒரு சேர அதிர வெண்திரையில் சிவப்பு எழுத்துக்களில் ‘புரட்சி நடிகர்
எம்.ஜீ.ஆர். வழங்கும்’
என்ற
எழுத்துக்கள் மின்னின. உடன் தியேட்டர் முழுக்க ‘கூ..ய்..ய்யா.ஸ்;ஸ்’ விசில் ஒலிகள் காதுகளைக்
கிழித்தன.. சாந்தமாமா டெல்டா டொபிப் பேப்பரில் வாய் வைத்து விசித்திரமாக ‘உய்ய்ய்யெ’ன்று அதிரொலி எழுப்ப- எம்ஜீஆர் காட்டுக்குள்ளிருந்து வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தான்.
வாழ்க்கையில் பார்த்த
முதல் திரைப்படம் முடிந்து நாங்கள் ஓரளவு மாலைக் கருக்கிருட்டில் ஊருக்குத் திரும்பி வந்த
போது
என்
தந்தையும் குண்டனின் முரட்டு
மாமாவும் கண்ணாரப் பெரியானும் கைகளில் முறையே பெரிய
தடியும் பிரம்பும் பழைய தும்புக்கட்டுமாக
எங்களை வரவேற்கத் தயாராகக் காத்திருந்தனர்.
அன்று
முழுவதும் வாங்கிய அடியின் தழும்புகளும் வலியும் சிறுமிகளின் கேலியும் கிண்டலும்....எம்ஜியாரின் படம் பார்த்த பெருமையில் மறைந்து போயின...
௦௦
09
பொங்கி வழிந்த சிந்தனைகளால் மனம் பேதலித்து
விட்டிருந்தது.. திடீரென சி டி
கடையிலிருந்து கர்ண கடூரமான ஒரு இசை ஒலி செவிகளை அதிரடிக்கவே சட்டென் எழுந்தேன் ... பணம்
செலுத்தி விட்டு மறுபடி எங்கே
செல்வது என்ற உத்தேசமின்றி நடக்கத்
தொடங்கினேன்..
யாரோ ஒரு சிறுவன் தன தங்கைக்கு ஒரு
சிறிய சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான்... விர்..விர்ரென விரையும்
வாகனச் சாலையில் அவர்களின் சைக்கிள் பயிற்சி கண்டு எனக்கே பயமாகவிருந்தது...ஒஹ்...சைக்கிளே பிரதான
வாகனமாயிருந்த அந்தக் காலம்.......?
௦
குஞ்சித்தம்பி ஆலிமின்
வீட்டு முற்றத்தில்
ஒரு
நாள் எங்களுக்குச் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொடுத்தான் சாந்தமாமா. முதலில் மாலை வெள்ளியை ‘சீற்றி’ல் உட்கார வைத்து ஆரம்பித்தான். எங்கள் முறை
வருமட்டும் நாங்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்..
மாலைவெள்ளி எடுத்த எடுப்பிலேயே ‘சீற்’றில் உட்கார்ந்து தப்புத்தப்பாக ‘ஹெண்டிலை’ ஆட்டியபடி மிதித்து வர சாந்தமாமா பின்னால் ‘கரியரைப்’ பற்றியபடி சமநிலைப்
படுத்தியவாறு ஒடி வந்து கொண்டிருந்தான்.. இப்படியே மூன்றாவது தடவை வரும்போது ‘சடா’ரென மாலைவெள்ளி அலறிக் கொண்டு சைக்கிளிலிருந்து குதித்தாள். கீழே விழுந்தாள். சுருண்டாள்.. ‘எண்டம் மோ..வ்..’ என்று முனகிக் குளறினாள். நாங்கள் பயந்து போய் அவளைச் சூழ்ந்தோம்.
‘என்னடி..ன்னடி மாலவெள்ளி..
என்னடி..?
‘உளுந்துட்டியாடி.. காயமா..? காட்டடி..’
‘எண்டம்மோ...வ்..’
மாலைவெள்ளியின் கால்களிலும் பாவாடையிலும் திட்டுத்திட்டாய் இரத்தக்
கறைகள் தெரிந்தன. நாங்கள் பயந்து போனோம். எதற்கும் இலேசாகப் பயந்து விடாத சாந்தமாமாவே சற்றுப் பயந்தபடி சொன்னான்.
‘டேää இவள் மாலவெள்ளி சக்கிள்ள உள ல்லடா..
அவளாத்தான் ‘டும்மு’ ண்டு துள்ளிட்டாள்.’
‘ஓம்டா.. என்னடி செய்யிது
மாலவெள்ளி..?
நீயாத்தானே
உளுந்த..!’
மாலைவெள்ளி பதிலேதும் பேசாது சற்று நேரம்
முனகித் துவண்ட பின்
திடீரென
எழுந்து தன் வீட்டை நோக்கி வயிற்றைப் பொத்தியபடி விரைவாக ஓடினாள்.
“டியே.. மாலவெள்ளி...! மாலவெள்ளி..!!’
என்று கத்திக் கூப்பிட்டபடியே பார்வதியும் சுபைதாவும்
அவளின் பின்னே ஓடினர். நாங்கள் நன்றாகப் பயந்து போனோம். மாலைவெள்ளி வீட்டுக்குப் போய் தனது சின்னப்பா உச்சுள்ளியனிடம் சொல்லிக் கொடுத்து கூட்டி வருவாள் என்ற
குண்டனின் இரகசிய கிசுகிசுப்பை நம்பிய நானும் சண்முகமும் குண்டனும்
சாந்தமாமாவைக் கைவிட்டு திடுதிடுவென அவரவர் வீட்டை நோக்கி
ஒட்டமெடுத்தோம்.. உச்சுள்ளியனுக்கும் சாந்தமாமாவுக்கும் நிகழப்
போகும்
சண்டையைப்
பார்க்க தைரியமில்லை எங்களுக்கு. ஆனால் நாங்கள் நினைத்தபடிää எதுவும் நடக்கவில்லை.
அடுத்தநாள் நாங்கள்
கறுத்தம்மாவின் பாழ்வளவில் சந்தித்த போதும் விளக்கம் ஒன்றும் தெரியவில்லை.
பார்வதியும் சுபைதாவும் மட்டும்
வந்தனர். மாலைவெள்ளி வரவில்லை. ஆர்வமுடன் சிறுமிகளைச் சூழ்ந்தோம்.
‘மாலவெள்ளிக்கு என்னடி
நடந்த..?’
‘ஒண்டுமில்லடா..’
‘காயம் எங்கடி..பெரிசா..?’
‘ல்லடா..’
‘அப்ப எரத்தம்..?’
‘தெரியா’ என்ற சுபைதா வெட்கத்துடன் பார்வதியப் பார்த்தாள். இருவரும் ஏதோ இரகசியம் பகிர்ந்து
கொண்டு சிரித்தனர். சண்முகம் கோபமடைந்து பார்வதிக்கு கிள்ளி
விட்டான்.
‘ஏண்டி சிரிக்காய்..
சொல்லண்டி கச்சக்கட்டு..!’
‘எனக்கித் தெரியா.. மாலவெள்ளி பெரியபுள்ளயா ஆய்ட்டாளாம்டா.. அவட ஊட்டுல கதச்சாஹ..’
‘பெரிய புள்ளயா..? அதென்னடி..?’
‘தெரியாடா மாக்கறுப்பா..! பெரியாக்கள் அப்பிடித்தான் சொன்னாஹ..’
‘அதெப்பிடிடா சம்முவம்.. நம்மள் மட்டுக்குத்தானே இருந்தாள். திடீருண்டு பெரிய ஆளா எப்பிடி ஆகுவாள்..?’
‘அதானே.. எப்பிடிரா குண்டா..?’
‘எனக்கென்னடா தெரியிம்..? சாந்தமாமாக்கு
தெரிஞ்சிரிக்கும். வெரட்டும் கேட்டுப் பாப்பம்..’
நாங்கள் அடங்கமாட்டாத ஆர்வமுடன் சாந்தமாமாவுக்காகக் காத்திருந்தோம். சற்று நேரத்தில் சாந்தமாமா வந்து சேர்ந்தான். கையில் சில சினிமா பாட்டுப் புத்தகங்கள்
வைத்திருந்தான்..ஆனாலும் முகம் கறுத்துப் போய் வாடியிருந்தான்.
‘ஙா..சாந்தமாமா..! சாந்தமாமா..’
‘சாந்தமாமா..! மாலவெள்ளி
பெரியபுள்ள ஆய்ட்டாளாம்.. அதெப்பிடி சாந்தமாமா.. உன்னப் பாக்கயும் பெரிய ஆளா
ஆய்ட்டாளா எப்பிடி..?
உன்ன
விட உசரமா ஆய்ட்டாளா..?’
‘என்னடா..? ஆரு சொன்ன..?;’
சாந்தமாமா எங்களை விசித்திரமாகப் பார்த்தான்.
ஓன்றும் பேசவில்லை. என்னவோ முணுமுணுத்தான். ஓன்றும் விளங்கவில்லை. பின்னர்
‘இனி மாலவெள்ளி நம்மோட
வெளையாட வெர மாட்டாள்.. அவளுக்கு இனி கலியாணம் முடிப்பாஹ. புள்ளப் பொறுவாள்.. அதான் பெரியஆளாகிற !”
சாந்தமாமரின் விளக்கத்தால் பெரிதாக ஒன்றும்
புரியாவிட்டாலும்
இனி
மாலைவெள்ளி எங்களோடு விளையாட வர மாட்டாள் என்ற செய்தி எல்லோரையும் விட
எனக்குத்தான் மிகக் கவலையளித்தது. அவளைக் காண வேண்டும் என்ற ஆவல்
துறுதுருத்த்து.... மனதுக்குள்
ஆயிரம் கற்பனைகள் சிறகடித்தன...
‘அப்ப.. இனி நாம அஞ்சி
பேருந்தானா சாந்தமாமா வெளையாடுற..?’
‘ல்லடா.. நீங்க நாலு
பேருந்தான்.. ஏனுண்டால் நானும் போகப்போறன்..’
‘நீயுமா..? எங்க..? நீயும் பெரிய ஆளாய்ட்டியா
சாந்தமாமா..?’
சாந்தமாமா வருத்தப்பட்டுச் சிரித்தான்.
‘அப்பிடித்தான்.. என்ட தாத்தி வந்திரிக்காரு.. போடியாருட வீட்டுல இருக்காரு.. என்ன என்ட சொந்த ஊருக்குக் கூட்டிப் போக வந்திரிக்காரு.. நான் இனி
எங்கட ஊருல என்ர அம்மே தாத்தேவுடன் இருக்கப்
போறன்.’
‘என்ன..? பொய்..பொய்..”
‘ல்லல்ல.. மெய்தான்..’
இப்படி ஒரு அதிர்ச்சியான பிரிவுச் செய்தியை
எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. சாந்தமாமாவும் பேசாமல் நெடுநேரமாக யோசித்துக்
கொண்டிருந்தான்.. எங்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. சாந்தமாமா இல்லாத
விளையாட்டா..?
சாந்தமாமா
இல்லாத வயல்வெளிகளா..?
சாந்தமாமா
இல்லாத ஊரா..?
௦௦
No comments:
Post a Comment