வக்காத்துக் குளம் -01
கனடாவிலிருந்து நான் இலங்கைக்கு..என் சொந்த ஊரான வக்காத்துக்
குளத்துக்கு பிள்ளை குட்டிகளோடு சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின் திரும்பி
வந்ததும் உடனடியாகச் சந்திக்க விரும்பியது
சாந்தமாமா என்று அப்போது அழைக்கப்பட்ட என் பால்ய காலத்து நண்பனைத்தான்... முடிந்தால் .... சண்முகம், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா.....
ஒ....என்னருமை குண்டன்..............எல்லோரையும் சந்திக்க வேண்டும்....
வக்காத்துக் குளத்திலிருந்த என் தந்தையாரின்
வீடு வளவு ஒன்றை விற்கும் வேலைக்காக சில படிவங்களில் நான் ஒப்பமிட வேண்டியிருந்தது... என் சொந்த ஊரை
என் மனைவி-பிள்ளைகளுக்கும் சுற்றிக் காட்டவும் ஆவல் கொண்டு அவர்களையும்
அழைத்து வந்திருந்தேன்... மொத்தமே
மூன்று நாட்கள்தான் இங்கு தங்க முடியும்,,,அவ்வளவு இறுக்கமான நிகழ்ச்சி நிரல்கள் என்னிடமிருந்தன...
நான்
தங்கியிருந்த வீட்டுக்கார உறவினர்களிடம் ஒப்பந்தப்
பத்திரங்களை துரிதமாகத் தயாரிக்கச்
சொன்னதோடு கூடவே... சாந்தமாமா சண்முகம், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா,..
குண்டன்...ஆகியோரின் விபரங்களைச் சொல்லி
என்னை வந்து சந்திக்க ஏற்பாடு செய்யவும் சொல்லி விட்டேன்........ மாலைவெள்ளியை
நெடுங்காலத்துக்குப் பிறகு சந்திக்கப்
போவதை எண்ணி மனம் இந்த வயதிலும் குறுகுறுத்தது பெத்தம்மாவை நினைவு
வைத்திருப்பாளோ.....
அதற்கிடையில் ஊரைச் சுற்றிப்
பார்க்கும் ஆவல் மீக்குறவே, சட்டென்று வெளிக்கிட்டு விட்டேன் கால் நடையாகவே
ஒரு வலம் வரலாம் என்று
வெளிக்கிட்டேன்.. மனைவி –பிள்ளைகளை கடற்கரை பார்க்கச் சொல்லி மகனுடன் காரில்
அனுப்பிவிட்டு- தனியாக கேசுவலாக
சாரமும் கை பெனியனும் அணிந்து கொண்டு
வீட்டை விட்டு புறப்பட்டேன் ..ஆனால்..., நான்
வாழ்ந்த தொன்மை மிக்க அமைதியான என் ஊரைக் காணவில்லை..
வக்காத்துக்குளம் இப்போது நகரமாகி விட்டிருந்தது.. :”வக்காத்துக்குளம்
மாநகர சபை உங்களை வரவேற்கிறது!” என்ற
வளைவுத் தோரணம் வேறு.... .சாந்தமாமா இந்த
நகரத்தில் அல்லது நரகத்தில்
எங்கே இருக்கிறானோ...? அல்லது அன்றே
ஊரைவிட்டு சென்றவன் திரும்பி வரவில்லையோ...தெரியாது... .பரவாயில்லை... விசாரித்துக் கொள்ளலாம்...
ஊரை
எனக்கும்... ஊராருக்கு என்னையும் அடையாளமே
தெரியவில்லை ...சும்மா குத்து மதிப்பாக மேகுப் பக்கமிருந்த வயல் வெளியை நோக்கி நடந்தேன் ...அங்கேதானே பெருக்கெடுத்தோடும் பட்டிப்பளை
ஆறு இருக்கும்... தென்னம் தோப்புகள்... இருக்கும்.... இருக்குமா...?
ஆயிரத்தெண்ணூறு
தென்னைமரங்கள்.. அடர்ந்த குளிர்நிழல்.. குவியல் குவியலாக தேங்காய் உரி மட்டைகள்..
தேங்காயக் குவியல்கள்.. மரத்துக்கு மரம் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் கயிறுகள்..
தும்புக் கும்பங்கள்.. தொழிலாளர்கள்........ தோப்பின் தரையெல்லாம் பச்சைக்
கம்பளமாய் புற்கள்.. காட்டாமணை செடிப் புதர்கள்.. தொட்டாற்சுருங்கிப் படரிகள்..
பிரப்பம் பற்றைகள்.. எரிந்து கரியாய்க் கிளம்பி வரும் நாணல் இலைகள்.. ஊடறுத்துச்
செல்லும் ஒற்றையடிப் பாதை.. நடுநடுவே நெடிதுயர்ந்த வம்மி மரங்கள்.. எங்கே இவைகள்...?
மர
அடிகளில் இளஞ்சிவப்புப்
பந்துகளாய் அதன்
பூக்கள்.. கடந்ததும் வரிசையாக பூஞ்சணமரங்கள்..
இலையை ஒடித்து சுருட்டி
ஊதினால் ‘பீ..ப்பீ..ப்..’பென்ற இலவச நாதஸ்வர ஓசை..
அடிமரத்தில் பட்டைபட்டையாக
அப்பியிருக்கும் மயிர்க்கொட்டிப் புளுக்கள்..
பார்த்தாலே தலைமயிர்
சிலிர்த்தெழும்..
ஒற்றையடிப்
பாதையின் குறுக்காக
மறித்து கிளைகளை நீட்டிக் கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள்.. அதன் ஊதா மஞ்சள்.., சிவப்பு
வர்ணங்களில் ஒலிவாங்கிப்
பூக்கள்.. வழிநெடுக நீலநிற
வண்டுகளின் ‘வ்வ்வ்வ்வெ’ன்ற ஒலியலைகள்.. எங்கே
இவைகள்...?
நெடிதுயர்ந்தும், கிளைகளை
அகல விரித்தும் நறுபுளி
மரம்.. அதன் சளி நிறைந்த பழம்.. இளம்சிவப்புக் கலரில் ஒதக்காய்கள்
விழுத்திக் கவரும் கோமாப் புளிமரம்.. சாப்பிட்டால் வாய் நிறைய
இனிப்பும்புளிப்புமாக சாறு.. சின்னச்சின்ன ஈர்க்குச்சி இலைகளுடன் காட்டீச்சை மரங்கள்..
அங்குமிங்குமாய்.. நூற்றுக்
கணக்கில் பயணிக்கும் தும்பிகள்..
அடர்கிளைகள் பரப்பிய அலரிமரங்கள்.. அவற்றின் சிறிய கூம்புகூம்பான இலைகளின் அடியில் தங்கக்
கலரில் தொங்கும் கூட்டுப்புளுக் கூடுகள்.. பற்றைபற்றையாக நாகதாளி..,
குறிஞ்சா,
மாம்பாஞ்சான், கொத்தான வெள்ளைப்
பூக்களுடன் சிரிக்கும், நெருஞ்சிமுட்புதர்கள்..
எல்லாம் கடந்து நடந்தால்... சரிவாக
இறங்கிச் செல்லும் நிலம்.. கிடுகிடு பாதாளம்.. அப்புறம் சமவெளி............................. எங்கே,,.
எங்கே... இவையெல்லாம்...?
ஒன்றையுமே காணவில்லை.....எங்கே இவையெல்லாம்...? தெரிந்ததெல்லாம்
மாடிவீடுகள்... மாடிவீடுகள்,,,வீடுகள்....கட்டிடக் காடுகள்தாம். என்
நெஞ்செல்லாம் விரக்தியும்...அந்நிய
உணர்வும்... பரவின... இவற்றைப் பார்க்கச் சகிக்காமல் மெதுவாக அங்கெ
கிடந்த ஒரு கொன்க்ரீட் கல்லில்
உடக்கர்ந்து கொண்டேன்... என்னை
யாருக்கு அடையாளம் தெரியப் போகிறது.... ஏதேதோ எண்ணங்கள்.......எங்கே அந்த
சொர்க்க பூமி....? எங்கே அந்த
உயிர்ப்புள்ள நந்தவனம்...?
எங்கே என் வக்காத்துக்குளம் ...?
பட்டிபளை
ஆறு பெருக்கெடுத்தோடிய இடத்தில் ஒரு
சிறு கால்வாய் நாற்றக்
கழிவுகளுடன் ஊர்ந்து கொண்டிருந்தது.... .வயல்வெளி முழுக்க குடியேற்றத் திட்டங்கள் போட்ட தொடர்
மாடிக்குடியிருப்பு எச்சங்கள்...நகரமயமாக்கலின் ஆரம்ப வாந்திகள்.... எங்கே என் கிராமம்...? யார் யாரோ அந்நிய
மனிதர்கள்...? எங்கே என் நண்பர்கள்.... சண்முகம், குண்டன், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா.....ஒ....என்னருமை சாந்தமாமா..!... சாந்தமாமா.?
௦௦
No comments:
Post a Comment