Thursday, December 23, 2021

அனீஷா மரைக்காயர்










 பசுமை நினைவுகளை அசைப்போடும்   வக்காத்து குளம்

அனீஷா மரைக்காயர் என்ற ரியாஸ்

( அத்தர். சிறுகதை நூலின் ஆசிரியர். சிங்கப்பூர்


 பல ஆண்டுகளுக்கு பின் கனடாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் சதக்கா, தனது நண்பர்களை தேடியலைகிறான். வெயிலிலும், பொழுதிலும் மணிகணக்கில் மிதந்த வக்காத்து குளம் காங்கீரிட் கட்டிடங்களாக மாறி நிற்கிறது. சொந்த ஊரில் தனது நேசத்துக்குரிய குளத்தையும், மீன்களையும், குருவிகளையும், நண்பர்களையும் காணாது துடிக்கிறான். வெறும் ஐம்பது பக்கங்களே இருக்கும் இக்குறுநாவலை படித்ததும் அவ்வப்போது கடும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் வேளச்சேரி நினைவுக்கு வந்தது. இருபது முப்பது நீர்நிலைகளுக்கு மேல் இன்று வளர்ச்சியடைந்த சென்னை வேளச்சேரி காங்கிரீட் காடுகளாக வளர்ந்து நிற்கிறது. எத்தனையோ ஊர்களில் இரவோடு இரவாக குளம், குட்டை ஆக்ரமிக்கப்பட்டாலும் அதன் பசுமையான நினைவுகளை அபகரிக்க முடியுமா? 

 இதன் ஆசிரியர் சேர் தீரன் நவ்சாத், காக்கா K S Mohammed Shuaib எனக்கு அறிமுகம் செய்து வைத்த கிழக்கிலங்கை எழுத்தாளர் அவர். நான் சிறுகதைகள் எழுதலாம் என முடிவெடுத்த போது தீரன் சேர் எழுதிய  ‘வெள்ளிவிரல்’ கதைபோல் ஒரு நய்யாண்டி கதைவிட்டால் போதும் என தோன்றியது. 

  வக்காத்து குளம் பசுமை நினைவுகளை அசைப்போடும் சதக்கா, ஊர் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு கீழே சிதிலங்களாக மாறிப்போன தனது பால்யத்தை தேடியலைகிறான்.  இந்த குறுநாவலில் வரும் சாந்தமாமா, மாலைவெள்ளி, சுபைதா, குண்டப்பன், சண்முகம் நம்முடைய பால்ய காலத்தில் நம்மோடு விளையாடிய நண்பர்கள்.நாவலின் பலம் என்னவென்றால் பொய்யும் புரட்டுமாய் லெளகீகத்தில் பெரியவர்களாகிவிட்ட நம்மை பார்த்து மீண்டும் எப்போது கள்ளங்கபடமில்லா சிறுவர்களாக போகிறீர்கள் என கேட்கும் கேள்வி ? ஆங்காங்கே  சிறுவர்களின் விளையாட்டு பாடல்கள், ஒவ்வொரு இரண்டு பக்கங்கங்களும் நடுவில் வருகிறது.  நம் சிறுவயதில் பாடக்கூடிய பாடல்கள் எல்லாம் இப்போது நினைத்துப்பார்த்தால் பொருளற்ற பாடல்களாக நாம் உணர்வதுண்டு. 

   பால்யத்தில் எனது தெருவில் இருந்த அக்காவோடு சத்திரம் போய் திரும்பி வரும்போது , மைய்யத்தாங்கரையை பார்த்து ஒருமுறை கைநீட்டிவிட்டேன். ஒரு தலைப்பிள்ளை அப்படி செய்யக்கூடாது ! நீயேன் அப்படி செய்தாய் என அழ ஆரம்பித்துவிட்டாள். சந்தையில் பிசுபிசுத்த மீன் கவுச்சி கையோடு எனது பத்துவிரலையும் வாயில் நுழைத்து கடிக்க சொன்னாள் !  அதுதான் அஅதற்கு பரிகாரம் ! நானும் மைய்யாதங்கரையை நோக்கி வாயுக்குள் போண்டாவை நுழைப்பது போல் விரல்களை அழுதுக்கொண்டே நுழைத்தேன். வயதுக்கு வந்த பின்பு அத்தகைய செயலெல்லாம் பொருளற்றதாகவும் சிரிப்புக்குள்ளாதாகவும் மாறிவிடுகிறது. 

  இக்கதையில் சிறுவர்கள் சதக்கா, மாலைவெள்ளி,பார்வதி, சாந்தமாமா  பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்கில் கண்ணாடியில் வழியும் நீர் போல் என்றாலும், கதையின் முடிவில் புத்தவிகாரையில் வரிசையாய் கண்களை மூடி நடக்கும் புத்த துறவிகளுக்கு நடுவே டிவிஸ்டாக பாடப்பெறும் ஒரு சிறுவர் பாடல் , அந்த பாடல் எழுபது வயதாகிவிட்ட சதக்காவிற்கு ஒரு தரிசனத்தையும் கண்டடைதலையும் வாழ்வின் முழு அர்த்தத்தையும் தருகிறது. ஒரே மூச்சில் இழுத்துக்கொண்ட காற்றைப்போல அந்தப்பாடல் முழு வக்காத்துகுளத்தையும் தரிசனமாக படிக்கின்ற நமக்கும் ஒரு சித்திரத்தை சேர்த்தே தருகிறது. 

   நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போது பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது, ‘அரப்படம் திரப்படம் ஆரியமங்கள கோயில் பருப்பா 12 ! தெக்கு தெருவுல காது குத்தின வாழப்பழத்த யார் எடுத்தா ! ‘  இப்படி பலபாடல்களை தூரம் தெரியாமலிருக்க பாடிக்கொண்டே சொல்வோம். வழியில் வரும் நாய் கோழிகள், வீட்டு கூரையில் மீது கல்லெறிந்து பாடிய பாடல்கள், இதுவரை பொருளற்றதகாவே எனக்கு தோன்றியது. வாழ்வின் சூட்சுமமும் தத்துவமும் புரியும் கணத்தில் அந்த வாழைப்பழத்தை யார் எடுத்தார் என்று புரிந்துவிடுமோ என்னவோ தெரியவில்லை. 

வெளியீடு : Ghazal Publications

No comments:

Post a Comment