Monday, January 16, 2017

6



06


           றுபடி நடந்து... பட்டடிப்பளை ஆற்றின் மேற்குக் கரையோரம் வந்துவிட்டோம். இதனைச் சின்னக்குளம் என்பார்கள்.  தூரத்தே துரிசி வில் தெரிந்தது. வெகு தூரத்தே சவளக்கடை அரிசிஆலையின் புகை உருண்டையாக  வானம் நோக்கிப் புகைந்து கொண்டிருந்தது.  சின்னக்குளம் என்பது   அகலக்குறுக்கான ஆறு. சிற்றலைகள் பட்டு   ‘சளக்சளக்கென கரையடிக்கும்  நீரலைவுகள்.. பக்கத்தே ஆமைப் பாளி.. முப்ப்ததேழு ஆமைகள் கரையேறி வெயில் காய்ந்தன. முதலைகளும் இருக்கலாம்.. என சாந்தமாமா  பயமுறுத்தினான்...

சுற்றிலும்.. வண்ணாத்திக் கற்கள்.. ஆற்று நீரில் பாம்பு போல நெளிந்தாடும் தென்னை மரப் பிம்பங்கள்.. அக்கரைக் கரைவாகு வயல்வெளிகளில் சில கிராமத்தவர்கள்..  புல் பிடுங்க வரிசையிற் குனிந்திருக்கும் பெண்கள்.. அவர்களின் கிராமியக் கவிப் பாட்டோசைகள்.. பிடுங்கிய சல்லுக்குள் துடிக்கும் சிறு மீன்களுக்காகக் குறிவைத்துக் காத்திருக்கும்..,  வரிசைக் கொக்குகள்.. சின்னக்குளமும்... சும்மா அல்ல.. பத்தடி ஆழம் இருக்கும்.. கடக்கப்போகிறோம்.

          சாந்தமாமா தனது.. தார்ப்பாய்ச்சியை அவிழ்த்து.. தனது  அரும்பெரும் ஆயுதங்களை வெளியே எடுத்தான். கண்ணிவலை தங்கூசுக்கயிறு ..,ஈயத்துண்டுகள்..,சம்பியன்சவரஅலகு..,  கிளிக்கத்தி..,டெல்டாடொபிப்பேப்பர்கள்.., மண்புளு நிறைந்த யானைத் தீப்பெட்டி.,. கய்யான் குண்டு, டியுப் ரப்பர்.., கட்டப்பொல்..,  இரண்டு தூண்டில்கள்,, பூட்டூசிகள்.., அவ்வளவுதான்.  நாங்கள் ஆவென்று வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்க.., ஆயுதங்களை  ஒரு பெரிய.., சீமெந்துப் பையில்.., அடைத்துச் சுருட்டி.., என்னிடம் ஒப்படைத்தான். பின் எங்களனைவருக்கும் பொதுவான கட்டளை பிறப்பித்தான்.

டேய்... ஆத்தக்கடக்கப்போறம்.. என்ட முதுகில ஒவ்வொரு ஆக்களா ஏறனும். அக்கரையில உட்டுட்டு வருவன். டே... சதக்கா.. முதல்ல நீ இந்த சாமான்களை நனையாமப் புடிச்சிட்டு, ஏறு.  சம்முவம் நீ நீஞ்சுவாய் தானே..... போ.. சதக்கா வாடா..

ரெண்டாவது நான்என்றாள் மாலைவெள்ளி.

ல்ல நான்..

நான்டி..நான்டி..

பொத்துங்கடா வாய்..! மொதல்ல சதக்கா... பொறகு ஆராருண்டு பாப்பம். வா... கிட்ட நில்லு.. எல்லாரும்..  வட்டமா நில்லு.. ம்.. செரி..

என்று எல்லோரையும் வட்டமாக்கிய சாந்தமாமா அவர்களின் அதிர்ஸ்ட முறைப்படி முதுகிலேறு முறையைத் தீர்மானிக்க தான் வழக்கமாகப் பயன்படுத்தும் வாய்ப்பாட்டைப் பாடி ஒவ்வொருவரிடமும் நிறம் கேட்டுத் தீர்மானித்தான்..

ஓம் பத்து!  ஆத்தப்பா சந்தைக்குப் போனாராம்.. ரெண்டு குண்டு வாங்கி வந்தராம்.. ஒண்டு காகம் கொண்டு போனதாம்.. மத்தது என்ன நெறம்..?’ என்று வசனம் முடிவடைந்த நபரிடம் கேட்டான் சாந்தமாமா.  சிகப்பு!என்றாள் மாலைவெள்ளி.  சி..வ..ப்..பு..என்று சுட்டுவிரலால் அனைவரையும் தொட்டுபுஎன்ற எழுத்தில் முடிந்த நபரை இரண்டாவதாகத் தேர்வு செய்தான். இப்படி  எல்லோருக்கும் முறை தீர்மானித்த பின்..,,  குளக்கட்டில்., வேகமாக ஓடி.., சாறனுக்குள் காற்று வாங்கி மூட்டையாய்க் கட்டிக் கொண்டு, அப்படியே சற்றும் பயமின்றி சின்னக்குளத்தினுள் பாய்ந்தான்.. சட்டெனத் திரும்பி நீந்தியபடியே..வந்து

டே சதக்கா வாடா..என்றான்.

நான் ஆயுதப்பொதியை தலையில் வைத்துக்கொண்டு., சாந்தமாமாவின் தோள்களில் ஏறினேன். கூச்சமாகவிருந்தது. வழுக்கியது.. ஆடியது.. பயமாகவிருந்தது. ஆனால் ஆனந்தமாகவிருந்தது.  சாந்தமாமா என்னை  காற்றுமூட்டையின் மேலுதைப்பு உபயத்தில்., மிக அநாயஸ்யமாக., சுமந்து சென்றான்..  இருபத்தினாலடி அகலத்தை நீந்திக் குறுக்கறுத்து அக்கரை அடைந்தான்..

நிண்டுக்க.. மத்தாக்கள ஏத்திட்டு வாரன்..

நான் சந்திரனில் முதலில் காலடி வைத்த பெருமையோடு  மறுகரையை நோக்கி கூச்சல் செய்தி அனுப்பினேன்.

கூ..ய்..ய்யா..  கூ..ப்பாடோ..ய்..என் செய்திக்கு சிலவிநாடி தாமதத்தின் பின்னர் குண்டன் பதில் கூப்பாடு அனுப்பினான்.

மெய்யா..மெய்..யா..   சாப்..பாடோ..ய்..

எங்கள் கூச்சலும் பதில் பரிமாற்றமும் தூரத்து மரங்களில் மோதி எதிரொலிகளாக எங்களை நோக்கி மறுபடி மறுபடி ஒலிக்க சண்முகம் தனியாக நீந்திக் கரையேறி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மாலைவெள்ளியைச் சமந்து கொண்டு சாந்தமாமாவின் கப்பல் வந்தது.  மாலைவெள்ளியை இக்கரையில் விட்டு குண்டனுக்காக மறுபடி சளைக்காது நீந்திச் சென்றான் சாந்தமாமா.. தனிமையைப்பயன்படுத்தி  மாலவெள்ளி என்னிடம்

டே.. சளிவாயா..! ஏன்டா நீ என்ன நக்குத்திண்ணி யெண்டு ஏசின.. நேத்து..?’ என்று யுத்தத்தை ஆரம்பித்தாள்.

அப்ப.. நீ ஏண்டி பொருக்கி !   என்டயப் பாத்து கறுப்பு எண்டு சொன்ன..?’

அதுக்குத்தான் பளம் உட்டுட்டேனடா..

போடி பொருக்கி..
;
போடா  வள்ளா..

நான் ஆத்திரமுற்று மாலைவெள்ளியின் மார்பில் கிள்ளிவிட்டேன்.. அவள் என் காற்சட்டையின் கிளிசல் நுனியைப் பிடித்து இழுக்க தடுமாறிக் கீழே விழுந்தேன்.. மறுபடி எழுந்து அவளைப் பிடிக்க மாலைவெள்ளி தடாலெனக் கீழே விழ  அவள் மீது  நானும் விழுந்து அவளை எழ முடியாதபடி  அவள் மீதே படுத்தேன்.. திடீரென ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது.. அவளும்  என்னை தள்ளி விட முயலாமல்  எனக்குக் கீழே படுத்தபடியே  என் முதுகைக் கட்டிப் பிடித்தாள்....என்னமோ ஒரு உணர்வில் சிறிது நேரம் அப்படியே  கிடந்தோம் -  அச்சமயம்  சண்முகம் வந்து சேர்ந்தான்.,,

அடியாய் சண்டய நிப்பாட்டுடிசண்முகம் குறுக்கிட்டு எங்களை விலக்கி விட்டான். அவன் எங்களை விலக்கியது எங்களுக்குப்  பிடிக்கவில்லை...மாலைவெள்ளி பொய்க்கோபமாக என்னைப் பார்த்து ..

“ஊட்ட  வாடா  வல்லா,,,ஒனக்கு செய்றன் வேல...” என்று  கறுவினாள்.. இரகசியமாக ஒரு வெட்கப் பார்வை பார்த்து...முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ... எனக்கும்...வெட்கமாக இருந்தது... “போடி..பொருக்கி ...” என்று  மெதுவாக நோகாதபடி ஏசிவிட்டேன்...

          சாந்தமாமா  கடைசியாகச் சுபைதாவுடன் வந்து   தொப்பலாகக் கரைசேர்ந்தான். சாரனை அவிழ்த்து முறுக்கிப் பிழிந்த பின் காய்ந்த களிசானைக்கட்டிக் கொண்டு ஆணையிட்டான்.

சரி  நடங்க..


௦௦ 

No comments:

Post a Comment