Monday, January 16, 2017

வக்காத்துக்குளம்-- 4

டதடவென வீரிட்டுச் சென்ற  ஒரு  மோட்டார் சைக்கிள் ஒலியால்  திடீரென  என்  எண்ணங்கள்  கலைந்தன... ஓஹ் ....எண்ணங்களின்  பாரம்  தாங்காமல் மெதுவாக  எழுந்தேன்.....சொந்த  ஊரில்  ஒரு  அந்நியனாக  உணர்ந்தேன்,,,

கடந்த காலங்கள் கனவுகளாகவே ஆகின்றன. சிறுபிராய அமைதிக் காலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடம் போல அவ்வளவு நீளமாக இருக்கின்றது.  இப்போதெல்லாம் ஒரு வருடம் என்பது ஒரு நாள் போலச் சுருங்கி விட்டது. யாரும் யாரையும் பற்றிக் கவலைப்படாது காலப்பெருவெள்ளத்தில் இழுபட்டுச் சென்று திக்கொன்றாகக் கரையேறும் மானுடப்படகுகளாய்  ஆன பின் யார் யாரைச் சந்திப்பது..?  பல வருடங்கள்  கண்ணிமைப்பதற்கிடையில்  எப்படிக் டந்து சென்றது.? புரியவில்லை.

“ஹ்ம் ....ஆ...எல்லாமே மாறிவிட்டன....” ஒரு  நீண்ட பெரு மூச்சுடன் எழுந்தேன்.. எங்கே  செல்ல...? ...ஒ... நான்  படித்த  வக்காத்துக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எங்கே....? அதையாவது  பார்க்கும்  உந்துதலில் ....எந்தப் பக்கம்  போக...? உத்தேசமாக கிழக்குப் பக்கம்  ஓடிய  ஒரு  கொன்க்ரீட் பாதையால் நடந்தேன்....சிறிது  தூரத்திலேயே சில  மாணவர்கள்  சீருடையுடன்  பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தனர்...ஒஹ்....மகிழ்ந்து  போய்  அவர்களிடம்  ஸ்கூல் இருக்கும்  இடத்தை  கேட்டுக் கொண்டு .நடந்தேன்...திடீரென மிகப் பிரமாண்டமான  வாயிற் கதவுகளுடன்  கமு/அல்- மிஹ்ராஜ் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) என்ற பெயர்ப் பலகை......

பற்பல  கட்டிடங்கள்...ஆயிரக் கணக்கில்  மாணவர்கள்....நூற்றுக் கணக்கில் ஆசிரியர்கள்...எவரையும் அடையாளம்  காண  முடியவில்லை  என்னால்....பழைய  அடையாளம்  ஒன்று  கூட  இல்லை....அவ்விடத்திலேயே திகைத்துப் போனவனாக  நின்று கொண்டிருந்தேன்......

ஒ..!. இவ்விடத்தில்  இருந்த வக்காத்துக்குளம் அரசினர் முஸ்லிம் தமிழ்  கலவன் பாடசாலை  எங்கே...? பக்கத்தில்  இருந்த  குண்டனின்   வீடு எங்கே...? மாலைவெள்ளி யின்  குடில்  எங்கே...? புளியமரம்....? சாந்தமாமா வசித்த  போடியாரின்  கல்வீடு...? ஓ..ஹ்....
          தினமும் பாடசாலை விட்ட பின்னர் ஒவ்வொரு மாலைவேளையிலும் எங்கள் விடுமுறை காலங்களிலும் சாந்தமாமா கற்பித்த விளையாட்டுக்கள்தான் எத்தனை.. அவனுக்கு என்ன விளையாட்டுத்தான் தெரியாது.. 
கண்ணாண்;டே  புண்ணாண்டே.. கறிக்கோப்பே..கோளி முட்டே.. உடயா..?’
 சாந்தமாமா கத்திக் கேட்டதும்  நாங்கள்  ஆலிமுபெண்டியின் ஆல வீட்டுக்குள் ஒழிந்து கொண்டோம். சரி உடூவ்..என்று குண்டன் குரல் கொடுத்ததும்  சாந்தமாமா கண்களைப் பொத்தியபடியே ஆலவீட்டுக்குள் நுழைந்து எங்களை இருட்டில் தேடினான்.  நாசமாய்ப்போன மாலைவெள்ளியின் தும்மலால்  அரைமணியில் அனைவரையும் கண்டுபிடித்து விட்டான்.
 சிலகாலம் தெத்திக்கோடுவிளையாட்டில்  காலம் தள்ளினோம். திட்டி மணலில் நீள் சதுரக் கோடுகளால் எட்டுச் சதுரங்கள் வரைந்து  உடைந்த பிங்கான் ஓட்டுக் காய் எறிந்து தத்திச் சென்று முள்ளி பார்த்துரைட்டா..? ரைட்டா..?’ கேட்டு  துள்ளித் திரும்பிää தத்தி வந்து பாய்ந்து பழம்எடுத்து  எப்போதும் எங்களை  சாந்தமாமா வென்றான்.
 நோன்பு காலங்களில்  மணலில் கட்டம்கட்டி பேரீச்சம் பழக் கொட்டைகளை எறிந்து  குழிக்குள் விழச் செய்து  கய்யானால் குறி தவறாது அடித்து எங்களை இலகுவாக வென்றான். கறுத்தம்மாவின் பாழ்வளவுக்குள்  எங்கள் அனைவரையும் ஒரே படையணியாக்கி மாலைவெள்ளியை மட்டும் தன் பக்கம் வைத்துக் கொண்டுவார்தொடுத்து  ஓடி எங்களைப் போரில் தோற்கடித்தான்.  கோணல்குட்டி  விளையாடி  எப்போதும் நூறு எடுத்து எங்களுக்குப் பாட்டம் கொடுத்தான்..  தானும் கூடவே

ஆலையிலே..சோலையிலே..
ஆலம்பாடிச் சந்தையிலே..
குட்டிப் பொல்லும் பம்பரமும்
கிறுக்கியடிக்கப் பாலாறு..
பாலாறு.. பாலாறு..பாலாறு..ஊஊஊஊஊ..
என்று ஆயிரம் தடவைகள் பாடி எங்களோடு ஓடிவந்தான். கமறுன் பள்ளி வெட்ட வெளியில் எங்களைக் கூட்டிப் போய் புள்ளிப்பீங்கான் விளையாடப் பழக்கினான்..  எதிராளியை உள்ளே வரவிட்டு  மறித்து  பாட்டுப்பாடி சிறைப்பிடித்தான்.
மாக்கறுப்பி.. ரூப்பி
மம்முறாயின்   சூப்பி..
கிட்டப் படுடா.. கிழட்டு வடுவா..
ஓ..குச்சுப்பெட்டி..நெருப்பெட்டி….குச்சுப்பெட்டி..நெருப்பெட்டி..
          பெருநாள் முடிந்த அடுத்த நாள் ஆத்தப்;பாவின்  செத்தைக் குடிலுக்குள்  சீனசர்க்கஸ்  கம்பனி’  நடத்தினான். தேங்காய்ச் சிரட்டைகளில் ஓட்டையிட்டு அதனூடாக கயிறு இழுத்து அதன் மீது ஏறி நின்று கொண்டுடவுக்கு..டவுக்குஎன்று  குதித்துக் குதித்து குதிரையாட்டம் காட்டி வியக்க வைத்தான்.  உயரமான பலமான தடிகளில்  கயிறுகட்டி அவற்றின் மீது  ஏறி நின்று கொண்டு பத்தடி உயர மனிதனாக பொய்க்காலில் நடந்து காட்டி திகைக்க வைத்தான்.. அடுத்த காட்சியாக  ஒட்டுமீசை தாடியுடன் தொளதொள அங்;கியணிந்து ஓரங்க நாடகத்தின் தனிப்பெரும் கதாநாயகனாகி ஒரு நாளும் கேள்விப்பட்டிராத பாடலை எழுதி இசையமைத்து பாடி மயக்கினான்.

வீறான் வீறான் தோட்டத்திலே
வறுத்துப் போட்டானாம் பள்ளிக் காக்கா
வாசிக்கு  கொண்ட வெட்டச் சொல்லி
வாயில போட்டானாம் முல்லக்காரன்..
இத்யாதி கதைவசனம் பாடல் காட்சிகளால்   ‘சர்க்கஸ்’  பார்க்க  சிறுவர் கூட்டம் அம்மியது.  எனவே என்னையும் குண்டனையும் டிக்கட்’; கருமபீடம் அமைத்து  வசூல் செய்வித்து ஒரே நாளில் இரண்டு ரூபா முப்பது சதம் சம்பாதித்தான். நிகர இலாபத்தில்  எனக்கும் குண்டனுக்கும் தலா இருபது சதமும் சிறுமிகளுக்கு தலா ஐந்து சதமும் கொடுத்தான்.


௦௦ 

No comments:

Post a Comment