Monday, January 16, 2017

வக்காத்துக்குளம் -5

௦௦
05



ட்ரீங்க் ட்ரீங்க் ட்ரீங்க் ட்ரீங்க்...............”

          கர்ணகடூரமாக  ஒலித்த  பாடசாலை  மணியில்  கவனம்  கலைந்தேன்...ஒஹ்..... காலக் குதிரைக்கு என்னதான்  வேலை..? மூச்சிரைக்க மூச்சிரைக்கப் பாய்ந்து செல்வதைத் தவிர..? தொழில் தேடல்கள்.. பணத் தேவைகள்.. சம்பாதிப்புகள்..... எல்லாம் சம்பாதித்தாகி விட்டது...அதற்கு  விலையாக இளமையை-அமைதியை   கொடுத்தாயிற்று.....

இனி  எங்கு  செல்ல....? யோசனையுடன் திரும்பிய போது திடீரென தலைக்கு மேலால் இள நீல  வர்ணத்தில் பறந்து சென்றது  ஒரு  பறவை....ஒஹ்...இதென்னா  வக்காப் பறவையா...... .அட..  அந்த  வக்காத்துக் குளம் இப்பவும்  இருக்குமா...இதிலிருந்துதானே  இந்த  ஊருக்கும்  இந்தப் பெயர் வந்தது..... .ஆர்வம்  உந்தித் தள்ள .. கரைவாகு வயல் வெளிகள்  இருக்கும்  என  நான்  உத்தேசித்த்  திசையில் மெதுவாக  நடந்தேன்..... வக்காத்துக்குளத்தை காண மிக வேட்கைப்பட்டேன்..........


மூன்றாம் தவனைப் பரீட்சை முடிந்த கையோடு கிடைத்த விடுமுறையில் ஒருநாள் எங்களது கனவுப் பள்ளத்தாக்கான வக்காத்துக் குளத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு    சாந்தமாமாவை நாங்கள் பலதடவைகள் வற்புறுத்தியிருந்தோம்.  நாங்கள் இன்று பின்னேரம் ஆத்தப்பாவின் செத்தைக் குடிலுக்குள் கல்யாண வீடு சோடனை செய்து மாப்பிள்ளை எடுப்பு பெண்அழைப்பு என்று  முழுமூச்சாக விளையாடிக் கொண்டிருந்த போது  திடீரென சாந்தமாமா வந்தான். தனது இறுதி முடிவை அறிவித்தான்.

டே..ய்வாங்கடா..இப்ப ஒரு வெசயம் சொல்லயா..?’

சொல்லு..

நாம நாளக்கி வக்காத்துக் குளம் போற..டோவ்..!

ஹோ..வ்..

நாங்கள் மகிழ்ந்து கூச்சலிட்டோம்.   உள்ளே மணப்பெண்’  அலங்கரித்துக் கொண்டிருந்த கொண்டிருந்த சிறுமிகள் ஒடி வந்தனர்.

சாந்தமாமா..சாந்தமாமா. நீ இப்ப இவனுகளுட்ட என்ன சொன்ன..?  நாங்களுமா..?’

வக்காத்துக் குளத்துக்க நாளக்கிப் போற.. நீங்களுந்தான்..

_..ய்ய.ய்ய்.சிறுமிகள் கூச்சலிட  நாங்கள் கோபமுற்று,

ல்ல சாந்தமாமா..,   பொண்டுகள் வேணா..என்று உடன் மறுதலித்தோம்.

ஏண்டா..?’

ல்ல சாந்தமாமா.. நாங்க அவளுஹளோட அத்தம்;’  உட்டிருக்கம்.  ஒரு கௌமைக்கிப் பேசற ல்ல..

ச்சே.. அத்தம் உட்ட தோசி.. நாலுபணக் காசி.. கடலுக்க மாசி..’  மாலைவெள்ளி எங்களைப் பழித்தாள்.

                        சாந்தமாமா எங்களைச் சமாதானப்படுத்தி..,  இருபக்கத் தூதுவனாகி..,  எங்கள் நிர்வாணத்தை அவர்கள் பார்த்ததை பாடசாலையில் யாருக்கும் சொல்லமாட்டார்கள் என்ற உறுதி மொழி பெற்றுக் கொடுத்த பின்னர்.. சிறுமிகளோடு,  சின்னிவிரல் தொட்டுபழம்விட்டு  இணங்கினோம்.

                        அடுத்தநாளே  எமது  பெற்றோருக்குத் தெரியாமல் திட்டம் அமுலாகியது. வக்காத்துக் குளத்துக்குச் செல்ல பட்டிப்பளை ஆற்றைக் கடக்க வேண்டும். எங்களால் தனியாக முடியாது. சாந்தமாமாவால் எங்களைக் கொண்டு சேர்க்க முடியும். வக்காத்துக் குளத்துக்கு முன்னர் இரு தடவைகள் களவாகச் சென்று வந்திருக்கிறோம். ஆ..என்ன அழகான இடம்.. கண்கள் நிறையக் கனவுகளுடனும் புது உற்சாகம் கரைபுரண்டோட சாந்தமாமா தலைமையில் நடந்தோம். கூளம் விதானையின் தென்னந்தோப்பினூடே ஊடறுத்து நடந்தோம்.

          ஆயிரத்தெண்ணூறு தென்னைமரங்கள்.. அடர்ந்த குளிர்நிழல்.. குவியல் குவியலாக தேங்காய் உரி மட்டைகள்.. தேங்காயக் குவியல்கள்.. மரத்துக்கு மரம் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் கயிறுகள்.. தும்புக் கும்பங்கள்.. தொழிலாளர்கள்....... கடந்து நடந்தோம்.

தோப்பின் தரையெல்லாம் பச்சைக் கம்பளமாய் புற்கள்.. காட்டாமணை செடிப் புதர்கள்.. தொட்டாற்சுருங்கிப் படரிகள்.. பிரப்பம் பற்றைகள்.. எரிந்து கரியாய்க் கிளம்பி வரும் நாணல் இலைகள்.. ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதை.. நடுநடுவே நெடிதுயர்ந்த வம்மி மரங்கள்.. மர அடிகளில் இளஞ்சிவப்புப் பந்துகளாய்  அதன் பூக்கள்.. கடந்ததும்  வரிசையாக  பூஞ்சணமரங்கள்.. இலையை ஒடித்து சுருட்டி ஊதினால்  ‘பீ..ப்பீ..ப்..பென்ற இலவச நாதஸ்வர ஓசை.. அடிமரத்தில் பட்டைபட்டையாக  அப்பியிருக்கம் மயிர்க்கொட்டிப் புளுக்கள்.. பார்த்தாலே தலைமயிர் சிலிர்த்தெழும்..  

ஒற்றையடிப் பாதையின் குறுக்காக மறித்து கிளைகளை நீட்டிக் கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள்.. அதன் ஊதா மஞ்சள்.., சிவப்பு வர்ணங்களில்  ஒலிவாங்கிப் பூக்கள்.. வழிநெடுக  நீலநிற வண்டுகளின்வ்வ்வ்வ்வென்ற ஒலியலைகள்..

          நெடிதுயர்ந்தும்,  கிளைகளை அகல விரித்தும்  நறுபுளி மரம்.. அதன் சளி நிறைந்த பழம்.. இளம்சிவப்புக் கலரில்  ஒதக்காய்கள் விழுத்திக் கவரும் கோமாப் புளிமரம்.. சாப்பிட்டால் வாய் நிறைய இனிப்பும்புளிப்புமாக சாறு.. சின்னச்சின்ன ஈர்க்குச்சி இலைகளுடன் காட்டீச்சை மரங்கள்.. அங்குமிங்குமாய்..  நூற்றுக் கணக்கில் பயணிக்கும் தும்பிகள்.. அடர்கிளைகள் பரப்பிய அலரிமரங்கள்.. அவற்றின் சிறிய கூம்புகூம்பான இலைகளின் அடியில் தங்கக் கலரில் தொங்கும் கூட்டுப்புளுக் கூடுகள்.

.         பற்றைபற்றையாக  நாகதாளி..,  குறிஞ்சா, மாம்பாஞ்சான்,  கொத்தான வெள்ளைப் பூக்களுடன் சிரிக்கும், நெருஞ்சிமுட்புதர்கள்.. எல்லாம் கடந்து நடந்தால்...  சரிவாக இறங்கிச் செல்லும் நிலம்.. கிடுகிடு பாதாளம்.. அப்புறம் சமவெளி.

சாந்தமாமா தலை வகித்து திகில் கதைகள்  சொல்லியபடியே முன்னால்  நடக்க நாங்கள் எல்லோரும் தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவரின்  சட்டையை அல்லது காற்சட்டையைப் பிடித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தோம். அப்படியே   ரயில் பெட்டிகளாக ஆகி  கிடுகிடு சரிவு நிலத்தில்  மெதுவாக  இறங்கி குச்சுக்குச்சென ஓடினோம்.. ரயில்பாட்டைப் பாடியபடியே............

குச்சுக் குச்சு ரயில் பெட்டி.. கூ..வ்வ்வ்என்று  கூவினேன்.

கூடப் பர்ரா  கடப்படி.. கூடப் பர்ரா  கடப்படி..’  என்றான் சண்முகம்.

கஞ்சிவடி.. கஞ்சிவடி.. கூ..வ்வ்வ்வ்..மாலைவெள்ளி.

அஞ்சிபிடித் தங்க மாலே.. அஞ்சிபிடித் தங்க மாலே..  ஜிக்குப்புக்கு. ..ஜிக்குப்புக்கு.............கூவ் .பார்வதி.

திட்டுமண்..திட்டுமண்.. திட்டுமண்..திட்டுமண்..சுபைதா.

குட்டுமன்..  குட்டுமன்..  கூ..ஊ..ஊ..ஊ..

ரயில்  சரிவில் இறங்கி  சமதரை அடைந்தது.  மூச்சிரைத்தது. நெடுநெடுவெனப் புளியந்தோப்பு..  புற்றரையில் சற்று இளைப்பாறினோம்.

புளியம்பளம் வேணுமா..?”

என்று கேட்ட சாந்தமாமா படீர்படீரெனää  காய்ந்த சில பலமான தடிகளை முறித்தான்.  அவற்றை முக்கோண வடிவில் மரநாருரிகளால் இறுகக்கட்டினான். கூடவே  பாரத்துக்காகச் சில கற்களையும் கட்டினான். தூரச் சென்று ஓடிவந்து தனது விஸித்திர ஆயுதத்தால், புளிய மர உச்சியை இலக்கு வைத்து வேகமாக எறிந்தான்.. சற்று நேரத்தில்.., காய்ந்த புளியம்பழக் குலையொன்று.., சுமார் முப்பதடி உயரத்திலிருந்து.., எங்களை நோக்கிச் சிதறி விழுந்தது. ஓடுகள் வெடித்த அந்தப் புளியம்பழங்கள்.. ஆ.. புளியினிப்பு.. ஆ..!  மாலைவெள்ளியும்.. பார்வதியும் மடி நிறையக் கட்டினர்.


புளி....புளி.. என்ன புளி..?’ பார்வதி கூவினாள்.

பளப் புளி..மாலைவெள்ளி பதில் கூவினாள்.

என்ன பளம்..?’

புளியம் பளம்..

என்ன புளி..?’

பளப் புளி..!


No comments:

Post a Comment