Saturday, October 28, 2023

வக்காத்துக் குளம்-- முழுக் கதை

 

வக்காத்துக் குளம்

தீரன்’.  ஆர்.எம். நௌஸாத்.

 

 

            னடாவிலிருந்து நான் இலங்கைக்கு..என் சொந்த ஊரான வக்காத்துக் குளத்துக்கு பிள்ளை குட்டிகளோடு சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின் திரும்பி வந்ததும் உடனடியாகச் சந்திக்க விரும்பியது  சாந்தமாமா என்று  அப்போது  அழைக்கப்பட்ட என் பால்ய காலத்து  நண்பனைத்தான்... முடிந்தால் .... சண்முகம், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா.....ஒ....என்னருமை  குண்டன்..............எல்லோரையும்  சந்திக்க வேண்டும்....

 

     வக்காத்துக் குளத்திலிருந்த என்  தந்தையாரின்  வீடு வளவு  ஒன்றை  விற்கும் வேலைக்காக சில படிவங்களில் நான்  ஒப்பமிட வேண்டியிருந்தது... என் சொந்த  ஊரை  என்  மனைவி-பிள்ளைகளுக்கும்  சுற்றிக் காட்டவும் ஆவல் கொண்டு  அவர்களையும்  அழைத்து  வந்திருந்தேன்... மொத்தமே மூன்று  நாட்கள்தான்  இங்கு தங்க முடியும்,,,அவ்வளவு  இறுக்கமான நிகழ்ச்சி நிரல்கள்  என்னிடமிருந்தன...

 

நான் தங்கியிருந்த வீட்டுக்கார  உறவினர்களிடம் ஒப்பந்தப் பத்திரங்களை  துரிதமாகத் தயாரிக்கச் சொன்னதோடு கூடவே... சாந்தமாமா சண்முகம், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா,.. குண்டன்...ஆகியோரின் விபரங்களைச் சொல்லி  என்னை  வந்து  சந்திக்க ஏற்பாடு செய்யவும்  சொல்லி விட்டேன்........மாலைவெள்ளியை நெடுங்காலத்துக்குப் பிறகு  சந்திக்கப் போவதை எண்ணி  மனம் இந்த  வயதிலும்  குறுகுறுத்தது பெத்தம்மாவை  நினவு  வைத்திருப்பாளோ.....

 

     அதற்கிடையில் ஊரைச் சுற்றிப் பார்க்கும்  ஆவல்  மீக்குறவே, சட்டென்று  வெளிக்கிட்டு விட்டேன்  கால் நடையாகவே  ஒரு  வலம் வரலாம்  என்று  வெளிக்கிட்டேன்.. மனைவி –பிள்ளைகளை கடற்கரை பார்க்கச் சொல்லி மகனுடன்  காரில்  அனுப்பிவிட்டு- தனியாக கேசுவலாக  சாரமும் கை பெனியனும்  அணிந்து  கொண்டு  வீட்டை விட்டு  புறப்பட்டேன் ..ஆனால்...,  நான் வாழ்ந்த தொன்மை மிக்க அமைதியான  என்  ஊரைக் காணவில்லை..

 

வக்காத்துக்குளம்  இப்போது நகரமாகி விட்டிருந்தது.. :”வக்காத்துக்குளம் மாநகர சபை உங்களை  வரவேற்கிறது!”   என்ற  வளைவுத் தோரணம் வேறு.... .சாந்தமாமா   இந்த  நகரத்தில்  அல்லது  நரகத்தில்  எங்கே  இருக்கிறானோ...? அல்லது  அன்றே  ஊரைவிட்டு சென்றவன் திரும்பி வரவில்லையோ...தெரியாது...  .பரவாயில்லை... விசாரித்துக் கொள்ளலாம்...

 

ஊரை  எனக்கும்... ஊராருக்கு  என்னையும் அடையாளமே தெரியவில்லை ...சும்மா  குத்து  மதிப்பாக மேகுப் பக்கமிருந்த  வயல் வெளியை நோக்கி நடந்தேன் ...அங்கேதானே  பெருக்கெடுத்தோடும்  பட்டிப்பளை  ஆறு இருக்கும்... தென்னம் தோப்புகள்...இருக்கும்....இருக்குமா...?

 

     ஆயிரத்தெண்ணூறு தென்னைமரங்கள்.. அடர்ந்த குளிர்நிழல்.. குவியல் குவியலாக தேங்காய் உரி மட்டைகள்.. தேங்காயக் குவியல்கள்.. மரத்துக்கு மரம் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் கயிறுகள்.. தும்புக் கும்பங்கள்.. தொழிலாளர்கள்........ தோப்பின் தரையெல்லாம் பச்சைக் கம்பளமாய் புற்கள்.. காட்டாமணை செடிப் புதர்கள்.. தொட்டாற்சுருங்கிப் படரிகள்.. பிரப்பம் பற்றைகள்.. எரிந்து கரியாய்க் கிளம்பி வரும் நாணல் இலைகள்.. ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதை.. நடுநடுவே நெடிதுயர்ந்த வம்மி மரங்கள்.. எங்கே இவைகள்...?

 

மர அடிகளில் இளஞ்சிவப்புப் பந்துகளாய்  அதன் பூக்கள்.. கடந்ததும்  வரிசையாக  பூஞ்சணமரங்கள்.. இலையை ஒடித்து சுருட்டி ஊதினால்  பீ..ப்பீ..ப்..பென்ற இலவச நாதஸ்வர ஓசை.. அடிமரத்தில் பட்டைபட்டையாக  அப்பியிருக்கம் மயிர்க்கொட்டிப் புளுக்கள்.. பார்த்தாலே தலைமயிர் சிலிர்த்தெழும்..

 

 ஒற்றையடிப் பாதையின் குறுக்காக மறித்து கிளைகளை நீட்டிக் கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள்.. அதன் ஊதா மஞ்சள்.., சிவப்பு வர்ணங்களில்  ஒலிவாங்கிப் பூக்கள்.. வழிநெடுக  நீலநிற வண்டுகளின்வ்வ்வ்வ்வென்ற ஒலியலைகள்.. எங்கே இவைகள்...?

 

      நெடிதுயர்ந்தும்,  கிளைகளை அகல விரித்தும்  நறுபுளி மரம்.. அதன் சளி நிறைந்த பழம்.. இளம்சிவப்புக் கலரில்  ஒதக்காய்கள் விழுத்திக் கவரும் கோமாப் புளிமரம்.. சாப்பிட்டால் வாய் நிறைய இனிப்பும்புளிப்புமாக சாறு.. சின்னச்சின்ன ஈர்க்குச்சி இலைகளுடன் காட்டீச்சை மரங்கள்..

 

 அங்குமிங்குமாய்..  நூற்றுக் கணக்கில் பயணிக்கும் தும்பிகள்.. அடர்கிளைகள் பரப்பிய அலரிமரங்கள்.. அவற்றின் சிறிய கூம்புகூம்பான இலைகளின் அடியில் தங்கக் கலரில் தொங்கும் கூட்டுப்புளுக் கூடுகள்.. பற்றைபற்றையாக  நாகதாளி..,  குறிஞ்சா, மாம்பாஞ்சான்,  கொத்தான வெள்ளைப் பூக்களுடன் சிரிக்கும், நெருஞ்சிமுட்புதர்கள்.. எல்லாம் கடந்து நடந்தால்...  சரிவாக இறங்கிச் செல்லும் நிலம்.. கிடுகிடு பாதாளம்.. அப்புறம் சமவெளி............................. எங்கே,,. எங்கே... இவையெல்லாம்...?

 

     ஒன்றையுமே  காணவில்லை.....எங்கே  இவையெல்லாம்...? தெரிந்ததெல்லாம் மாடிவீடுகள்... மாடிவீடுகள்,,,வீடுகள்....கட்டிடக் காடுகள்தாம். என் நெஞ்செல்லாம்  விரக்தியும்...அந்நிய உணர்வும்... பரவின... இவற்றைப் பார்க்கச் சகிக்காமல் மெதுவாக  அங்கெ  கிடந்த  ஒரு கொன்க்ரீட் கல்லில் உடக்கர்ந்து கொண்டேன்... என்னை  யாருக்கு  அடையாளம்  தெரியப் போகிறது.... ஏதேதோ  எண்ணங்கள்.......எங்கே  அந்த  சொர்க்க பூமி....?  எங்கே  அந்த  உயிர்ப்புள்ள   நந்தவனம்...? எங்கே  என்  வக்காத்துக்குளம் ...?

 

பட்டிபளை ஆறு  பெருக்கெடுத்தோடிய  இடத்தில் ஒரு  சிறு  கால்வாய் நாற்றக் கழிவுகளுடன்  ஊர்ந்து  கொண்டிருந்தது.....வயல்வெளி  முழுக்க குடியேற்றத் திட்டங்கள் போட்ட தொடர் மாடிக்குடியிருப்பு எச்சங்கள்...நகரமயமாக்கலின் ஆரம்ப  வாந்திகள்.... எங்கே  என் கிராமம்...? யார் யாரோ  அந்நிய  மனிதர்கள்...? எங்கே  என்  நண்பர்கள்.... சண்முகம், குண்டன், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா.....ஒ....என்னருமை  சாந்தமாமா..!... சாந்தமாமா.?

 

௦௦

 

 

சாந்தமாமாவைப் பற்றி  உங்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும்.  நான் சொல்லப்போவது  வானத்தில் வந்து வனப்பூட்டுமே.. அந்தச் சாந்தமாமாவைப் பற்றியெல்லாம் இல்லை.. 1968களில்  எங்கள் கிராமத்தில் சும்மா சுற்றித் திரிந்த  சாந்த எனப்படும் மாமாவைப் பற்றி.!

 

 எமது இளம்பிராயத்தின்  அமைதிக்காலத்தின் அசகாய கதாநாயகன் அவன்தான்.  சதக்கா எனப்படும் நான், சண்முகம், குண்டன், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா  ஆகிய எமக்கு அவன்தான் வழிகாட்டி... விளையாட்டுத் தோழன்..... பாதுகாவலன்....... முதலான எல்லாமும். அந்தக் காலத்தில்  அவனில்லாமல் நாங்களில்லை. எம்மைப் பொறுத்தவரைக்கும், சாந்தமாமாவுக்கு தெரியாத விஸயமே இந்த உலகத்தில் இல்லை.  எல்லாம் அவனால்முடியும்.


        சாந்தமாமா எங்களை விட வயதிலும் உருவத்திலும் சற்றுப் பெரியவன். சாந்தமாமா என்று ஏன் அவனைக்  கூப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.   அவன் மிகக் கறுப்பு நிறத்;தவன்.  அவனது கறுத்த இடது மார்பில் சிங்கள மொழியில்  ‘சாந்தஎன்று பச்சை குத்தப்பட்டிருந்தது.  அதை வாசிக்க அவனுக்கும் தெரியாது. யாரோ வாசித்துச் சொல்லியதைச் சொல்லிக்கொண்டிருந்தான்.  சிங்களம் அவனுக்கு ஒன்றும் தெரியாது.  நாங்கள் அவனை அறிந்த காலமெல்லாம்ää அவன் எங்களோடுதான்  வாழ்ந்தான். எப்படியோ தமிழில் மூன்றாம் வகுப்புப் படித்திருந்தான்.

 

அவனது பெயர் சாந்த என்பதும்அவனை ஒரு சிங்களத் தாயிடமிருந்து   எங்கள் கிராமத்தின் கலலூட்டுப் போடியார்  ஐந்து ரூபாய்க்கு வாங்கியிருந்தார் என்றும்  கண்ணாரப்பெரியான் என்னிடம் சொல்லியிருந்தான்.. கல்லூட்டுப் போடியாரின் வீட்டில் அவனை  பிள்ளைகள் சாந்தமாமா என்றுதான் அழைத்ததால் கிராமம் முழுக்க  எல்லோருக்கும்  வயதுவேறுபாடின்றி  அவன் சாந்தமாமாதான்.

 

அவனுக்கு நிரந்தரமாக ஒரு வசிப்பிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் கல்லூட்டுப் போடியின் வீட்டில் வெளி முற்றத்தில் படுத்துறங்குவான்.  அவரது எடுபிடி ஆளாக இருந்தாலும்  சர்வ சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்.


      பக்கத்து நகரத்துக்குச் சென்று சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் வாங்கி வருவான். எம்ஜீஆர் படப்பாடல்களை மனப்பாடத்தில் பாடிக்காட்டி நடிப்பான். உயர்ந்த  தடிகளில் ஏறி பொய்க்கால் நடந்து காட்டுவான்.  கூளம் விதானையின் தென்னந்தோப்பில் களவாக ஏறி  இளநீர் பிய்த்துப் போடுவான்அவனிடம் எத்தனையோ திறமைகள்..  நான் சன்முகம்,குண்டன், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா  ஆகியோரோடு மட்டும் சாந்தமாமா சற்றுக் கூடுதலான ஒட்டுறவாக இருந்தான்.

௦௦

 

      இப்படித்தான் ஒரு நாள் வீட்டாருக்குத் தெரியாமல், சாந்தமாமாவோடு  பட்டிப்பளை ஆற்றங்கரைக்கு குளிக்க வந்திருந்தோம். பட்டிப்பளை ஆறு எங்கள்  கிராமத்தின் பொக்கிஷம்..கிராமத்தின்  ஒதுக்குப் புறமாக இருந்த  ஆயிரத்து  இரு நூறு  ஏக்கர்  வயல்கரைகளை  அண்மித்து உற்சாகமாகக் கரை புரண்டு ஓடும் ஆழமான  நதி,,,

 

ஆற்றின் இரு புறமும் அடர்ந்த  மூங்கில் புதர்கள்,,,இக்கரையில் மாபெரிய அரசமர விருட்சம்,,,,மன்ஜோனா மரங்கள்,,,அரச மரங்கள்...பல நூறு தென்னைகள்....ஆ...ஒரே  பசுமை... மேலே வெப்பமும்  உள்ளே குளிர்ச்சியுமான  அதிசய நீரோட்டம்...எப்போதும் குளித்துக் கொண்டிருக்கும்  பெரியவர்கள்...மாடு கழுவும் ஆட்கள்... சலவைத் தொழிலாளர்களின்  பாரிய  முண்டுக் கற்கள்... அதில்  ஷ்ஷப்பாஹ்... ஷ்ஷப்பாஹ்.. ஷ்ஷப்பாஹ்...என்ற  சப்தமாய்  வெளுக்கப்படும்  ஆடைகள்.....

 

ஆற்றில்  குளிக்க சிறுவர்களுக்கு  அனுமதி  கிடையாது...பெரியவர்கள்  உடன் வந்தால்  மட்டுமே  குளிக்கலாம் ....ஆயினும்  பெரியவர்கள்  வராத  ஒரு  இரண்டு மணி வாக்கில் சாந்தமாமாவை மட்டும் நம்பி  நாங்கள் வந்திருந்தோம்.......  எங்கள் உற்சாகமும் பட்டிப்பளை ஆற்று நீரும் பெருக்கெடுத்தோட  நாங்கள் தயாரானோம்..வழமையாகக் கேட்பது போல நாங்கள் சத்தமிட்டு கத்திக் கேட்டோம்..

 

சாந்தமாமா...எங்கே போறாய்..?’

 

சாந்தமாமா தன் சாரனை அவிழ்த்து சரியாகத் தார்ப்பாய்ச்சிக் கட்டியபடி தரையில் சிறிது தூரம் ஓடி அதற்குள் காற்றுவாங்கி சட்டென சாரத்தை மடித்துக் கட்டி,,, ஒரு பெரிய  காற்றுப் பந்தை  சாரனுக்குள் அடக்கி  அப்படியே.... குளக்கட்டால்.. ஓடி

 

மாட்டுக்குப் போறே..ன்.

 

என்று கத்தியபடியே  அரசமர வேரடியிலிருந்து உயரப்பாய்ந்து ஒரு தலைகீழ்க்கரணம் அடித்து உடல் குறுக்கிப் பட்டடிப்பளை  ஆற்றில் சுள்ளீரெனத் தண்ணீர் கிழித்துப் பாய்ந்து  நீருக்குள் புதைந்து மறைந்தான்.  வெகுநேரம் அவனைக் காணாமையால்..... நாங்கள் பயந்து போய் நிற்க... ஆனால்... சட்டென,,  நட்டாற்றில், உடலை உருளையாக்கி  நீருக்குள் சுழன்றடித்து, எழுந்து.. தலையைச் சிலிர்த்து.. எங்களைப் பார்த்துச் “ஹூ..ஹூ..”வென்று சிரித்தான்.  பின் சட்டென்று, அப்படியே நீர் மீது அந்தரத்தில் பாய்ந்து,,  தலைகீழாகச் சென்று மறைந்தான்.. தாமதித்து தலைநீட்டி எங்களை வாய்பிளக்க வைத்தான். நாங்கள் ஆறு பேரும் குளத்தங்கரையில்,,  நின்றபடியே..  அவனை நோக்கி உரத்துக் கத்தினோம்..

 

சாந்தமாமா.!  எங்க போறாய்..?’

 

மாட்டுக்குப் போறே..ன்..என்று பதில்கத்திவிட்டு நீரில் மூழ்கினான்.

 

மாடு என்னத்துக்கு..?’

 

மாட்டுப்பீ எடுக்க..’  மேலெழுந்து கத்தி விட்டு மறைந்தான்.

 

மாட்டுப்பீ என்னத்துக்கு..?’

 

ஊடு மொளுக..

 

ஊடு என்னத்துக்கு..?’

 

புள்ளப் பொற..

 

புள்ள என்னத்துக்கு..?’

 

எண்ணக்கொடத்துக்க துள்ளிப்பாய..!

 

என்று கத்திய சாந்தமாமா ஆற்று நீரைக் கிழித்தபடியே சற்று கரைக்கு வந்து.. குளக்கட்டின் அருகே நின்றுகொண்டு

 

 

மொதல்ல நீ பாய்ரா குண்டா..!என்றான். குண்டன் முன்பின் யோசிக்காமல்  சாந்தமாமா இருந்த தைரியத்தில்  அப்படியே களிசானை உதிர்த்து விட்டு..தொபுக்கெனப் பாய்ந்தான்.  சாந்தமாமா அவனைத் தாங்கி தண்ணீரில் மிதக்க விட்டான். பின்  எதிர்பாராதவிதமாக சண்முகம் பாய்ந்தான். சண்முகம் நீந்தத் தெரிந்தவன்.. பின்.. என்னைப் பார்த்தான்..

 

டே.. சதக்கா...  நீ பாயண்டா..”  என்றான்.


நான் பக்கத்தில் சிறுமிகள் இருந்ததால் என் களிசானைக் கழற்ற வெட்கப்பட்டு  தயங்கினேன். தண்ணீருக்குள்ளிருந்து   மூவரும் டே..சதக்கா! பாய்ரா.. பாய்ரா.. பாய்ரா!என்று கத்தவே  மாலைவெள்ளியும் பார்வதியும் சுபைதாவும்  நாயுண்ணிப் பூக்கள் பறிக்க ஓடிய திடீர் சந்தர்ப்பத்தில்  நானும் களிசானைக் கழற்றிவிட்டு குஞ்சாமணியைப்   பொத்தியபடி குளக்கட்டில் வேகமாக ஓடி வந்து   அரசமர அடிவேரிலிருந்து  ஹா.............என்று கத்தியபடியே பாய்ந்தேன்..

 

      பின்னால் நாயுண்ணிப் பற்றைக்குள்ளிருந்து சிறுமிகள் கிக்கிக்கிலீரெனச் சிரிப்பது  தண்ணீருக்குள் கனவு போலக் கேட்டது..  தண்ணீரின் அடியிற் போய்  முக்கித் திரும்பி உந்தி எழுந்து  விரைவாக மேலெழுந்து  பார்த்தேன்..  கரையில் நின்று கொண்டு சிறுமிகள் என்னைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தனர்..

 

;டே..சதக்கா.. நீ ஓடி வரேக்க பொறகால ஒன்ட சூமட்டியப் பாத்துச் சிரிக்காளுஹள்ளோவ்..

 

என்றான் குண்டன்.. எனக்கு அதீத வெட்கமாகப் போய்விட்டது..  கேளாதவன் போல் மறுபடி தண்ணீருக்குள் மூழ்கினேன்..  சுழியோடி நீரடியில்... சிறிய வட்டக் கற்கள் பொறுக்கி மேலெழுந்து வந்து அவர்களை நோக்கி எறிந்தேன்.. சிறுமிகள் ஓட...  சன்முகமும்...  குண்டனும்..  நீரின் மேற்பரப்பில்...  மல்லாக்க நீந்தியபடியே...  கால்களை அடித்தடித்து. என்னை நோக்கி வந்தனர்..

 

மாமி..மாமி  பன்னாட.’  என்றான் குண்டன்.

 

மாமிர ஊட்ட போகாத..’- சண்முகம்.

 

சுண்டங் காயத் தின்னாத..

 

சூடெ ழும்பிச் சாகாதசாகாத..

 

மாமி..மாமி  பன்னாட..

 

டே..குண்டா..! மெய்யாமெய்யா என்ட சூமட்டியப் பாத்துட்டாளுஹளாடா..என்று கேட்டேன் தாளமுடியாத வெட்கமும் கோபமுமாய்..

 

நீ களிசனக் கழட்டக்குள்ளேயே பாத்துட்டாளுஹள்ளோவ்.என்றான் குண்டன்.

 

பாருவதியும் செவைதாவும் பாக்கல்ல.. மாலவெள்ளிதான் பாத்து அவளுஹளுட்டயும் காட்டினடா..என்றான் சன்முகம்.

 

மாலவெள்ளிக்கி ஊட்ட போகேக்க கிள்ளி உட்றன் பாரு’   கோபத்தில் எனக்குக் கண்ணீர் வந்தது.

 

எங்கடா சாந்தமாமா..?;’  கேட்டான் சண்முகம்.

 

அந்தா நீஞ்சிப் போறாண்டோவ்.. சாந்தமாமா..

 

சாந்தமா..மோவ்..

 

 சாந்தமாமா தார்ப்பாய்ச்சிக் கட்டிய சாறனுக்குள் காற்றுப் பந்து உற்பத்தியாக்கி  நடு ஆற்றின் குறுக்கே வேகமாக நீந்திப் போய்க் கொண்டிருந்தான்.

 

எங்கடா போறான்.. சாந்தமாமா..?’

 

தாமரக் கொட்ட ஆயப் போறான் மாலவெள்ளிக்கும்ää செவைதாக்கும் பாருவதிக்கும்..

 

சாந்தமாமா நாங்களும் வாரோ..ம்..

 

ஞ்ச வெராதங்கடா.. தண்ணி தாளம்.. தாமரப்பத்தைக்க பாம்பு இரிக்கிற..போங்கடா..

 

சாந்தமாமா அசாத்திய வேகத்துடன் நீந்திச் சென்றான்.  நட்டாற்றில் சென்ற சாந்தமாமா  சட்டென்று தண்ணீரிலிருந்து  நாலடி உயரத்திற்குத் தாவி உடம்பை வளைத்து அதே வேகத்தில்  தண்ணீரைக் கிழித்து  ஆழத்தில் உட்புகுந்து மறைந்தான். மேலே நீர்வட்டங்கள் அலைந்து அடங்கி வெகுநேரமாகச் சலனமற்றிருந்தது.  எங்களுக்குப் பயமாகி விட்டது.

 

எங்கடா அவன்..?’

 

குளியோடிப் போறான்..

 

எம்பட்டு நேரம்டா சாந்தமாமா மூச்சடக்கி.... ம்மாhடி..

 

சாந்தமாமாவைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு   நானும் சண்முகமும் குண்டனும் எமது வழமையான விளையாட்டில் இறங்கினோம். கால்களைப் பின்னியபடி  படகுபோல ஆடினோம்.. நாங்கள் மூவரும் ... நீரில் முக்குளித்து மூழ்கி முங்கிமுங்கி அமிழ்ந்தெழுந்தோம்.  சண்முகம்   நடுவே  பாய்ந்து கீழாகி வந்து  மேலாகிக் கீழாகி கைகளைப் பொத்தியபடியே

 

ஈ ஒண்டு புடிச்சே...ன்..என்று கத்திச் சொல்ல-

என்ன ஈ..?’

சோல ஈ..

என்ன சோல..?’

மாஞ் சோல..

என்ன  மா..?’

அரிசி மா..

என்ன அரிசி..?’

குத்த ரிசி

என்ன குத்து.

பயில்வான் குத்து.

 

என்று இருகைகளையும் பொத்தி குண்டனின் முதுகில் குத்தினேன்.  சண்முகமும் பதிலுக்கு ஒரு குத்து கொடுத்தான்.  குண்டன்எண்டம்ம்ம்மோ..வ்.என்று கத்தியபடியே நீரில் அமிழ்ந்தான்.  இன்னும் சாந்தமாமாவைக் காணவில்லை.

 

குண்டா..குண்டா.. எங்கடா இன்னம் சாந்தமாமாவக் காணயில்ல..?’

 

அந்தா பாரு..

 

சாந்தமாமா ஆழக்கரையோரம் அடர்ந்திருந்த பிரப்பம் பற்றைகளுக்குள் சிக்கிக் கிடந்த தாமரைக் கொடிகளின் அடியில் தேடித்தேடி தாமரைக்கொட்டைகளும் சுக்கட்டிக் கிழங்குகளும் முள்ளிக்காய்களும் பறித்து  மடியில் நிரப்பியபடி வந்து கொண்டிருந்தான். நாங்களும் கரைக்கு அண்மித்ததாகச் சென்று இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தோம்.. நறுபுளிப் பற்றைகளுக்கப்பாலிருந்து_..வ்..வ்..ம்..என்று பாட்டுச் சத்தம் கேட்டது. நீளக்குளக்கட்டிலிருந்து  மாலைவெள்ளியும் சுபைதாவும் பார்வதியும் கோணல்குட்டிப் பாட்டம் கொடுத்தபடியே ஓடி வந்து கொண்டிருந்தனர்..

 

_....வ்..வ்..ம்..  ஈச்சோலே..ஈச்சோலே..

 

தும்பல..தும்பல..

 

பாக்கு வெத்துல..

 

பாக்கட்டி.. மாக்கட்டி.. பாக்கட்டி.. மாக்கட்டி.. பாக்கட்டி.. மாக்கட்டி..

 

டே.... சதக்கா அந்தா வாறாளுஹள்ளோவ்.. ஒண்ட சூமட்டியப் பாத்தாக்கள்..

 

நாங்கள் மூவரும் சிறுமிகளுடன்  யுத்தம் புரியத் தயாராகக் காத்திருந்தோம்.. சிறுமிகளின்    பாட்ட ஊர்வலம் நெருங்கியதும்

 

டியெய்.. மாலவெள்ளிப் பொருக்கி  மின்னிச் செவைதா.. கச்சக்கட்டுப்  பாருவதி.. நில்லுங்கடி..

 

என்னடா சூம்பக் குண்டா என்னடா..பாட்டம் நின்று  மாலைவெள்ளி கேட்டாள்.

 

ஏன்டி நீ சதக்காட சூமட்டியப் பாத்த நீ........?’

 

ஒஸிலேய்.. நான் பாக்கல்லடா.. வேள் பாருவதியான் காட்டின..

 

ஏன்டி காட்டின நீ  கச்சப் பாருவதி..?’

 

கடவுளே..... நான் காட்டல்லடா.. முண்டக்கண்ணா..செவைதாதான்டா  முன்ன பாத்த..

 

ஏன்டி கறுப்பி  நீ முன்ன பாத்த..

 

ஒஸிலேய்.. நான் பாக்கல்ல.. என்ட கண்தான் பாத்த..மூன்று சிறுமிகளும் கிலீரெனச் சிரித்தனர்.. நாங்கள் ஒருசேர ஆத்திரமுற்று...  நிர்வாணத்தை மறந்து சட்டென இடுப்பளவுத் தண்ணீரை விட்டும் வெளியே பாய...

 

ச்சீய்.. ச்சீய்.. பார்ரியே.. உரியான் கொரங்குஹள..

 

என்ன கறுப்புடீ..

 

வெளக்குத் திரி..வெளக்குத் திரி..

 

சிறுமிகளின் நையாண்டிச் சிரிப்பில் வெட்கித்து விறுவிறுத்து தாக்குதல் முயற்சியைக் கைவிட்டு மறுபடி திரும்பி தண்ணீரில் பாய்ந்தோம்.. சரியான வெட்கமாகவிருந்தாலும் என்னுடையதை மட்டுமல்லாது இவர்கள் இருவருடையதையும் சேர்த்தே பார்த்துவிட்டார்கள் என்பதில் எனக்கு ஓரளவு திருப்தி ஏற்பட்டது. கரையில் நின்று கொண்டு.. சிறுமிகள்...

 

வாவண்டா.. வாங்களண்டா.என்று நக்கலாகக் கூப்பிட்டனர்.


எங்களது களிசான்களை கம்பினால் தூக்கி நாயுருவிப் பற்றைக்குள் எறிந்தார்கள்.. நாங்கள் ஆத்திரமீக்குற்று ஆனால்,,, நிர்வாணம் காரணமாக கரையேறி ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரத்தில்..  தண்ணீரடியிற் சென்று மண்ணெடுத்து பலம் கொண்டெறிந்தோம்.

 

மூக்கோடி மாலவெள்ளி

 

“மாக்கொரட்டி... மாக்கொரட்டி....

 

கச்சக்கட்டுப் பாருவதி..

 

பொட்டிமூக்கி....”

 

மின்னிச் செவைதா.. கொட்டாண்ட  அறாமி...

 

அவர்களின் அத்தனை பட்டப் பெயர்களையும்  சொல்லி ஏசிவிட மட்டுமே  முடிந்தது...

 

சாந்தமாமா..சாந்தமாமா..

 

 சாந்தமாமா விரைவாக நீந்தி அருகில் வந்தான். மடிநிறைய தாமரைக்கொட்டைகள்.. முள்ளிக்காய்கள்.. சுக்கட்டிக் கிழங்குகள்.. தலைநிறைய சல்பேனியாச் சல்லுகள்..

 

ஏண்டா சண்ட புடிக்கிறீங்க..?’

 

இவளுஹளுக்கு ஒண்டும் குடுக்கப்போடா  சாந்தமாமா..

 

ஏன்டா..?’

 

இவன்ட சூமட்டியப் பாத்துட்டாளுஹள் சாந்தமாமா..

 

ச்சீய்ய்..சாந்தமாமா சிரித்தான்.

 

சாந்தமாமா.. எங்களுக்கும் தாவன்..

 

குடு;க்காத..குடுக்காத..

 

சாந்தமாமா விரைவாகக் கரையேறி சிறுமிகளுக்கும் நிறையக் கொடுத்தான். நாங்கள் பொறாமையுடன் செய்வகையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. ஆத்திரமாகவிருந்தது.. ஆனால் கரையேற வழியில்லை..

 

சாந்தமாமா..சாந்தமாமா.. எங்கட களிசனை எடுத்துத் தாவன்..

 

எங்கடா..?’

 

ப்ப எடுக்காத சாந்தமாமா.. நாங்க போனத்துக்குப் பொறகு எடுத்துக் குடு..

 

சிறுமிகள் சொல்லிவிட்டு தமது பங்குகளைப் பெற்றுக் கொண்டு ஓடினர்.. சாந்தமாமா எங்கள் களிசனை எடுத்துத் திரும்பிய போது  குண்டனைக் காணவில்லை.. குண்டன் திடீர் நீர்ச்சுழியில் அகப்பட்டு  கத்தவும் வழியில்லாது தலைகீழாக ஆற்று வெள்ளத்தில் இழுபட்டுப் போய்க் கொண்டிருந்தான்..

நாங்கள் கத்தினோம்..

 

ச..சாந்தமா..மா..மாமா.. அந்தா   கு..குண்ட..டன்..

 

குண்டன் தாண்டுட்டான்... குண்டன்..தாண்டுட்டான்..

 

  எமது கூக்குரலில்.... சாந்தமாமா திடுக்கிட்டு... பின் சட்டென... அதிவேகத்தில் கரை நெடுக ஓடி வளைந்திருந்த தென்னைமரத்தில்... ஓடியேறி பத்தடி தாவி...  குண்டன் இழுபட்டுப்; போய்க்கொண்டிருந்த இடத்தில் அசுர வேகத்தில்  விசுக்கெனப் பாய்ந்தான். இனிக் குண்டன் தப்பிவிடுவான்.

 

௦௦

 

 

 

தடதடவென வீரிட்டுச் சென்ற  ஒரு  மோட்டார் சைக்கிள் ஒலியால்  திடீரென  என்  எண்ணங்கள்  கலைந்தன... ஓஹ் ....எண்ணங்களின்  பாரம்  தாங்காமல் மெதுவாக  எழுந்தேன்.....சொந்த  ஊரில்  ஒரு  அந்நியனாக  உணர்ந்தேன்,,,

 

கடந்த காலங்கள் கனவுகளாகவே ஆகின்றன. சிறுபிராய அமைதிக் காலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடம் போல அவ்வளவு நீளமாக இருக்கின்றது.  இப்போதெல்லாம் ஒரு வருடம் என்பது ஒரு நாள் போலச் சுருங்கி விட்டது. யாரும் யாரையும் பற்றிக் கவலைப்படாது காலப்பெருவெள்ளத்தில் இழுபட்டுச் சென்று திக்கொன்றாகக் கரையேறும் மானுடப்படகுகளாய்  ஆன பின் யார் யாரைச் சந்திப்பது..?  பல வருடங்கள்  கண்ணிமைப்பதற்கிடையில்  எப்படிக் டந்து சென்றது.? புரியவில்லை.

 

“ஹ்ம் ....ஆ...எல்லாமே மாறிவிட்டன....” ஒரு  நீண்ட பெரு மூச்சுடன் எழுந்தேன்.. எங்கே  செல்ல...? ...ஒ... நான்  படித்த  வக்காத்துக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எங்கே....? அதையாவது  பார்க்கும்  உந்துதலில் ....எந்தப் பக்கம்  போக...? உத்தேசமாக கிழக்குப் பக்கம்  ஓடிய  ஒரு  கொன்க்ரீட் பாதையால் நடந்தேன்....சிறிது  தூரத்திலேயே சில  மாணவர்கள்  சீருடையுடன்  பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தனர்...ஒஹ்....மகிழ்ந்து  போய்  அவர்களிடம்  ஸ்கூல் இருக்கும்  இடத்தை  கேட்டுக் கொண்டு .நடந்தேன்...திடீரென மிகப் பிரமாண்டமான  வாயிற் கதவுகளுடன்  கமு/அல்- மிஹ்ராஜ் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) என்ற பெயர்ப் பலகை......

 

பற்பல  கட்டிடங்கள்...ஆயிரக் கணக்கில்  மாணவர்கள்....நூற்றுக் கணக்கில் ஆசிரியர்கள்...எவரையும் அடையாளம்  காண  முடியவில்லை  என்னால்....பழைய  அடையாளம்  ஒன்று  கூட  இல்லை....அவ்விடத்திலேயே திகைத்துப் போனவனாக  நின்று கொண்டிருந்தேன்......

 

ஒ..!. இவ்விடத்தில்  இருந்த வக்காத்துக்குளம் அரசினர் முஸ்லிம் தமிழ்  கலவன் பாடசாலை  எங்கே...? பக்கத்தில்  இருந்த  குண்டனின்   வீடு எங்கே...? மாலைவெள்ளி யின்  குடில்  எங்கே...? புளியமரம்....? சாந்தமாமா வசித்த  போடியாரின்  கல்வீடு...? ஓ..ஹ்....

 

    

௦௦

     தினமும் பாடசாலை விட்ட பின்னர் ஒவ்வொரு மாலைவேளையிலும் எங்கள் விடுமுறை காலங்களிலும் சாந்தமாமா கற்பித்த விளையாட்டுக்கள்தான் எத்தனை.. அவனுக்கு என்ன விளையாட்டுத்தான் தெரியாது.. 

கண்ணாண்;டே  புண்ணாண்டே.. கறிக்கோப்பே..கோளி முட்டே.. உடயா..?’

 சாந்தமாமா கத்திக் கேட்டதும்  நாங்கள்  ஆலிமுபெண்டியின் ஆல வீட்டுக்குள் ஒழிந்து கொண்டோம். சரி உடூவ்..என்று குண்டன் குரல் கொடுத்ததும்  சாந்தமாமா கண்களைப் பொத்தியபடியே ஆலவீட்டுக்குள் நுழைந்து எங்களை இருட்டில் தேடினான்.  நாசமாய்ப்போன மாலைவெள்ளியின் தும்மலால்  அரைமணியில் அனைவரையும் கண்டுபிடித்து விட்டான்.

 சிலகாலம் தெத்திக்கோடுவிளையாட்டில்  காலம் தள்ளினோம். திட்டி மணலில் நீள் சதுரக் கோடுகளால் எட்டுச் சதுரங்கள் வரைந்து  உடைந்த பிங்கான் ஓட்டுக் காய் எறிந்து தத்திச் சென்று முள்ளி பார்த்துரைட்டா..? ரைட்டா..?’ கேட்டு  துள்ளித் திரும்பிää தத்தி வந்து பாய்ந்து பழம்எடுத்து  எப்போதும் எங்களை  சாந்தமாமா வென்றான்.

 நோன்பு காலங்களில்  மணலில் கட்டம்கட்டி பேரீச்சம் பழக் கொட்டைகளை எறிந்து  குழிக்குள் விழச் செய்து  கய்யானால் குறி தவறாது அடித்து எங்களை இலகுவாக வென்றான். கறுத்தம்மாவின் பாழ்வளவுக்குள்  எங்கள் அனைவரையும் ஒரே படையணியாக்கி மாலைவெள்ளியை மட்டும் தன் பக்கம் வைத்துக் கொண்டுவார்தொடுத்து  ஓடி எங்களைப் போரில் தோற்கடித்தான்.  கோணல்குட்டி  விளையாடி  எப்போதும் நூறு எடுத்து எங்களுக்குப் பாட்டம் கொடுத்தான்..  தானும் கூடவே

 

ஆலையிலே..சோலையிலே..

ஆலம்பாடிச் சந்தையிலே..

குட்டிப் பொல்லும் பம்பரமும்

கிறுக்கியடிக்கப் பாலாறு..

பாலாறு.. பாலாறு..பாலாறு..ஊஊஊஊஊ..

என்று ஆயிரம் தடவைகள் பாடி எங்களோடு ஓடிவந்தான். கமறுன் பள்ளி வெட்ட வெளியில் எங்களைக் கூட்டிப் போய் புள்ளிப்பீங்கான் விளையாடப் பழக்கினான்..  எதிராளியை உள்ளே வரவிட்டு  மறித்து  பாட்டுப்பாடி சிறைப்பிடித்தான்.

மாக்கறுப்பி.. ரூப்பி

மம்முறாயின்   சூப்பி..

கிட்டப் படுடா.. கிழட்டு வடுவா..

ஓ..குச்சுப்பெட்டி..நெருப்பெட்டி….குச்சுப்பெட்டி..நெருப்பெட்டி..

௦௦

     பெருநாள் முடிந்த அடுத்த நாள் ஆத்தப்;பாவின்  செத்தைக் குடிலுக்குள்  சீனசர்க்கஸ்  கம்பனி  நடத்தினான். தேங்காய்ச் சிரட்டைகளில் ஓட்டையிட்டு அதனூடாக கயிறு இழுத்து அதன் மீது ஏறி நின்று கொண்டுடவுக்கு..டவுக்குஎன்று  குதித்துக் குதித்து குதிரையாட்டம் காட்டி வியக்க வைத்தான்.  உயரமான பலமான தடிகளில்  கயிறுகட்டி அவற்றின் மீது  ஏறி நின்று கொண்டு பத்தடி உயர மனிதனாக பொய்க்காலில் நடந்து காட்டி திகைக்க வைத்தான்.. அடுத்த காட்சியாக  ஒட்டுமீசை தாடியுடன் தொளதொள அங்;கியணிந்து ஓரங்க நாடகத்தின் தனிப்பெரும் கதாநாயகனாகி ஒரு நாளும் கேள்விப்பட்டிராத பாடலை எழுதி இசையமைத்து பாடி மயக்கினான்.

 

வீறான் வீறான் தோட்டத்திலே

வறுத்துப் போட்டானாம் பள்ளிக் காக்கா

வாசிக்கு  கொண்ட வெட்டச் சொல்லி

வாயில போட்டானாம் முல்லக்காரன்..

இத்யாதி கதைவசனம் பாடல் காட்சிகளால்   சர்க்கஸ்  பார்க்க  சிறுவர் கூட்டம் அம்மியது.  எனவே என்னையும் குண்டனையும் டிக்கட்’; கருமபீடம் அமைத்து  வசூல் செய்வித்து ஒரே நாளில் இரண்டு ரூபா முப்பது சதம் சம்பாதித்தான். நிகர இலாபத்தில்  எனக்கும் குண்டனுக்கும் தலா இருபது சதமும் சிறுமிகளுக்கு தலா ஐந்து சதமும் கொடுத்தான்.

 

௦௦

 

“ட்ரீங்க் ட்ரீங்க் ட்ரீங்க் ட்ரீங்க்...............”

 

     கர்ணகடூரமாக  ஒலித்த  பாடசாலை  மணியில்  கவனம்  கலைந்தேன்...ஒஹ்..... காலக் குதிரைக்கு என்னதான்  வேலை..? மூச்சிரைக்க மூச்சிரைக்கப் பாய்ந்து செல்வதைத் தவிர..? தொழில் தேடல்கள்.. பணத் தேவைகள்.. சம்பாதிப்புகள்..... எல்லாம் சம்பாதித்தாகி விட்டது...அதற்கு  விலையாக இளமையை-அமைதியை   கொடுத்தாயிற்று.....

 

இனி  எங்கு  செல்ல....? யோசனையுடன் திரும்பிய போது திடீரென தலைக்கு மேலால் இள நீல  வர்ணத்தில் பறந்து சென்றது  ஒரு  பறவை....ஒஹ்...இதென்னா  வக்காப் பறவையா...... .அட..  அந்த  வக்காத்துக் குளம் இப்பவும்  இருக்குமா...இதிலிருந்துதானே  இந்த  ஊருக்கும்  இந்தப் பெயர் வந்தது..... .ஆர்வம்  உந்தித் தள்ள .. கரைவாகு வயல் வெளிகள்  இருக்கும்  என  நான்  உத்தேசித்த்  திசையில் மெதுவாக  நடந்தேன்..... வக்காத்துக்குளத்தை காண மிக வேட்கைப்பட்டேன்..........

 

௦௦

 

மூன்றாம் தவனைப் பரீட்சை முடிந்த கையோடு கிடைத்த விடுமுறையில் ஒருநாள் எங்களது கனவுப் பள்ளத்தாக்கான வக்காத்துக் குளத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு    சாந்தமாமாவை நாங்கள் பலதடவைகள் வற்புறுத்தியிருந்தோம்.  நாங்கள் இன்று பின்னேரம் ஆத்தப்பாவின் செத்தைக் குடிலுக்குள் கல்யாண வீடு சோடனை செய்து மாப்பிள்ளை எடுப்பு பெண்அழைப்பு என்று  முழுமூச்சாக விளையாடிக் கொண்டிருந்த போது  திடீரென சாந்தமாமா வந்தான். தனது இறுதி முடிவை அறிவித்தான்.

 

டே..ய்வாங்கடா..இப்ப ஒரு வெசயம் சொல்லயா..?’

 

சொல்லு..

 

நாம நாளக்கி வக்காத்துக் குளம் போற..டோவ்..!

 

ஹோ..வ்..

 

நாங்கள் மகிழ்ந்து கூச்சலிட்டோம்.   உள்ளே மணப்பெண்’  அலங்கரித்துக் கொண்டிருந்த கொண்டிருந்த சிறுமிகள் ஒடி வந்தனர்.

 

சாந்தமாமா..சாந்தமாமா. நீ இப்ப இவனுகளுட்ட என்ன சொன்ன..?  நாங்களுமா..?’

 

வக்காத்துக் குளத்துக்க நாளக்கிப் போற.. நீங்களுந்தான்..

 

_..ய்ய.ய்ய்.சிறுமிகள் கூச்சலிட  நாங்கள் கோபமுற்று,

 

ல்ல சாந்தமாமா..,   பொண்டுகள் வேணா..என்று உடன் மறுதலித்தோம்.

 

ஏண்டா..?’

 

ல்ல சாந்தமாமா.. நாங்க அவளுஹளோட அத்தம்;’  உட்டிருக்கம்.  ஒரு கௌமைக்கிப் பேசற ல்ல..

 

ச்சே.. அத்தம் உட்ட தோசி.. நாலுபணக் காசி.. கடலுக்க மாசி..’  மாலைவெள்ளி எங்களைப் பழித்தாள்.

 

            சாந்தமாமா எங்களைச் சமாதானப்படுத்தி..,  இருபக்கத் தூதுவனாகி..,  எங்கள் நிர்வாணத்தை அவர்கள் பார்த்ததை பாடசாலையில் யாருக்கும் சொல்லமாட்டார்கள் என்ற உறுதி மொழி பெற்றுக் கொடுத்த பின்னர்.. சிறுமிகளோடு,  சின்னிவிரல் தொட்டுபழம்விட்டு  இணங்கினோம்.

 

            அடுத்தநாளே  எமது  பெற்றோருக்குத் தெரியாமல் திட்டம் அமுலாகியது. வக்காத்துக் குளத்துக்குச் செல்ல பட்டிப்பளை ஆற்றைக் கடக்க வேண்டும். எங்களால் தனியாக முடியாது. சாந்தமாமாவால் எங்களைக் கொண்டு சேர்க்க முடியும். வக்காத்துக் குளத்துக்கு முன்னர் இரு தடவைகள் களவாகச் சென்று வந்திருக்கிறோம். ஆ..என்ன அழகான இடம்.. கண்கள் நிறையக் கனவுகளுடனும் புது உற்சாகம் கரைபுரண்டோட சாந்தமாமா தலைமையில் நடந்தோம். கூளம் விதானையின் தென்னந்தோப்பினூடே ஊடறுத்து நடந்தோம்.

 

      ஆயிரத்தெண்ணூறு தென்னைமரங்கள்.. அடர்ந்த குளிர்நிழல்.. குவியல் குவியலாக தேங்காய் உரி மட்டைகள்.. தேங்காயக் குவியல்கள்.. மரத்துக்கு மரம் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் கயிறுகள்.. தும்புக் கும்பங்கள்.. தொழிலாளர்கள்....... கடந்து நடந்தோம்.

 

தோப்பின் தரையெல்லாம் பச்சைக் கம்பளமாய் புற்கள்.. காட்டாமணை செடிப் புதர்கள்.. தொட்டாற்சுருங்கிப் படரிகள்.. பிரப்பம் பற்றைகள்.. எரிந்து கரியாய்க் கிளம்பி வரும் நாணல் இலைகள்.. ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதை.. நடுநடுவே நெடிதுயர்ந்த வம்மி மரங்கள்.. மர அடிகளில் இளஞ்சிவப்புப் பந்துகளாய்  அதன் பூக்கள்.. கடந்ததும்  வரிசையாக  பூஞ்சணமரங்கள்.. இலையை ஒடித்து சுருட்டி ஊதினால்  பீ..ப்பீ..ப்..பென்ற இலவச நாதஸ்வர ஓசை.. அடிமரத்தில் பட்டைபட்டையாக  அப்பியிருக்கம் மயிர்க்கொட்டிப் புளுக்கள்.. பார்த்தாலே தலைமயிர் சிலிர்த்தெழும்..  

 

ஒற்றையடிப் பாதையின் குறுக்காக மறித்து கிளைகளை நீட்டிக் கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள்.. அதன் ஊதா மஞ்சள்.., சிவப்பு வர்ணங்களில்  ஒலிவாங்கிப் பூக்கள்.. வழிநெடுக  நீலநிற வண்டுகளின்வ்வ்வ்வ்வென்ற ஒலியலைகள்..

 

      நெடிதுயர்ந்தும்,  கிளைகளை அகல விரித்தும்  நறுபுளி மரம்.. அதன் சளி நிறைந்த பழம்.. இளம்சிவப்புக் கலரில்  ஒதக்காய்கள் விழுத்திக் கவரும் கோமாப் புளிமரம்.. சாப்பிட்டால் வாய் நிறைய இனிப்பும்புளிப்புமாக சாறு.. சின்னச்சின்ன ஈர்க்குச்சி இலைகளுடன் காட்டீச்சை மரங்கள்.. அங்குமிங்குமாய்..  நூற்றுக் கணக்கில் பயணிக்கும் தும்பிகள்.. அடர்கிளைகள் பரப்பிய அலரிமரங்கள்.. அவற்றின் சிறிய கூம்புகூம்பான இலைகளின் அடியில் தங்கக் கலரில் தொங்கும் கூட்டுப்புளுக் கூடுகள்.

 

. பற்றைபற்றையாக  நாகதாளி..,  குறிஞ்சா, மாம்பாஞ்சான்,  கொத்தான வெள்ளைப் பூக்களுடன் சிரிக்கும், நெருஞ்சிமுட்புதர்கள்.. எல்லாம் கடந்து நடந்தால்...  சரிவாக இறங்கிச் செல்லும் நிலம்.. கிடுகிடு பாதாளம்.. அப்புறம் சமவெளி.

 

சாந்தமாமா தலை வகித்து திகில் கதைகள்  சொல்லியபடியே முன்னால்  நடக்க நாங்கள் எல்லோரும் தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவரின்  சட்டையை அல்லது காற்சட்டையைப் பிடித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தோம். அப்படியே   ரயில் பெட்டிகளாக ஆகி  கிடுகிடு சரிவு நிலத்தில்  மெதுவாக  இறங்கி குச்சுக்குச்சென ஓடினோம்.. ரயில்பாட்டைப் பாடியபடியே............

 

குச்சுக் குச்சு ரயில் பெட்டி.. கூ..வ்வ்வ்என்று  கூவினேன்.

 

கூடப் பர்ரா  கடப்படி.. கூடப் பர்ரா  கடப்படி..’  என்றான் சண்முகம்.

 

கஞ்சிவடி.. கஞ்சிவடி.. கூ..வ்வ்வ்வ்..மாலைவெள்ளி.

 

அஞ்சிபிடித் தங்க மாலே.. அஞ்சிபிடித் தங்க மாலே..  ஜிக்குப்புக்கு. ..ஜிக்குப்புக்கு.............கூவ் .பார்வதி.

 

திட்டுமண்..திட்டுமண்.. திட்டுமண்..திட்டுமண்..சுபைதா.

 

குட்டுமன்..  குட்டுமன்..  கூ..ஊ..ஊ..ஊ..

 

ரயில்  சரிவில் இறங்கி  சமதரை அடைந்தது.  மூச்சிரைத்தது. நெடுநெடுவெனப் புளியந்தோப்பு..  புற்றரையில் சற்று இளைப்பாறினோம்.

 

புளியம்பளம் வேணுமா..?”

 

என்று கேட்ட சாந்தமாமா படீர்படீரெனää  காய்ந்த சில பலமான தடிகளை முறித்தான்.  அவற்றை முக்கோண வடிவில் மரநாருரிகளால் இறுகக்கட்டினான். கூடவே  பாரத்துக்காகச் சில கற்களையும் கட்டினான். தூரச் சென்று ஓடிவந்து தனது விஸித்திர ஆயுதத்தால், புளிய மர உச்சியை இலக்கு வைத்து வேகமாக எறிந்தான்.. சற்று நேரத்தில்.., காய்ந்த புளியம்பழக் குலையொன்று.., சுமார் முப்பதடி உயரத்திலிருந்து.., எங்களை நோக்கிச் சிதறி விழுந்தது. ஓடுகள் வெடித்த அந்தப் புளியம்பழங்கள்.. ஆ.. புளியினிப்பு.. ஆ..!  மாலைவெள்ளியும்.. பார்வதியும் மடி நிறையக் கட்டினர்.

 

 

புளி....புளி.. என்ன புளி..?’ பார்வதி கூவினாள்.

 

பளப் புளி..மாலைவெள்ளி பதில் கூவினாள்.

 

என்ன பளம்..?’

 

புளியம் பளம்..

 

என்ன புளி..?’

 

பளப் புளி..!


           மறுபடி நடந்து... பட்டடிப்பளை ஆற்றின் மேற்குக் கரையோரம் வந்துவிட்டோம். இதனைச் சின்னக்குளம் என்பார்கள்.  தூரத்தே துரிசி வில் தெரிந்தது. வெகு தூரத்தே சவளக்கடை அரிசிஆலையின் புகை உருண்டையாக  வானம் நோக்கிப் புகைந்து கொண்டிருந்தது.  சின்னக்குளம் என்பது   அகலக்குறுக்கான ஆறு. சிற்றலைகள் பட்டு   சளக்சளக்கென கரையடிக்கும்  நீரலைவுகள்.. பக்கத்தே ஆமைப் பாளி.. முப்ப்ததேழு ஆமைகள் கரையேறி வெயில் காய்ந்தன. முதலைகளும் இருக்கலாம்.. என சாந்தமாமா  பயமுறுத்தினான்...

 

சுற்றிலும்.. வண்ணாத்திக் கற்கள்.. ஆற்று நீரில் பாம்பு போல நெளிந்தாடும் தென்னை மரப் பிம்பங்கள்.. அக்கரைக் கரைவாகு வயல்வெளிகளில் சில கிராமத்தவர்கள்..  புல் பிடுங்க வரிசையிற் குனிந்திருக்கும் பெண்கள்.. அவர்களின் கிராமியக் கவிப் பாட்டோசைகள்.. பிடுங்கிய சல்லுக்குள் துடிக்கும் சிறு மீன்களுக்காகக் குறிவைத்துக் காத்திருக்கும்..,  வரிசைக் கொக்குகள்.. சின்னக்குளமும்... சும்மா அல்ல.. பத்தடி ஆழம் இருக்கும்.. கடக்கப்போகிறோம்.

 

      சாந்தமாமா தனது.. தார்ப்பாய்ச்சியை அவிழ்த்து.. தனது  அரும்பெரும் ஆயுதங்களை வெளியே எடுத்தான். கண்ணிவலை தங்கூசுக்கயிறு ..,ஈயத்துண்டுகள்..,சம்பியன்சவரஅலகு..,  கிளிக்கத்தி..,டெல்டாடொபிப்பேப்பர்கள்.., மண்புளு நிறைந்த யானைத் தீப்பெட்டி.,. கய்யான் குண்டு, டியுப் ரப்பர்.., கட்டப்பொல்..,  இரண்டு தூண்டில்கள்,, பூட்டூசிகள்.., அவ்வளவுதான்.  நாங்கள் ஆவென்று வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்க.., ஆயுதங்களை  ஒரு பெரிய.., சீமெந்துப் பையில்.., அடைத்துச் சுருட்டி.., என்னிடம் ஒப்படைத்தான். பின் எங்களனைவருக்கும் பொதுவான கட்டளை பிறப்பித்தான்.

 

டேய்... ஆத்தக்கடக்கப்போறம்.. என்ட முதுகில ஒவ்வொரு ஆக்களா ஏறனும். அக்கரையில உட்டுட்டு வருவன். டே... சதக்கா.. முதல்ல நீ இந்த சாமான்களை நனையாமப் புடிச்சிட்டு, ஏறு.  சம்முவம் நீ நீஞ்சுவாய் தானே..... போ.. சதக்கா வாடா..

 

ரெண்டாவது நான்என்றாள் மாலைவெள்ளி.

 

ல்ல நான்..

 

நான்டி..நான்டி..

 

பொத்துங்கடா வாய்..! மொதல்ல சதக்கா... பொறகு ஆராருண்டு பாப்பம். வா... கிட்ட நில்லு.. எல்லாரும்..  வட்டமா நில்லு.. ம்.. செரி..

 

என்று எல்லோரையும் வட்டமாக்கிய சாந்தமாமா அவர்களின் அதிர்ஸ்ட முறைப்படி முதுகிலேறு முறையைத் தீர்மானிக்க தான் வழக்கமாகப் பயன்படுத்தும் வாய்ப்பாட்டைப் பாடி ஒவ்வொருவரிடமும் நிறம் கேட்டுத் தீர்மானித்தான்..

 

ஓம் பத்து!  ஆத்தப்பா சந்தைக்குப் போனாராம்.. ரெண்டு குண்டு வாங்கி வந்தராம்.. ஒண்டு காகம் கொண்டு போனதாம்.. மத்தது என்ன நெறம்..?’ என்று வசனம் முடிவடைந்த நபரிடம் கேட்டான் சாந்தமாமா.  சிகப்பு!என்றாள் மாலைவெள்ளி.  சி..வ..ப்..பு..என்று சுட்டுவிரலால் அனைவரையும் தொட்டுபுஎன்ற எழுத்தில் முடிந்த நபரை இரண்டாவதாகத் தேர்வு செய்தான். இப்படி  எல்லோருக்கும் முறை தீர்மானித்த பின்..,,  குளக்கட்டில்., வேகமாக ஓடி.., சாறனுக்குள் காற்று வாங்கி மூட்டையாய்க் கட்டிக் கொண்டு, அப்படியே சற்றும் பயமின்றி சின்னக்குளத்தினுள் பாய்ந்தான்.. சட்டெனத் திரும்பி நீந்தியபடியே..வந்து


டே சதக்கா வாடா..என்றான்.

 

நான் ஆயுதப்பொதியை தலையில் வைத்துக்கொண்டு., சாந்தமாமாவின் தோள்களில் ஏறினேன். கூச்சமாகவிருந்தது. வழுக்கியது.. ஆடியது.. பயமாகவிருந்தது. ஆனால் ஆனந்தமாகவிருந்தது.  சாந்தமாமா என்னை  காற்றுமூட்டையின் மேலுதைப்பு உபயத்தில்., மிக அநாயஸ்யமாக., சுமந்து சென்றான்..  இருபத்தினாலடி அகலத்தை நீந்திக் குறுக்கறுத்து அக்கரை அடைந்தான்..

 

நிண்டுக்க.. மத்தாக்கள ஏத்திட்டு வாரன்..

 

நான் சந்திரனில் முதலில் காலடி வைத்த பெருமையோடு  மறுகரையை நோக்கி கூச்சல் செய்தி அனுப்பினேன்.

 

கூ..ய்..ய்யா..  கூ..ப்பாடோ..ய்..என் செய்திக்கு சிலவிநாடி தாமதத்தின் பின்னர் குண்டன் பதில் கூப்பாடு அனுப்பினான்.

 

மெய்யா..மெய்..யா..   சாப்..பாடோ..ய்..

 

எங்கள் கூச்சலும் பதில் பரிமாற்றமும் தூரத்து மரங்களில் மோதி எதிரொலிகளாக எங்களை நோக்கி மறுபடி மறுபடி ஒலிக்க சண்முகம் தனியாக நீந்திக் கரையேறி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மாலைவெள்ளியைச் சமந்து கொண்டு சாந்தமாமாவின் கப்பல் வந்தது.  மாலைவெள்ளியை இக்கரையில் விட்டு குண்டனுக்காக மறுபடி சளைக்காது நீந்திச் சென்றான் சாந்தமாமா.. தனிமையைப்பயன்படுத்தி  மாலவெள்ளி என்னிடம்


டே.. சளிவாயா..! ஏன்டா நீ என்ன நக்குத்திண்ணி யெண்டு ஏசின.. நேத்து..?’ என்று யுத்தத்தை ஆரம்பித்தாள்.

 

அப்ப.. நீ ஏண்டி பொருக்கி !   என்டயப் பாத்து கறுப்பு எண்டு சொன்ன..?’

 

அதுக்குத்தான் பளம் உட்டுட்டேனடா..

 

போடி பொருக்கி..

;

போடா  வள்ளா..

 

நான் ஆத்திரமுற்று மாலைவெள்ளியின் மார்பில் கிள்ளிவிட்டேன்.. அவள் என் காற்சட்டையின் கிளிசல் நுனியைப் பிடித்து இழுக்க தடுமாறிக் கீழே விழுந்தேன்.. மறுபடி எழுந்து அவளைப் பிடிக்க மாலைவெள்ளி தடாலெனக் கீழே விழ  அவள் மீது  நானும் விழுந்து அவளை எழ முடியாதபடி  அவள் மீதே படுத்தேன்.. திடீரென ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது.. அவளும்  என்னை தள்ளி விட முயலாமல்  எனக்குக் கீழே படுத்தபடியே  என் முதுகைக் கட்டிப் பிடித்தாள்....என்னமோ ஒரு உணர்வில் சிறிது நேரம் அப்படியே  கிடந்தோம் -  அச்சமயம்  சண்முகம் வந்து சேர்ந்தான்.,,

 

அடியாய் சண்டய நிப்பாட்டுடிசண்முகம் குறுக்கிட்டு எங்களை விலக்கி விட்டான். அவன் எங்களை விலக்கியது எங்களுக்குப்  பிடிக்கவில்லை...மாலைவெள்ளி பொய்க்கோபமாக என்னைப் பார்த்து ..

 

“ஊட்ட  வாடா  வல்லா,,,ஒனக்கு செய்றன் வேல...” என்று  கறுவினாள்.. இரகசியமாக ஒரு வெட்கப் பார்வை பார்த்து...முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ... எனக்கும்...வெட்கமாக இருந்தது... “போடி..பொருக்கி ...” என்று  மெதுவாக நோகாதபடி ஏசிவிட்டேன்...

 

      சாந்தமாமா  கடைசியாகச் சுபைதாவுடன் வந்து   தொப்பலாகக் கரைசேர்ந்தான். சாரனை அவிழ்த்து முறுக்கிப் பிழிந்த பின் காய்ந்த களிசானைக்கட்டிக் கொண்டு ஆணையிட்டான்.

 

சரி  நடங்க..

 

      உடன்.., சகலமும் மறந்து, குளக்கட்டின் வழியே..   கரைவாகுவட்டையூடாக மேற்குக் கரைப் பக்கமா நடக்க ஆரம்பித்தோம். தூரத்தே நாங்கள் அடையவேண்டிய அந்த அழகிய கனவுப்பள்ளத்தாக்கு தெரிந்தது. உற்சாகத்துடன் புரன்தரை வழியே ஓடி நடந்தோம்.

 

இடையிடையே குறுக்கிடும் பெரு நாணற்புதர்கள்.. பூவரசு மரங்கள்.. மஞ்சோனா மரங்களின் உச்சியில் கர்வமாய் அமர்ந்து கூவும் குயில் கூட்டம்..  அங்கொன்று இங்கொன்றாக சாய்ந்த, மருது மரங்களில்.., கிளைக்குக் கிளை வர்ணக் கிளிகள்.. இனம்புரியாத நீண்ட மரங்களில்... தூக்கணாங்குருவிக் கூடுகள்.. ஓயாத ‘..கீச்சுக்கீச்சு...’க் கீச்சொலிகள்.. பகலிலும் இருட்டான அஞ்சிரா வாளைப் புதர்களிடையேவவுக்கும்..வவுக்கும்..என முனகும் வக்காப் பறவைகள்.. ‘விர்ர்ர்....’ரென்று காதருகில் கூட்டமாகச் சிதறிப் பறக்கும் ஊம்பிப் பூச்சிகள்.. வலதுபக்கமாக  காய்ந்த தாழைமடல் பற்றைகளுக்குள் சரசர ஊர்வினங்கள்.. பயமாகவிருந்தது.

 

எமது பாட்டுக்களையும் சலசலப்புகளையும் நிறுத்தி வாய்மூடி நடந்தோம்.. ‘புச்’செனத் தாவி  மறையும் சாம்பல் முயல்கள்.. மனிதரைக் கண்டாலே காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டிப் பறவைகளின் காச்சுக்காச்சுக்காச்சென்ற கர்ணகடூர எச்சரிக்கை ஒலிகள். தூரத்தில் கண்டதும் மறையும் நிலச் செண்பகங்கள்.. கலகலத்து மிரண்டோடும் காட்டுக் கோழிகள்.. சிறுமரக் கிளைகளிலிருந்து வெருண்டு மேலெழுந்து வர்ணமயமாய் சிறகுகள் விரித்தெழும் நீல மரங்கொத்திகள்..

 

 டுட்டீர்..டுட்டீர்..ரென்று குதித்துக் கீச்சிடும் உள்ளான் குருவிகள்.. எமக்குப் பயப்படாமல் சாவதானமாக நடந்து செல்லும் பேயாமைகள்.. இரண்டுகால்களில் நின்றுகொண்டு சிறுபுதர்களுக்கு மேலாக  தலைநீட்டிப் பார்க்கும் கருங்கீரிப்பிள்ளைகள்.. பீஉருட்டி வண்டுகளின் மேல் மினுமினுப்பு.. நிலங்களில் வளையெடுத்து வாசலில் எட்டிப் பார்க்கும் காட்டெலிகள்.. கறையான் புற்றுக்கள்.. உரிக்கப்பட்ட பாம்புச் சட்டைகள்..  

 

      எல்லாம் கடந்து வழி முடியுமிடத்திலிருந்து ஆரம்பமாகும் தரிசான வயல்வெளிகள். நூறேக்கர் கணக்கில் விஸ்தாரப் பெருவெளி.. ஊதிக் கூவும் பலமான  கொண்டல்காற்று.. மேட்டுநிலத்தின் அடர்நாணற் புதர்களைக் கடந்தபோது

 

எண்டம்..மோ..வ்..எ..பா..பா..!அலறினான் குண்டன்.

 

என்னடா..என்னடா..?’

 

ப...ஆ....ம்...பு....அந்தா பாரு.. சாந்தமாமோவ்..

 

பிரப்பம் பற்றைக்குள்ளிருந்து  பளபளக்கும் செம்மஞ்சள் கலரில் நீளமாக ஊர்ந்து வெளியே வந்தது  ஒரு  பாம்பு. தனது  ஒன்பதடி நீளத்தை அலையலையாக அசைத்தது. சற்று முன்னேறி எங்களை நோக்கி வந்தது.  துணுக்குற்றுப் போய் சற்று நின்றது. ர்ந்த தலையை உயர்த்தியது.  நிச்சயமாக எங்களைப் பார்த்தது.. திடீரென அதன் தலைப்படம்  அகலமாக விரிந்தது.  இருபிளவான அதன் நாக்குகள் பளிச்பளிச்சென வெளிவந்து வெளி வந்து மறைந்தன.  படத்தை மறுபுறமாகத் திருப்பி... இரு பக்கமும் ஆடியது.

 

எண்டம்மோ..வ்..

 

சிறுமிகள் மூவரும் வீறிட்டலறி திக்கொருவராக ஓடிப்பறக்க நானும் குண்டனும் பயந்தொடுங்கிப்போய்  சாந்தமாமாவின் பின்னால் ஒட்டி ஒளிந்துகொண்டு பார்த்தோம். சண்முகத்தைக் காணவேயில்லை. ஆனால்  சாந்தமாமா ஒன்றுக்கும் பயப்படவில்லை. சட்டென இரண்டடி துள்ளியோடி  ஒரு பெரிய கேட்டிக்கம்பை முறித்தான். சுழற்றி வேகமாக பாம்பை நோக்கி வீசினான். மேலும் படபடவென கைக்குக் கிடைத்த  கம்பு.., தடி,, கல்.. மட்டை முதலான எதனாலும் தொடர் தாக்குதல் நடத்தினான்  வெகுண்டெழுந்த பாம்பு அம்ம்..மாடி.. எட்டு அடி உயரத்திலிருந்து எங்களைப் பார்த்து.....ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸீறிக் கொண்டு ஒரே துள்ளலில் புதருக்குள் பாய்ந்தது. அதன் நீள வால் சரசரசரவென்று அலைந்தபடி முற்றிலுமாக உட்சென்று மறைந்தது.

 

வாங்கடியே..ய்.. டே.. சம்முவோ..ம்.. வாடா ! பாம்பு ஓடிட்டு

 

வாடா போவம்.. ம்மாடி.. என்ன பாம்புடாது.?’

 

“பொடையன் ...ல்லோடா .””

 

“ல்லடா ... சார...”

 

 

தொடர்ந்து நடந்து வக்காத்துக் குளம் வந்து சேர்ந்தோம்.  

 

௦௦

தொடர்ந்து நடந்து ஒரு காலத்தில் வக்காத்துக் குளம் இருந்த இடம் வந்து சேர்ந்தேன்.... இதுவா,,,? இதுவா,,, வக்காத்துக் குளம்.....?  குளம்  எங்கே...தாமரைகள்  எங்கே,,,,,பறவைகள்  எங்கே... தாவரங்கள்  எங்கே.....? என் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆட்கள்தான்  எங்கே.... வக்காத்துக் குளம் இருந்த இடம் ஒரு அரிசி ஆலை  தொழிற்சாலையாகி விட்டிருந்தது...உள்ளே பற்பல  தொழிலாளர்கள்... உறுமி  உறுமி  வரும்..செல்லும்  லொறிகள்....வாகனங்கள்......ஊறல்  அரிசியின் நாற்றம்.....ஒஹ் ,,........

௦௦

 

 

வக்காத்துக்குளம்….! முப்பதடி அகல நீள விஸ்தீரணத்தில்  தாமரை இலைகள் படர்ந்து நிறைந்திருந்த ஒரு நீர்க்குட்டை.  ஆஹா..என்ன அழகு.. சின்னச் சின்ன செந்தாமரைகள் கூம்பிய இதழ்களுடன்...நூற்றுக்கணக்கில்.. விரிந்தவை.. கூம்பியவை.. வாடியவை.. அன்றலர்பவை.. நேற்றிதழ்கள் விரித்தவை..என்று தாமரைத்தடாகத்தின் ஆட்சி..  அவற்றின் அகல இலைகள் குட்டையை மூடி  நீரில் ஆடின.. அதன் மேல் குந்தியிருக்கும் தவளைகள்.. நீண்ட ஊசிச் சொண்டுகளுடன் பூரம்குருவிகள்.. இடையிடையே ஊதா வர்ணத் தாழம்பூக்கள் நீண்டு நிமிர்ந்து கமகமத்து மணத்தன. பின்னணியில் தூரிகைதூரிகையாய்  ஆளுயரத்தில் கண்ணாரப் புற்கள்.. பீலிபீலியாக  மடல்வாழைகள்.. சல்பேனியாச் சல்லுகள்.. கரையோரம் முழுக்க  வர்ணமயமாகக் கருங் குரோட்டன் இலைச் செடிகள்.. பற்றைபற்றையாக  நள்ளிப் புற்களின் அடர்த்தி. அதற்குள்ளிருந்துகூ..ஹ்க்கூ..ய்.. கூ..ஹ்க்கூ..ய்..  டூட்டு.. டூட்டு..  சிக்கிக்சிக்கீஹ்.. சிக்கிக்சிக்கீஹ்..   பட்டீர்.. பட்டீர்.  . நங்ஙி..  நங்ஙி..   உள்ளா.. உள்ளா..என்றெல்லாம் ஆயிரம் வித ஒலிகளில் பற்பல ஜந்துக்களின் புகலிடம்.

 

ஒருத்தரும் சத்தம் போடக் கூடா

 

கண்டிப்பாகக் கட்டளையிட்ட சாந்தமாமா  தனது ஆயுதப் ொதியை அவிழ்த்து  கண்ணிவலை தயாரித்து  அதற்குள் இரை பரப்பி  இலக்கு தேடி..,  இரப்பரால் பொறிவெடிக்கல் வைத்து,, சிற்சில வேட்டை வியூகங்கள் வகுத்து..,  ஓ..ஹ்..! சாந்தமாமாவுக்குத்தான் எத்தனை மூளை..

 

      அன்று  இரண்டுமணி நேரத்துக்குள்  இருபது கீச்சான் பறவைகளும்,  பதினைந்து வக்காப்பறவைகளும், இரண்டு முயல்களும்,  பிடித்திருந்தோம். சாந்தமாமா  மாலைவெள்ளிக்கு மட்டும் விசேஷமாக ஒரு பெத்தம்மாக் கிளி பிடித்துக் கொடுத்ததைப் பொருட்படுத்தாதிருந்தோம்..  காரணம் வேட்டைப் பங்காக எமக்கே கணிசமானளவு பறவைகள் கிடைத்திருந்தன..

 

எனினும் சாந்தமாமா  மாலைவெள்ளிக்கு கொடுத்த அன்பளிப்பு  பற்றி கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. திரும்பி வரும் வழியெல்லாம் மாலைவெள்ளி கிளியை  பெத்தம்மா...பெத்தம்மா...” என்று கொஞ்சிக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொண்டே வந்தது  இன்னும்  கோபமாக  இருந்தது.... சாந்தமாமா மீது கோபமாகவும்  இருந்தது... இதே யோசனையாக வந்த போது மீண்டும்  சின்னக் குளத்தை கடக்கும் முறை வைத்து ஒவ்வோர் ஆளாக சாந்தமாமாக் கப்பலில்  கடக்கும் போது இக்கரையில் வைத்து மாலைவெள்ளி திடீரென என்னிடம் தன  கிளிக்குஞ்சை தந்துவிட்டாள் ...

 

“சதக்கா...இது  ஒனக்குத்தான்,,,,” என்றாள் ...

 

“ஏண்டீ..?” என்றேன் ...

 

“அப்பிடித்தான்,,,” என்று  ஒரு வெட்கப் பார்வை  பார்த்தாள் ...

 

ஏனோ...அந்தப் பார்வையுடன் நான் பரவசமாகி குதூகலம் திரும்பி  பெத்தம்மாவை என் நெஞ்சோடு  அணைத்துக் கொண்டேன்....

 

௦௦

 

     பாரமான  மனதுடன்  திரும்பி  நடக்கத் தொடங்கினேன்,,,,யார் யாரோவெல்லாம் கடந்து  சென்றனர்...எனக்குக் களைப்பு மிகுந்தது...சற்றுத் தூரத்தில்  இருந்த  ஒரு  ஹோட்டலை அடைந்தேன்.....நவீன  முறையில் ஹொட்-டோக்ஸ் ,,, கோகா குளிர்பானங்கள்....ம்ம்.. குஞ்சான் காக்காவின் வட்டக் கடை,,,அதில்  புளிச்சப்பம்...வட்டர்...ரசிக் ...சுடச் சுட  தேநீர்...எல்லாம்  மலையேறிவிட்டது...

 

     ஒரு கோலா வாங்கிக் கொண்டு வெளியில்  உட்கார்ந்தேன்...பக்கத்துக் கடையில் திரைப்பட சீ.டீ க்கள் விற்பனைக்கு அடுக்கியிருந்தன... பெரிய  போஸ்டர்களில்  யாரோ  முகமும்   பெயரும்  தெரியாத  நடிகர்கள்...மார்பு  திறந்த  முக  அழகற்ற நடிகைகள்... பார்க்கவே  சகிக்கவில்லை....

௦௦ 

 

     

 

படம் பாக்கயா.. சாந்தமாமா..? தேட்டருக்கா..?’

 

ஓண்டா.. அரசன் தேட்டருல புதுப்படம் வந்திரிக்கி.. எஞ்சியார்ர படம்..  ம்...  எங்க வீட்டுப்பிள்ளை!.----- எங்கள் வீராதிசூரக் கதாநாயகனின் படமா..?

 

எஞ்ஜியாரா..?’ –

 

ஓண்டா.. அந்தப் பாட்டு..  நா..ன்  ஆணையிட்டாஆஆல்.. அது நடந்து விட்டாஆஆல்;;.. – சாந்தமாமா பாடிக்காட்டடி பாட்டின் முடிவில் திடீரெனத் துள்ளித் திரும்பிஷ்ஷ்ஆஹ்-..என் மூக்கில் சொடுக்கி  காற்று நம்பியாரை இடித்துத் துவைத்து புரட்டி எடுத்துவிட்டு   திரும்பி எங்களைப் பார்த்து

 

 தவது செய்தவதை வித மாத்தேன்..என்றபோது  சாட்சாத் அந்த எம்ஜீயாரே எதிரில் நின்றார்.  சாந்தமாமாவின் நடிப்பில்  இலயித்து ஆர்வமீக்குற்றோம்.

 

செரி..செரி.. எப்ப சாந்தமாமா போற..?’

 

நாளைக்கி  சித்திரத் தேரு இளுக்கிற. தேரு பாக்கப் போறம் ண்டு சொல்லிட்டு சைக்கிள்ள போவம். ஆளுக்கு ஒரூவாக் காசி எடுத்துட்டு வாங்க.. எஞ்சியாருட  டவுளைட்டுப்படம். ரெண்டு எஞ்சியார் மெய் எஞ்சியாரு... மத்தது பொய் எஞ்சியாரு.. மெய் எஞ்சியாரு சாட்டையோட நிப்பாரு..

 

எம்ஜியாரு டபுள் அய்ட்டா’..?’

 

எனக்கிட்ட காசி  ல்ல.’  என்றாள் சுபைதா.

 

நாங் கோயிலுக்குப் போவனும்.. அப்பாம்மா விடமாட்டாங்கப்பா..என்றாள் பார்வதி.

 

நான்  இவளுஹள்  ல்லாம எப்பிடி வார..?’  மாலைவெள்ளியும் பின்வாங்கினாள்.

 

அதாஞ் செரி.. கொம்புளப்  புள்ளயள் வேணா.. நாம போம் சாந்தமாமா..

 

அதாஞ் செரி..

 

செரிஒப்புதலளித்தான் சாந்தமாமா.

 

நாஆன்  ஆஅணையிட்டாஆஆல்...

 

போடா மூக்கோடி..

 

போடி வங்கோடி..

 

லுக்குடி லூலி.. லுக்குடி லூலி..

 

மாக்கறுப்பா.. மாக்கறுப்பா..

 

      சிறுமிகள் பொறாமையால் ஏசிப் பிரிந்தனர். எங்கள் திட்டத்தை உடன் அமுலாக்கினோம். அடுத்தநாள் பூமரத்தடியில் உச்சிப்பகலில் சைக்கிளோடு தயாராகக் காத்திருந்தான் சாந்தமாமா.

 

வாங்கடா கெதியா.. காசி கொண்டாந்தயா..?’

 

ஆர்ர சாந்தமாமா சக்கிள்..? ‘

 

“எங்கட  மாமாட சைக்கிள் ..” சண்முகம்  பெருமையுடன் கூறினான்

 

டிங்.டிங்.. கொண்டாங்கடா  காசை.. செரி.. சதக்காவும் சமுவமும்  வாருல ஏறுங்கடா.. நீ குண்டா பின்னுக்கு கரியல்ல ஏறுடா..ஙா செரி..

 

      சாந்தமாமா விரைவாக சைககிளை மிதித்துச் சென்றான். வழி நெடுக எங்கவீட்டுப்பிள்ளை படக் காட்சிகளை இடையிடையே கதைவசனம் பாடல்களுடன் சொல்லி ஆர்வமூட்டினான். முக்கால் மணி நேரத்தில்  அரசன் தியேட்டரை அடைந்தோம்.

 

எல்லாம் ஒரே பிரமிப்பாகவிருந்தது. சாந்தமாமா என்ன ஒரு கெட்டிககாரன்.. அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில்  சிவப்புச் சேர்ட்டும் மஞ்சள் லோங்ஸ_ம் அணிந்து நீண்ட சாட்டையைத் தோளுக்குப் பின்னால் இருகைகளிலும் விரித்துப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நின்று சிரிக்கும் எம்ஜீஆர். அவரது மடித்து விடப்பட்ட அரைக் கை சேர்ட்டுக்குள் புஷ்டியான கைச்சந்து..  கீழே அடிபட்டு விழுந்து கிடக்கும் நம்பியார்.....  கற்களால் கட்டியெழுப்பிய மாதிரி எழுத்துகளில் எங்கவீட்டுப் பிள்ளை!. ஒலிபெருக்கியில்  சினிமாப் பாடல்கள்.. திமுதிமுத்த சனங்கள்.. முதலாம் இரண்டாம்,,, களரி வரிசைகள் பிதுங்கி வழிந்தன..

 

ம்மாஆஆடி.. என்ன சனம்.. நமக்கு டிக்கட்டுக் கெடைக்கிமா சாந்தமாமா..?’

 

டெ... நான் போய் டிக்கட் எடுத்திட்டு வாரன்.. நீங்க மூணுவரும் அந்தா பாரு தேட்டரு முன் விராந்தையில ஒட்டியிரிக்கிற அந்த புளக்குகளப் பாத்துட்டு நில்லுங்க.. அங்கஞ்ச போய்ராதங்க.. செரியா..

 

      எச்சரித்துவிட்டு சாந்தமாமா முதலில் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய் டிக்கட் எடுத்து வைத்துவிட்டு  களரி வரிசைக்குள்  கம்பிவேலி ஊடாக சட்டவிரோதமாக  வீறாப்புடன் உட்புகுந்து வரிசை நடுவில்  களேபரங்களுக்கு மத்தியில் இடம் பிடித்ததை மட்டற்ற மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

 

சற்று நேரத்தில் சாந்தமாமா வரிசையில் நெருக்கியடித்த சனங்களுடன் ஏதோ வாக்குவாதப்பட்டு தனது கிளிக்கத்தியை எடுத்து விசுக்கிக் காட்டி  நெருக்கி நெருக்கி இடம் எடுத்து வரிசையின் முதலில் இடம் பிடித்ததைக் கண்டு துள்ளிக் குதித்துக் கொண்டாடினோம்.  அடுத்து பத்தே நிமிடத்தில் சாந்தமாமா  மூண்டு அரை டிக்கட்டும் ஒரு முழு டிக்கட்டுமாக  தொப்பலான வியர்வையுடன் வந்து சேர்ந்தான்.. சிரித்தான்..

 

எப்பிடி.. பாத்தியளாடா.. குண்டா.. டிக்கட் கெடைக்கிமா..ண்டாயே..? எப்பிடி..?’

 

சாந்தமாமா நீ மெய்யா மெய்யா எஞ்சியாருதான்..

 

அதை பெருமனதுடன் ஏற்றுக் கொண்ட சாந்தமாமா  முன் களரி வாசலின் உடாக தியேட்டருக்குள் கூட்டிச் சென்றான். ..அம்மா..டி.. எத்தனை பெரிய  வெண்திரை.. எத்தனை கதிரைகள்.. வாங்குகள்.. கொஞ்சமாய் இருட்டு.. உள்ளே சனங்கள் வந்து கொண்டிருந்தனர்..  எங்களை வாங்கில் வசதியாக உட்கார வைத்த சாந்தமாமா தியேட்டரைப் பற்றி சற்று முன்னறிவித்தல் சொன்னான்.

 

டே.. அதப் பாரு.. அதான் வெலுக்கணி’.. மேலூடு.. காசி கூட.. கீழுக்கு வெஸ்ற் கிளாசி’.. அதுக்குப் பொறகு.. செக்கன். கிளாசி. நாம இரிக்கிற களரி’. அந்தா தெரியிது பாரு.. மூணு ஓட்டை.. அதாலதான் மிசின’; படம் காட்டும்..  இந்தத் தெரையில் படம் ஓடும்.. பாரன்.. எஞ்சியாரு வெருவான்.. பாரன்..

 

அந்த ஓட்டையாலயா சாந்தமாமா எஞ்சியாரு வெருவான்..?”

 

ஒண்ட குண்டு வாய்க்குள்ளால வெருவான்.. மடயா..! தெரையில் பெரிசா எஞ்சியாரு வெருவான் பாரேன்.. தொப்பிகூலிங்கௌh’; போட்டு  சப்பாத்தும் போட்டு.. முதக் கட்டத்துல ஓடி வெருவான்.. சண்டக் கட்டம் மூணு இரிக்கி.. பாரன் நம்பியாரு வெருவான்.. கடசிச் சண்ட கப்பலுக்குள்ள இரிக்கி.. நாக ஸிம் இரிக்கான்.. நம்பியாரப் பாத்தா பயந்து மூத்திரம் வெரும்.. ப்பிடி உருட்டுவான்..

 

      திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னரே முழுக்கதையையும் சொல்லிவிட்டான்.. எங்கள் சுவாரஸ்யமும்  எதிர்பார்ப்பும் இரண்டு மடங்;காகி விட்டன..  வியர்த்து வழிந்தது.  கிணுகிணுவென்று மணி அடித்தது.

 

மூண்டாம் வெல்லும் அடிச்சிட்டான்.. படம் ஓடப் போகுது..

 

      சாந்தமாமா அறிவித்தான். உடனே முழுத் தியேட்டரும் கடும் இருட்டானது..  ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று மூன்று ஒளிக்கற்றைகள்  ஊடுருவித் திரையில் பரவின. திடீரெனத் திரையில் கறுப்பாக ஒரு அறிவித்தல் விழுந்தது.  முக்கிய அறிவித்தல்.. படம் பார்த்து முடியும் வரை உங்கள் டிக்கட்டுகளை கவனமா...வாசித்து முடிப்பதற்கிடையில் சட்டென்றுபுஸ்ஸ்ஸென்ற விநோத ஒலி காதுகளை கிழிக்க படீரென்று திரைக்குப் பின்னாலிருந்த  ஒலிபெருக்கியில் வாத்தியங்கள் ஒரு சேர அதிர  வெண்திரையில் சிவப்பு எழுத்துக்களில்புரட்சி நடிகர் எம்.ஜீ.ஆர். வழங்கும்என்ற எழுத்துக்கள் மின்னின. உடன் தியேட்டர் முழுக்க  கூ..ய்..ய்யா.ஸ்;ஸ்’  விசில் ஒலிகள் காதுகளைக் கிழித்தன.. சாந்தமாமா டெல்டா டொபிப் பேப்பரில் வாய் வைத்து  விசித்திரமாக  உய்ய்ய்யென்று அதிரொலி  எழுப்ப- எம்ஜீஆர் காட்டுக்குள்ளிருந்து வேகமாக  ஓடிவந்து கொண்டிருந்தான்.

 

 

      வாழ்க்கையில் பார்த்த முதல் திரைப்படம் முடிந்து நாங்கள் ஓரளவு மாலைக் கருக்கிருட்டில் ஊருக்குத் திரும்பி வந்த போது  என் தந்தையும் குண்டனின் முரட்டு மாமாவும்  கண்ணாரப் பெரியானும்  கைகளில் முறையே பெரிய தடியும் பிரம்பும் பழைய தும்புக்கட்டுமாக எங்களை வரவேற்கத் தயாராகக் காத்திருந்தனர்.

 

     அன்று முழுவதும் வாங்கிய அடியின் தழும்புகளும் வலியும் சிறுமிகளின் கேலியும்  கிண்டலும்....எம்ஜியாரின்  படம் பார்த்த பெருமையில் மறைந்து போயின...

 

௦௦

பொங்கி வழிந்த சிந்தனைகளால் மனம்  பேதலித்து  விட்டிருந்தது.. திடீரென  சி டி கடையிலிருந்து கர்ண கடூரமான  ஒரு இசை ஒலி செவிகளை  அதிரடிக்கவே சட்டென் எழுந்தேன் ... பணம் செலுத்தி விட்டு மறுபடி  எங்கே செல்வது  என்ற உத்தேசமின்றி நடக்கத் தொடங்கினேன்..

 

யாரோ  ஒரு  சிறுவன் தன தங்கைக்கு  ஒரு  சிறிய சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான்... விர்..விர்ரென  விரையும்  வாகனச் சாலையில்  அவர்களின்  சைக்கிள் பயிற்சி கண்டு  எனக்கே பயமாகவிருந்தது...ஒஹ்...சைக்கிளே பிரதான வாகனமாயிருந்த  அந்தக் காலம்.......?

 

௦௦

 

      குஞ்சித்தம்பி ஆலிமின் வீட்டு முற்றத்தில்  ஒரு நாள் எங்களுக்குச் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொடுத்தான் சாந்தமாமா. முதலில் மாலை வெள்ளியை சீற்றில் உட்கார வைத்து ஆரம்பித்தான். எங்கள் முறை வருமட்டும் நாங்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்..

 

மாலைவெள்ளி எடுத்த எடுப்பிலேயேசீற்றில் உட்கார்ந்து  தப்புத்தப்பாக ஹெண்டிலை’  ஆட்டியபடி  மிதித்து வர சாந்தமாமா பின்னால்  ‘கரியரைப்’  பற்றியபடி சமநிலைப் படுத்தியவாறு  ஒடி வந்து கொண்டிருந்தான்.. இப்படியே மூன்றாவது தடவை வரும்போது  ‘சடாரென  மாலைவெள்ளி அலறிக் கொண்டு  சைக்கிளிலிருந்து குதித்தாள். கீழே விழுந்தாள். சுருண்டாள்.. எண்டம் மோ..வ்..என்று முனகிக் குளறினாள்.  நாங்கள் பயந்து போய் அவளைச் சூழ்ந்தோம்.

 

என்னடி..ன்னடி மாலவெள்ளி.. என்னடி..?

 

உளுந்துட்டியாடி.. காயமா..? காட்டடி..

 

எண்டம்மோ...வ்..

 

மாலைவெள்ளியின் கால்களிலும் பாவாடையிலும் திட்டுத்திட்டாய் இரத்தக் கறைகள் தெரிந்தன. நாங்கள் பயந்து போனோம்.  எதற்கும் இலேசாகப் பயந்து விடாத  சாந்தமாமாவே  சற்றுப் பயந்தபடி  சொன்னான்.

 

டேää  இவள் மாலவெள்ளி  சக்கிள்ள உள ல்லடா.. அவளாத்தான்   டும்முண்டு துள்ளிட்டாள்.

 

ஓம்டா.. என்னடி செய்யிது மாலவெள்ளி..? நீயாத்தானே உளுந்த..!

 

மாலைவெள்ளி பதிலேதும் பேசாது சற்று நேரம் முனகித் துவண்ட பின்  திடீரென எழுந்து தன் வீட்டை நோக்கி   வயிற்றைப் பொத்தியபடி விரைவாக ஓடினாள்.

 

 டியே.. மாலவெள்ளி...!  மாலவெள்ளி..!!

 

என்று கத்திக் கூப்பிட்டபடியே பார்வதியும் சுபைதாவும் அவளின் பின்னே ஓடினர். நாங்கள் நன்றாகப்  பயந்து போனோம்.  மாலைவெள்ளி வீட்டுக்குப் போய் தனது  சின்னப்பா  உச்சுள்ளியனிடம்  சொல்லிக் கொடுத்து கூட்டி வருவாள் என்ற குண்டனின் இரகசிய கிசுகிசுப்பை நம்பிய நானும் சண்முகமும் குண்டனும் சாந்தமாமாவைக் கைவிட்டு  திடுதிடுவென அவரவர் வீட்டை நோக்கி ஒட்டமெடுத்தோம்.. உச்சுள்ளியனுக்கும் சாந்தமாமாவுக்கும் நிகழப் போகும்  சண்டையைப் பார்க்க  தைரியமில்லை எங்களுக்கு. ஆனால் நாங்கள் நினைத்தபடிää எதுவும் நடக்கவில்லை.

 

      அடுத்தநாள் நாங்கள் கறுத்தம்மாவின் பாழ்வளவில் சந்தித்த போதும் விளக்கம் ஒன்றும் தெரியவில்லை. பார்வதியும் சுபைதாவும் மட்டும் வந்தனர். மாலைவெள்ளி வரவில்லை.  ஆர்வமுடன் சிறுமிகளைச் சூழ்ந்தோம்.

 

மாலவெள்ளிக்கு என்னடி நடந்த..?’

 

ஒண்டுமில்லடா..

 

காயம் எங்கடி..பெரிசா..?’

 

ல்லடா..

 

அப்ப எரத்தம்..?’

 

தெரியா’   என்ற சுபைதா  வெட்கத்துடன் பார்வதியப் பார்த்தாள். இருவரும் ஏதோ இரகசியம் பகிர்ந்து கொண்டு சிரித்தனர்.  சண்முகம் கோபமடைந்து பார்வதிக்கு கிள்ளி விட்டான்.

 

ஏண்டி சிரிக்காய்.. சொல்லண்டி  கச்சக்கட்டு..!

 

எனக்கித் தெரியா..  மாலவெள்ளி  பெரியபுள்ளயா ஆய்ட்டாளாம்டா.. அவட ஊட்டுல கதச்சாஹ..

 

பெரிய புள்ளயா..?  அதென்னடி..?’

 

தெரியாடா   மாக்கறுப்பா..!   பெரியாக்கள் அப்பிடித்தான் சொன்னாஹ..

 

அதெப்பிடிடா சம்முவம்..  நம்மள் மட்டுக்குத்தானே இருந்தாள். திடீருண்டு பெரிய ஆளா எப்பிடி ஆகுவாள்..?’

 

அதானே.. எப்பிடிரா  குண்டா..?’

 

எனக்கென்னடா தெரியிம்..?  சாந்தமாமாக்கு தெரிஞ்சிரிக்கும். வெரட்டும் கேட்டுப் பாப்பம்..

 

நாங்கள் அடங்கமாட்டாத  ஆர்வமுடன் சாந்தமாமாவுக்காகக் காத்திருந்தோம். சற்று நேரத்தில் சாந்தமாமா வந்து சேர்ந்தான். கையில் சில சினிமா பாட்டுப் புத்தகங்கள் வைத்திருந்தான்..ஆனாலும் முகம் கறுத்துப் போய் வாடியிருந்தான்.

 

ஙா..சாந்தமாமா..!  சாந்தமாமா..

 

சாந்தமாமா..! மாலவெள்ளி பெரியபுள்ள ஆய்ட்டாளாம்.. அதெப்பிடி சாந்தமாமா.. உன்னப் பாக்கயும் பெரிய ஆளா ஆய்ட்டாளா எப்பிடி..?    உன்ன விட உசரமா ஆய்ட்டாளா..?’

 

என்னடா..? ஆரு சொன்ன..?;’

 

சாந்தமாமா எங்களை விசித்திரமாகப் பார்த்தான். ஓன்றும் பேசவில்லை. என்னவோ முணுமுணுத்தான். ஓன்றும் விளங்கவில்லை. பின்னர்

 

இனி மாலவெள்ளி நம்மோட வெளையாட வெர மாட்டாள்.. அவளுக்கு இனி கலியாணம் முடிப்பாஹ.  புள்ளப் பொறுவாள்.. அதான் பெரியஆளாகிற !

 

சாந்தமாமரின் விளக்கத்தால் பெரிதாக ஒன்றும் புரியாவிட்டாலும்  இனி மாலைவெள்ளி எங்களோடு விளையாட வர மாட்டாள் என்ற செய்தி எல்லோரையும் விட எனக்குத்தான் மிகக் கவலையளித்தது. அவளைக் காண வேண்டும் என்ற ஆவல் துறுதுருத்த்து.... மனதுக்குள்  ஆயிரம்  கற்பனைகள் சிறகடித்தன...

 

அப்ப.. இனி நாம அஞ்சி பேருந்தானா சாந்தமாமா வெளையாடுற..?’

 

ல்லடா.. நீங்க நாலு பேருந்தான்.. ஏனுண்டால்  நானும் போகப்போறன்..

 

நீயுமா..?  எங்க..?  நீயும் பெரிய ஆளாய்ட்டியா சாந்தமாமா..?’

 

சாந்தமாமா வருத்தப்பட்டுச் சிரித்தான்.

 

அப்பிடித்தான்..  என்ட தாத்தி வந்திரிக்காரு.. போடியாருட வீட்டுல இருக்காரு.. என்ன என்ட சொந்த ஊருக்குக் கூட்டிப் போக வந்திரிக்காரு.. நான் இனி எங்கட  ஊருல  என்ர  அம்மே தாத்தேவுடன் இருக்கப் போறன்.

 

என்ன..?  பொய்..பொய்..

 

ல்லல்ல.. மெய்தான்..

 

இப்படி ஒரு அதிர்ச்சியான பிரிவுச் செய்தியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. சாந்தமாமாவும் பேசாமல் நெடுநேரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.. எங்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. சாந்தமாமா இல்லாத விளையாட்டா..?  சாந்தமாமா இல்லாத வயல்வெளிகளா..?  சாந்தமாமா இல்லாத ஊரா..?

 

௦௦

 

ஆனால் என்னவோ அதுதான் நடந்தது. திடீரென்று ஒரு நாள் சாந்தமாமாவைக் காணவி;ல்லை.. அவனை அவனது  பெற்றோர்கள் கூட்டிச் சென்றுவிட்டதாகக் கண்ணாரப்பெரியான் தெரிவித்தான். எங்களுக்குள்   கவலை வெடித்து இரகசியமாக இரவுகளில் அழுதோம்.

 

வேறு வழி ஏதுமின்றி குழந்தையனின் விறாந்தையில் சாந்தமாமாவும்..மாலைவெள்ளியும் இல்லாமல்  தனித்து விடப்பட்டிருந்தோம்.. ?   சாந்தமாமா எங்கே போனாய்..?  மாலைவெள்ளி இனி  உன்னைக் காண்பதெங்கே...?  உற்சாகமின்றி நாட்கள் ஓடிக் கொண்டுதானிருந்தன.

 

 நாங்கள் ஏழாம் வகுப்புக்குச் சித்தியடைந்த அந்த நாளில் திடீரென சுபைதாவும் பெரியவளாகி வீட்டிலடைந்தாள்.. பார்வதியும் எம்மோடு வருவதில்லை.   நானும் சண்முகமும் குண்டனும்  சிலகாலம் கூடித் திரிந்தோம். அதற்கும் கூடச்சோதனை காலம் வந்தது.  என்னை  மட்டக்களப்பு மாநகர பாடசாலையில் விடுதியில் சேர்த்து விட்டார்கள்..  குண்டன் எங்கோ ஒரு துவிச்சக்கரவண்டிக் கடையில் வேலைக்கு அமர்ந்து விட்டான். சண்முகம் யாழ்ப்பாணத்தில் அவனது பெரியண்ணா வீட்டுக்குக்   குடிபெயர்ந்து  விட்டான் இப்படித்தான் எங்கள்  கனவுக்காலம் ஒரு முடிவுக்கு வந்தது.

 

|0

 

            மாற்றங்கள் மட்டும்தானே மாறாதிருக்கின்றன.   வாழ்க்கையில் உறவுகளின் இணைப்புத்தளங்கள் மாறுகின்றன.  காட்சிகளும் கோலங்களும் மாறுகின்றன.. உறவுகளின் நிறங்களும் மாறுகின்றன.  உடல் மாற்றம் நம்மை அறியாமலேயே நமது வயோதிபத்தை பதித்து விடுகிறது.  

 

மட்டக்களப்பு மாநகரத்திலிருந்து நான் சாய்ந்தமருதுக்கு தவணை விடுமுறைகளில் வரும் போதெல்லாம்  பால்ய எமது நண்பர்கள் எவரையும் சந்திப்பதே  இல்லையெனலாம். காரணம் மாலைவெள்ளியும் சுபைதாவும் யார்யாரையோ திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கித் தொலைந்து போயிருந்தார்கள். பார்வதியும் திருமணமாகி தனது கணவனின் ஊருக்குப் போய்விட்டிருந்தாள். சண்முகம் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு போதும் திரும்பி வரவில்லை.  

 

குண்டன் மட்டுமே ஊரிலிருந்தான். அவனும் சொந்தமாகச் சைக்கிள் கடை போட்டு  மிக வேலையாக இருந்தான். அபூர்வமாகச் சந்திக்கும் போது ஒரு புன்னகை..  சிறு நல விசாரிப்பு.. அவ்வளவுதான்..  எங்கள் ஆறுபேரிலும் எவருக்கும் எவருடனும்  ஒரு சிறு தொடர்பு கூட இருக்கவில்லை. பழைய கதைகளைச் சொல்லி மகிழ ஆட்கள் இல்லை.  அந்தக் கனவுக்கால உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு இதயமும்    தொடர்பில்  இல்லை.  

௦௦ .

 

 

 

படித்துக் கிழித்து பரீட்சைகளோடு மல்லுக்கு நின்று.. ஒரு வழியாகத் தேறி.. அதிலேயே இருபது வருடங்கள் பறந்து விட்டன.. அந்த வளரிளம் பருவம் முழவதுமே  விரைவில். பொசுங்கிய கனவுகளாய்ப் போயொழிந்தன.. பின்னர் சிலிர்த்தெழுந்த  வாலிபக் காலம்.. வேறு நண்பர்கள்.. வேறு தளங்கள்.. வேறு வேறு உறவுகள்.. வீணாண சிரிப்புகள்.. இரகசிய விசும்பல்கள்..  பாலியல்த் தேவைகள்.. விரக தாபங்கள்.. கொதிக்கும் கனவுகள்.. இப்படிச் சில காலங்கள்..

 

.  உலகத்தின் சராசரி மனிதரைப் போல அடுத்த கட்டத்தில் திருமணம். புது மனைவி.. அவளை முழுவதுமாகப் புரிவதற்கிடையில்  அவள் பழைய அதிகாரியாகி.. அவளது சொந்தங்கள்.. நமது சொந்தங்களாகிச் சுமக்க வைத்த அநாவஸ்ய சுமைகள் தாங்கி.. பிள்ளகைள் பெற்று.. அவற்றின் சுமைகளோடும்..  பிள்ளைகளின் பிள்ளைகள்.... பந்தக் கடிவாளங்கள் அறுபடாமல் காலக்குதிரை மேலும்  தலை தெறிக்க.. இன்னும்  எத்தனையோ  வருடங்கள் ஒடிக் களைத்து விட்டது எத்தனையோ வித விசித்திரங்களுடன்..............

 

“ஹேய்...தள்ளிப் போ...!”

 

என்று யாரோ கத்திய  குரலில் திடுக்கிட்டு சிந்தனை கலைந்தேன்....ஒரு பாரவண்டிக்காரன் என்னவோ  சொல்லி  எனக்கு  ஏசினான்,,கடூரமாக  ஹோர்ன் ஒலித்து  கோபத்தைக் காட்டினான்...

 

“ஒஹ்...வெறி  சொறி ,,”

 

என்று  பாதையை விட்டு விலகினேன்... யோசனையின் ஆழத்தால்  நடு வீதியில்  இறங்கிவிட்டேன்  போலிருக்கிறது.....

 

     இனி  நடை   சரிவராது... வீட்டுக்குத் திரும்புவோம் என்று  முடிவு செய்து கொண்டு... .திடீரென  எந்தப் பக்கம்  செல்வது  என்றே  தெரியவில்லை... ஒரு கடையின்  ஓரத்தில்  நின்று கொண்டு  திசையை  அனுமானித்தேன்...பத்து நிமிடமாயிற்று....ஓரளவு மதிப்புத் தெரிந்து...வீட்டை  நோக்கி  நடக்க  ஆரம்பித்தேன்....

 

இந்த  ஊரை  அறவே  பிடிக்கவில்லை.... மனிதர்களையும்தான் ... அன்று வாழ்ந்த  அந்த  கிராமத்த்து  மனிதர்கள்தான்....ஒஹ்...எந்தனை  அன்பாளர்கள்....அமைதியானவர்கள்....

 

தேநீர்கடை மம்முறாயீன்...டாம் விளையாடும் தங்கொடையான்.. மரமேறிஉச்சுள்ளியன் ...சதா வெற்றிலைசாறு  வழியும்  வாயுடன்  முட்டாய்க்கார வெள்ளத்தம்பி...விளையாட்டுச் சாமான்  கடையுடன் லாஇலா....அழுக்குத் துணி  மூட்டையுடன்  காத்தான்...மகள் கருத்த வண்டு....கண்ணாடிக் கைப்பு விற்கும் சீனிம்மா....நைஸ் விற்கும் பீக் கிழவி ...போக்கட்டுப் பிச்சைக்காரி... டப்டோஸ் தங்கம்மா,,,,ஒரு கையில் மட்டுமே  சேர்ட்  அணியும் தம்பிராசா... வண்டிக்காரப் பொறுக்கன்,,,தங்கப்போறால மேசன்....ஒஹ்....எங்கே  இந்த  மனிதர்கள்.....? மண்ணோடு மண்ணாகி கிராமத்தின்  மண்ணாகவே கலந்து விட்டனரா....?   உடனடியாக  சாந்தமாமாவை  அல்லது குண்டனை  சந்திக்க வேண்டும்......

 

 

௦௦

 

என் உறவினர்களிடத்தில் சொல்லி எங்கெங்கோ விசாரித்து சாந்தமாமாவின் இருப்பிடம்  அறிந்து  அவனை  வரவழைக்க  ஓடோடி வருவான்... ஆச்சரியப் படுவான்... கத்திக்கட்டிக் கொண்டு  அழுவான்...அன்பு மீக்குற்றுக் கண்ணீர் விடுவான்  என்றெல்லாம்  ஆயிரம்  கற்பனைகளோடு நான்  என்னைத் தயார் செய்து  கொண்டு  காத்திரூக்க-

 

ஒருத்தர் கூட வரவில்லை.....அரைகுறையான  செய்திகள்  மட்டுமே  வந்து  சேர்ந்தன... என்  உறவினர் ஒரு கிழவரை கூட்டிக் கொண்டு  வந்திருந்தார்..

 

“நீங்க  கூட்டிவரச் சொன்ன ஆட்களை  விசாரித்துப் பார்த்தேன்...யாரையும்  யாருக்கும்  தெரியவில்லை...இவர் நம்மட  காக்கா முறையானவர்... பழைய ரைவர்.. சில  விபரங்கள்  சொன்னார்...இவரை  ஞாபகம்  இருக்குமோ  உங்களுக்கு,,,>”

 

அந்தக் கிழவரை  எனக்கு சரியாக  ஞாபகம்  வரவில்லை...என்னை விட  சில வருடங்கள்  மூத்தவராக  இருந்தார்........

 

“நான்... சீனிமண்டையன் ரைவரு....!” என்றார். எனக்கு  ஓரளவு ஞாபகம்  வந்தது...அவரது EN 1212 மைனர் கார் சட்டென  நினைவில்  பளிச்சிட்டது... அவரிடம் என்  நண்பர்களை  விசாரிக்க  ஆரம்பித்தேன்... மனிதர்  படு கிழவராக  இருந்தாலும் ஞாபக சக்தி நன்றாக  இருந்தது... வக்காத்துக் குளத்தின்  கடைசி விதை....

 

“தம்பி  நீங்க  கேட்கிற  ஆட்களை தெரியும்.. .எல்லாரும்  மொவுத்தாகிட்டாங்க.எண்டு  நெனைக்கன் .....ஒத்தரும்   உசிரோட  இல்லப் போல... சாந்தமாமா  சிங்களப் பொடியன்...கண்காலத்துல  இஞ்ச  இருந்து  ஊரைவிட்டு போயிட்டான். ...அப்புறம்  காணயில்ல.... அவன்ட  வெசயம்  ஒண்டும்  தெரியா..... பார்வதிய  தெரியும்  நம்மட  காத்தாண்ட  மகள்...ல்லோ..? அவள் அஞ்சாறு  வருசத்துக்கு  முன்ன  புரிசனோட  பஸ்ஸில போகேக்க  குண்டு வெடிச்ச்த்துல செத்துட்டாள்..”

..

“என்ன  பார்வதி  செத்துட்டாளா...?”

 

“மத்தது...குண்டன்,,,,ஊவாயண்ட மகன்...  அவன் காத்தான்குடிக்கி  போகேக்க எடையில குருக்கழ்மடத்துல வெச்சி  கடத்திட்டானுகள்,,, மையித்தும்  வெரல்ல......”

 

“ஒஹ்...கு..கு..குண்டனையா,,,,அப்//போ...அவனும்  இல்ல...?”

 

“ஓம் தம்பி...அவள்  அங்காலக் காக்காட மகள் மாலவல்லியும் .ரெண்டு  புள்ளயளும்  புருசனும்  சுனாமில போயிட்டாங்க......அக்குபர் பள்ளியில  அடக்கியிருக்கி....”

 

நான்  நெஞ்சைப்  பொத்திக் கொண்டேன்...தொடர்  அதிர்ச்சிச் செய்திகளால்..என் மார்பின்  தசைநார்கள்  எகிறித் துடித்தன...இரத்த நாளங்கள் பம்மி  எழுந்தன....

 

“சம்முவம் எண்டு ஒருத்தனக் கேட்டியே... அவன்  கண்ணாரப் பெரியாண்ட  மருமகந்தானே... அவன்  கனகாலத்துல  இயக்கத்துல  சேர்ந்து போயிட்டான்,,,,இருக்கானோ  செத்துட்டானோ  தெரியா....”

 

:....................................”

 

“நீ  கேட்ட  சுவைதா  என்கிறவள் மாக்குடிச்சாண்ட  பேர்த்தி..ல்லோ....அவளும் அஞ்சாறு தரம்  வெளிநாட்டுக்கு  போய் வந்தாள்...ஊடு கீடேல்லாம்  கட்டி  மகளுக்கு  மாப்புள்ள எடுத்துட்டு... போன  வருசந்தான்  சீனி கூடி வருத்தப் பட்டு   கொழும்புல  மவுத்தாகி,, அங்கான்    அடக்கின...”

 

“.....................................”

 

~வேற  ஆரக்  கேட்கணும்  தம்பி...? எனக்கி  வீடி  வாங்க யும்  காசில்ல...குளிசையும்  வாங்கணும்...கையில  ஒண்டுமில்ல...ஹி...ஹி...”

 

நான்  என்னையறியாமலே  எழுந்து விட்டேன்... சேர்ட் பொக்கற்றுக் குள்ளிருந்த எவ்வளவோ தெரியாது...பணத்தை அள்ளி கிழவனிடம்  கொடுத்து விட்டு....மன அழுத்தம் கூடவே...சட்டென  உள்  வீட்டுக்குள்  சென்று  கட்டிலில்  சாய்ந்து விட்டேன்............

 

௦௦

 

 

            நான் வந்த வேலை முடிந்து விட்டது,,, முறைப்படி  ஒப்பமிட்டு வீடு வளவை  ஒப்படைத்தாகிவிட்டது... அடுத்த நாளே  கனடா செல்ல  கொழும்புக்குப் புறப்பட்டு விட்டோம்...வக்காத்துக்குளத்துக்கும்  எனக்கும்  இனி  எந்தத் தொடர்பும்  இல்லை... மனது  கனத்தது......என்ன  ஒரு  விசித்திரமான  வாழ்க்கை.....! .ச்சே...

 

௦௦

 

வாழ்வின் ஒவ்வொரு நாளும் பற்பல விசித்திரங்களில்தானே கழிந்து வருகிறது.  பாருங்களேன்.. சிதறிப் பறக்கும்  துப்பாக்கிக் குண்டுகள்  ஒழிந்திருந்து வெடிக்கும்  கிளமோர்வெடிகள்  புதைந்து மறைந்திருக்கும் கண்ணிவெடிகள் கண்காகாணா இடத்திலிருந்து ஏவப்படும் ஷெல்கள்  நேரடியாகச் சீறியெழும் மல்டிபரல்கள்எல்லாவற்றையும் அறிந்து கொண்டே  தொழிலுக்காக வீதிகளில் ஓடுகின்றோமே.. முட்டாள்தனமான சாரதிகளுடன் ஒன்றாக சாலைகளில் பயனிக்கின்றோமே..

 

 சுனாமியை எதிர்பாராது கடற்கரைகளில் குடியிருக்கின்றோமே.. பொருந்தாத துணைவர்களுடனும் பரஸ்பரம்  அன்பு கொள்கிறோமே..   வல்லரசுகளின் அணுக்கழிவுகள் பிரபஞ்சத்தில் பரவும் போதெல்லாம் அதைச் சுவாசித்துக் கொண்டும் உயிர் வாழ்கிறோமே..  எதில் விசித்திரம் இல்லை..?  

 

பொதுவாக நாமே ஒரு விசித்திரமான படைப்புத்தானே.. மனிதன் இறைவனின் கேலிச்சித்திரம் எனக் கவிஞன் வர்ணித்ததில் என்ன பிழை..? இத்தனை விசித்திரங்களுக்கிடையில்  வக்காத்துக் குளத்திலிருந்து விரக்தியான எண்ணங்களை அள்ளிக் கட்டிக் கொண்டு  கொழும்பு திரும்பும் வழியில் என்னருமை சாந்தமாமாவைச் சந்திப்பேன் என்று  யாரால்  கற்பனை செய்திருக்க  முடியும்...? 

 

 

            இனியொரு போதும் பார்க்கமுடியாதென்று தீர்மானித்து சாந்தமாமா என்ற  போல்டரை  எது அடிமனது என்ற ரீசைக்ளோபின்னுக்குள் புதைத்துவிட்டு மறந்திருக்கையில்  நான் அதே சாந்தமாமாவை  தும்புளுவாவ என்ற ஊரில் பார்த்தேன் என்றால்...............?   இது இறைவனின்  திட்டமிடப்பட்ட  ஏற்பாடு என்பதில்  என்ன  சந்தேகம்.... ?

 

 

 

என்னுடைய மனைவி  மூத்த மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் சகிதமாக  வக்காத்துக்குளத்திலிருந்து காரில் கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். என் மகன்தான் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.  நாங்கள்  மஹியகங்கன ஊடாக வந்து கொண்டிருந்த போது மாலை மங்கிக்கொண்டிருந்தது. பரிபூரணமான தூய நிலா மலைகளுக்கு மேலாகப் பெரு வட்டமாக எங்கள் காரைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

சந்திர உதயத்துக்கும் சூரிய மறைவுக்கும் நடுவிலான இந்த மனநிறை காட்சியில் என் மனம் இறைமாட்சியில் மூழ்கிக் கொண்டிருந்தது.  தும்புளவாவ சந்தியை கார் அடைந்த போது   காரின்  முன் சக்கரத்தில்  காற்றழுத்தம் ஏற்பட்டு  வெடித்து விட்டது.

 

திடுக்கிட்டு அலறி விட்டோம்.  ஆனால் சுதாகரித்து மற்றவர்கள் சிரிக்க நான் மரணபயம் அடைந்தேன். காரை பாதையின் ஓரத்தில் நிறுத்தி   சக்கரத்தை மாற்ற  முயன்றபோதுதான் இந்த விசித்திர சந்திப்பு  நடைபெற்றது.

 

பொழுது இருட்டாகவே இருந்தது. ஆயினும்  கொஞ்சம் கொஞ்சமாக பூரணைசந்திர பரவ ஆரம்பித்தது...  சற்றுத் தூரத்திலிருந்த ஒரு சிறு குன்றில்  பெரிய ஒரு புத்த விகாரை தென்பட்டது.  வேறு குடியாட்டங்களைக் காணவில்லை.. புத்த விகாரையின் வெள்ளை நிறப்   பிரமாண்டமான   கோபுரத்தின் பின்னணியில்   மலைகளின் பிரமாண்டம் மனதை  கொள்ளை கொள்ளும் காட்சியாக  இருந்தது

 

 நான் காரை விட்டும் கீழே இறங்கி நின்றேன்.  மங்கலான வெளிச்சத்தில்  புத்த விகாரையின் பெயர்ப்பலகை தெரிந்தது.  சிறிமைத்திரி ரஜவிகாரை- ரஜமல்வத்த என்று  மும்மொழிகளிலும் எழுதப்படடிருந்தது. விகாரையின் பெயரை  தமிழில் கூட  எழுதியிருக்கிறார்களே என்று  வியப்பாக  இருந்தது

 

என்ன அழகான இடம்  அது.. மலைகளும்  மேகங்களும் தழுவும் இந்த ஊர்களின் காட்சிப் படிமத்தில் மனம் பரவசத்தில் இலயித்தது. மாலைப்பறவைகளின் ஒலிகள் தவிர. மற்றப்படி ஒரே அமைதி. விகாரை அமைந்திருந்த சிறு குன்றின்  மேல் இரண்டொரு புத்த துறவிகளின் நடமாட்டம் மங்கலாகத் தெரிந்தது.  குன்றின் அடிவாரத்தில் பிரமாண்டமான ஓர் அரச மரம்.. அதன் வியாபித்துப் பரந்த பாரிய கிளைகள்.. காற்றில் சலசலவென்று இலைகளின் சத்தம்..  குளிர்..  

 

அரச மரத்தின் அடியில் வெண்பளிங்குப் புத்தர்.  ஆழ்தியான வடிவச் செதுக்கல்.  சிலையின் தலைக்கு மேல்   நியோன் விளக்கின் வட்ட ஞானஒளி.. பீடத்தில் அகல் விளக்கு  வாடாத மலர்கள்..  பின்னால் பொட்டல் வெளி.. தூரத்தே விகாரையின் கட்டிடம்... மாட்சிமைமிக்க இறைவனின் ஆட்சியின் வெளிப்பாட்டு இரகசியங்களைப்  புரிந்து கொள்ள உதவும் எத்தனையோ விசயங்கள்.. தூரத்து விகாரையிலிருந்து மெதுவான சில பக்தி  சுலோக  உச்சாடனங்கள் கேட்க ஆரம்பித்தன..

  

நமோ..நமோ  தத்வய...

முஞ்ச  புரெ  முஞ்ச  பச்சதோ..

மஜ்ஜே முஞ்ச  பவஸ்ஸ  பாரஹ_

ஸப்பத்த   விமுத்த   மானஸோ..

நபுன  ஸாதிஜரங்  உபேஹிஸி..

 

நான் இந்த சுலோகத்தின் முழுப்பொருளை புரிந்து கொள்ள முயற்சித்தவனாக அதைப்பற்றிய சிந்தனை ஓட்டத்தோடு என் மகளின் எச்சரிக்கையையும் மீறி மெதுவாக நடந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தேன்.  எவ்வித நோக்கமுமின்றி குன்றின் மீது என் மூச்சிரைப்பு நோயையும் மறந்து  கொஞ்ச தூரம் ஏற ஆரம்பித்தேன்

 

வாழ்க்கையின் கசப்பை மூடியிருக்கும் கவர்ச்சியான ஆசையைப் போல..  பாதங்கள் மலை வீழ்ச்சி ஓடையின் நீரில் சிலீரிட்டுக் குளிர்ந்தன.. அச்சமயம்  எனக்கு ஏதேதோ  இறை ஞாபகங்கள்..

 

நான்..? உண்மையில் யார்..? திடீரென என் மனம் என்னை அதட்டிக் கேட்டது.. இது முன்னரும் பல தடவைகள் கேட்டிருந்தாலும் இன்று இப்போது அக் கேள்வியை  மனம் மிக வன்மையுடன் ஓங்கிக் கேட்டதும். திகைத்துப் போனேன்.. மழலை.. குழந்தை.. சிறுவம்.. குமரம்..  வாலிபம்,,  மத்திமம்  எல்லாம் தாண்டி.. நான் யார்..?  இந்த அறுபத்திரண்டு வயதிலும் ஆசையை விட்டேனா..?    என்ன தேடினேன்.?  என்ன பெற்றேன்....? எதைச் சம்பாதித்தேன்..?  எதை இழந்தேன்..?  

 

தெரிந்த விடைகள் தாம்..  தேடியதெல்லாம் பணத்தைத்தான்.. மனத்தையல்ல..  சம்பாதித்தெல்லாம்  பகையைத்தான்.. உறவையல்ல . இழந்ததெல்லாம் என்னைத்தான்..  உலகத்தையல்ல எல்லாம் தெரிந்திருந்தும் ஆசை விடவில்லை.  காலக் குதிரையின் கடைசிப் பலவீனத் தாவல்கள்..  ஏதேதோ எண்ணங்கள்..

 

வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபடல் எப்படி..? இது சாத்தியமா..? என்பது நாற்பதுக்குப் பின் பிறந்துää தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் கேள்வி விருட்சம். அதன் உப கிளைகள் அனந்தம். இது முதல்ஞானம். இதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் இதன் விடை எல்லோருக்கும் தெரிந்துதுதான் இருக்கிறது. ஆசை.! ஆசைதான் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம். ஆசையில் நின்றும் விடுபடுதலைப் பற்றிää உயர்வெய்திய புத்தர் உபதேசித்த அந்த இறைஞானவரிகள்..

 

      சட்டென்று என் பார்வையில் குன்றின் மீதிருந்து  கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சில புத்தபிக்குகள் தென்பட்டனர்.  ஏழு புத்த பிக்குகள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக கீழே இறங்கி ந்து கொண்டிருந்தனர்..  நான் அவர்களுக்கு வழி விட்டுச்  சற்று ஒதுங்கி மரியாதையுடன் நின்றேன்.  

 

அச்சமயம் திடீரென்று எனக்குள்  இன்னதென்று வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு  பொங்கிப்  பொங்கிப் பிரவாகித்தது. என்ன இது..? என்னால் எதுவும் தீர்மானிக்க முடியவில்லை.  புத்தபிக்குகளின் வரிசை நெருங்கிக் கொண்டிருந்தது.  முன்னால் தலைமைப் பிக்கு  பாதி மூடிய கண்களுடன் நிலம் நோக்கி அவசரமேதுமில்லாமல் மிக நிதானமாக வந்து கொண்டிருந்தார்.  

 

நன்hறாக வழி விட்டுச் சரிவில் நின்றிருந்த நான்  அவரை இச்சையில் செயலாக சும்மா உற்றுப் பார்த்தேன்..  என்னருகில் நெருங்கிய அவர்  எதேச்சையாக என்னைப் பார்த்தார்.  சட்டென ஒரு கணம் தயங்கி நின்றார்.   பின்னால் வந்து கொண்டிருந்த எல்லாப் பிக்களும் நின்றனர். தலைமைப் பிக்கு  மெதுவாக  தனது பாதி விழிகளை நன்றாகத் திறந்து என்னைப் பார்த்தார்.  மழிக்கப்பட்டடிருந்த மொட்டைத் தலையும்  சுத்தமாகச் சவரம் செய்யப்பட்டும் நிர்மலமாகவிருந்த அவரது முகத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த இரு ஆகர்ஷன சக்திமிக்க  கூரிய விழிகளிலும்  பரிபூரணையாக  கருணையின் ஊற்று தெரிந்தது.

 

      அதேசமயத்தில்   அவரது விழிகளில் மின்வெட்டுப் போல ஒரு வித்தியாசமான ஒளி தென்பட்டு மறைந்தது.  நான் மரியாதையாக தலையைக் குனிந்தேன். என் தலையின் மீது படாமல்  தனது வலது கையை வைத்த அவர் ஏதோ சிங்களத்தில் முணுமுணுத்து ஆசி கூறினார்.  

 

அடுத்தகணம்  நான்   அதிர்ச்சியுற்றுத்  திடுக்கிட்டேன்.   காரணம்  என் தாய் மொழியான தமிழில் சிங்களவரான அவர் சரளமான தமிழ்நடையில் உபதேசித்ததுதான்.  பாளி மொழியில் சுலொகம் சொல்லி சிங்களத்தில் ஆரம்பித்து திடீரென தமிழில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.. நான் எதைப்பற்றிச் சுய விசாரனை செய்து கொண்டிருந்தேனோ அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

 

      மகனே..  இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலத்தையும் கடந்து எதிர்க் கரைக்குச் செல்க.  உன் மனது முழுவதும் விடுதலையடைந்து விட்டால்  நீ மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலையை அடையமாட்டாய்.. சிலந்தி தான் அமைத்த வலைக் கூட்டில் தானே விழுவது போல  ஆசையாகிய  வெள்ளத்தில்  விழுகிறாய். ;த வெள்ளத்திலிருந்து எழுந்து  ஆசையை விட்டவர்கள்  எல்லாத் துக்கங்களையும் விலக்கி நிர்வான மோட்சத்துக்குச்  செல்கிறார்கள்.  நீயும் ஆயத்தமாகி வா மகனே..

 

நான் மஹாவியப்புடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.  அதேகணத்தில் அவர் ஒரு  மெல்லிய புன்னகையோடு .., தன் மார்போடு அணைத்திருந்த தனது விசிறியைச் சற்று விலக்கி தனது வலதுபக்க மார்பை  எனக்கு மட்டும்  காட்சிப்படுத்தி விட்டு  சர்வ சாதாரணமாகத் தொடர்ந்தும் நடக்க ஆரம்பித்தார். அந்த மார்பு.. ஓ.. அந்த மார்பில்.. சாந்தஎன்று சிங்களத்தில் பச்சை குத்தப்பட்டிருந்த அந்த மார்பு..?  சாந்த..?  சாந்த..! சாந்தமாமா..?  ஓ.. சாந்தமாமா நீயா..?

 

      நான்  எல்லையற்ற  பேரதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன்.  அவர் என்னைக் கடந்து  அதே மிக நிதானத்துடன் அமைதியாக தன் சீடர்கள் பின் தொடர குன்றைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தார்.  சற்றும்  என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.  என்னால் கூப்பிடவும் முடியவில்லை.  செய்யும் வகையறியாது  விசித்திரமாக சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். .. சாந்தமாமா எங்கே போகிறாய்..?   நான் சதக்கா.....நான்  சதக்கா...உன்  நண்பன்  வக்காத்துக்குளம் சதக்கா...என்று மனம்  கத்தியது...

 

சாந்தமாமா எங்க போறாய்.?

 

மாட்டுக்குப் போறேன்.!

 

மாடு என்னத்துக்கு.?

 

மாட்டுப்பீ எடுக்க.!

 

மாட்டுப்பீ என்னத்துக்கு.?

 

ஊடு மொளுக.!

 

ஊடு என்னத்துக்கு.?

 

புள்ளப் பெற !

 

புள்ள என்னத்துக்கு.?

 

எண்ணக்கொடத்துக்க துள்ளிப்பாய..!

 

சாந்தமாமாவின் சிறு வயதுப் பழைய பாட்டு இப்போது எனக்கு வேறு புதிய அர்த்ததில் விளங்கியது.. அந்தப் பாடலில் இவ்வளவு தத்துவமா..    ஏழு வயதில் பாடியதன் அர்த்தம்   எழுபதில் புரிந்தது. ஆசையென்ற எண்ணெய்க் குடத்தினுள் ஆசையுடன் துள்ளிப் பாய..? பாய்ந்த பின் மீண்டும் எழுந்து மீண்டும் எங்கே போகிறோம்.. மாட்டுக்குப் போகிறோம்.. உலகத்திற்கு..!  மாடு என்னத்துக்கு..? மாட்டுப்பீ எடுக்க.. மாயை என்னும் மலத்தை பூசிக் கொள்ள.. மாட்டுப்பீ என்னத்துக்கு..? வீடு கட்ட பிள்ளை பெற.. பிள்ளை என்னத்துக்கு..? முடிவில்லாத கேள்விகள்.. ஆயின் மறுபடியும் முதற்கேள்வியில் வந்து முடியும் சக்கரச் சுழற்சிக் கேள்விகள்..

 

ப்பா..! கார் ரெடி..! வாங்க..!

 

என்ற மகளின் குரல் காதருகில் பலமாகக் கேட்டது. நான் இளமையில் மட்டுமல்ல..... இந்த முதிய வயதிலும் சாந்தமாமாவிடம் புதிய ஒரு பாட்டுக் கற்றுக்; கொண்டவனாக என் மகளின் கைகளைப் பிடித்தபடி மெதுவாக குன்றிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தேன்.

 

குன்றின் அடிவாரத்தை அடைந்து சாந்தமாமாவை மெதுவாகத் திரும்பி மேலே பார்த்தேன். அவரோ என்னைத் திரும்பியும் பாராது தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவரது  தலைக்கு மேல் குன்றின் உச்சியில் பூரணமாக உதித்துக் கொண்டிருந்த  பூரண சந்திரன் பெரிய ஞான வட்டமாகத் தெரிந்தது.

 

ஹேசாந்தமாமா எங்கே போகிறாய்..? | ௦௦

 

---------------------------------------

 

No comments:

Post a Comment