ஆர்.எம். நௌஸாத்தின் வக்காத்துக்குளம் குறித்து...
வற்றாத நினைவுகளை மீட்டிப்பார்த்தல்...
தீரன் நௌஸாத் அற்புதமான கதை சொல்லி. ஈஹத்து இலக்கிய பரப்பில் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்து தரமான படைப்புகளை தருபவர். அவரது மொழியாட்சி தான் அனைத்து வாசகர்களையும் ரசிகர்களையும் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் துகள்கள் போல அப்படியே கவர வைத்திருக்கும். கவர்ந்திழுக்கும். அத்தகைய அருமையான ஒரு சிறுநாவலாக குறுநாவலாக வக்காத்துக் குளத்தை காணலாம். நாவல் வாசிப்பில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக்குறுகிய நேரத்தில் அலுப்பின்றி ரசனையுடன் சுவையாக விறுவிறுப்புடன் வாசிக்க உகந்த அற்புதமான நூல் என பரிந்துரைக்கலாம்.
யதார்த்தவாத நாவல்களின் மரணம் குறித்து உலகளவில் பேசப்படுகையில்
ஒவ்வொரு சமய சமூக பண்பாட்டிலும் உள்ள இயங்கு தன்மை அசைவியக்கம் அழகியல் கலைவடிவங்கள்
வாழ்வியல் கோலங்கள் மீளத்திரும்பாத
பசுமைநான காலங்களென
அனைத்தையுமே உள்ளடக்கி
வற்றாத குளமாமாக
வக்காத்துக்குளத்தை
வடிவாக செதுக்கி செப்பனிட்டு தந்துள்ளார் தீரன்
தீரனுக்குள் வற்றாமல் ஊற்றெடுக்கும்
ஜீவதமிக்க கலையாம்சங்கள் தான்
இப்படி ரசனையுடன் எழுதவைக்கிறது.
நாவலின் அசைவுருதன்மையும் உள்ளடக்கம் செறிவாக உள்ளது. கவனச்சிதைவுகள் இல்லை. கதையில் கண்வைத்து காலத்தோடு பயணிக்க வைக்கும்
நௌஸாத்தின் எழுத்துக்களில் எப்போதும் இலக்கியம் போலவே வாஸ்தவம் சுவை சுகம் ரசனை குசும்பு முசுப்பாத்தி அரசியல் சகவாழ்வு கிழக்கின் வாழ்வியல் கரைபுரண்டோடும். வெள்ளிவிரலும் கொல்வதெழுதலும் அத்தகைய உணர்வைத்தான் தரும். எழுத்தாளன், கலைஞன் தான் வாழும் சூழலால் அதன் வார்ப்பால் எப்போதும் செதுக்கப்படுபவன் தான். கற்பனைகளை புனைவுகளை அதிபுனைவுகளை விடவும் யதார்த்தத்தை அதன் சுவை குன்றாமல் மொழிக்கூடாக கதையாக வடிவமைத்து கட்டியெழுப்பி செல்வது லேசுமாசான பணியல்ல.
அந்தவகையில் வக்காத்து குளம் பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலான பாரிய இடைவெளியை கோடிட்டு காட்டுகிறது. பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையில் உள்ள சடுதியான மாற்றங்களை விளக்குகிறது. பாரம்பரியயமாக வாழ்வை ரசித்து பருகியவர்களது வாழ்வுக்கும் நவீன சொகுசுகளில் ஆடம்பரத்தில் மூழ்கி வாழ்வை தொலைத்து இன்பம் என எதையெதையோ அனுபவிக்கும் வளரிளம் தலைமுறைக்கும் ஒரு செய்தியை பலமாக சொல்ல முனைகிறது.
வக்காத்து குளத்தின் ஈரலிப்பில் பசுமையில் மனம் அப்படியே லயிக்க நினைக்கிறது.ஒருவித சுகமும் சுமையும் இரண்டறக்கலந்து விடுகிறது. அதன் ஈரம் சொட்டும் கதகதப்பு எம் உள்ளத்தையும் வருடுகிறது.
சண்முகம், மாலைவெள்ளி பார்வதி சுபைதா, குண்டன் கூடவே சாந்தமாமா என பஞ்சபாண்டவர்கள் போலிருந்த ஐவரையும் அடுக்கடுக்காக அரவணைக்க தூண்டுகிறது. உண்மையில் நௌஸாத் தனது கதைக்காக எப்போதுமே கவர்ச்சியாக உபயோகிப்பது தனது மொழியைத்தான். அந்த மொழிதான் அவரது கதைக்கும் கருவுக்கும் உயிர்தருகிறது. பாத்திர வார்ப்புக்கள், வார்த்தைப்பிரயோகங்கள் கிராமிய உணர்வுகள் என அனைத்துமே தூக்கலாக அசத்தலாக உள்ளது.
பெயர் போலவே “சாந்த” மாமா சாந்தமான பண்புடன் இறுதிவரை மாற்றமின்றி வந்து செல்கின்றார். இன்றைய 21ம் நூற்றாண்டு தலைமுறை இணையத்தில் அதன் திரைகளில் புதைந்து இளமையை இனிமையை தொலைத்து நோய்களுடன் இளைப்பாறுகையில் சாந்தமாமா தன் சிறு நண்பர்களுடன் கழித்த பால்ய கால நாட்களை நினைக்கையில் ஈரம் கசிகிறது.
காலக்குதிரை மிக மூர்க்கமாக கடந்த காலங்களை சிதைத்து உருக்குலைத்து நாகரிகம் எனும் பெயரில் துவம்சம் செய்யும் கடந்தகாலம் இனி மீளவும் வாய்க்க வழியே இல்லை. இயற்கையின் அரவணைப்பை இழந்து கட்டடக் காடுகளின் உஷ்ணத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் புதைந்து இயற்கை குறித்த உணர்வற்று இறுகிய உள்ளங்களுடன் அழுத்தங்களுடன் அலுப்புகளை மட்டும் சுமந்து தான் வாழ்ந்து மடிகின்றனர்.
இந்த சிறுநாவலைபொறுத்தளவில் (குறுநாவல்)
ஆகக் கூடினால் இரண்டு மணிநேரம் ஒதுக்கி ஒய்யாரமாக இருந்து நிதானமாக உணர்ந்து ஒன்றித்து வாசித்தால் வக்காத்து குளத்தின் ஈரலிப்பில் கதகதப்பில் சாந்த மாமாவின் முதுகிலோ தோளிலோ ஏறி அல்லது நீந்த முடிந்தால் சண்முகம் போல சாகாசம் காட்டி நீந்திவரலாம்.
இயற்கையை வர்ணிக்கும் வார்த்தைகளும் சொற்களும் பிரமாதம் அதே போல குறிப்பாக கிழக்கின் சிறுவர்கள் குதூகலமாக பாடும் கிராமத்துப்பாடல்களும் நினைவூட்டப்படுகையில் சினிமாப்பாடல்கள் எங்கே என கேட்கத்தோன்றும். சாந்தமாமாவுக்கு எம்.ஜி.ஆர். பிடித்ததோ என்னமோ. அவரது "நான் ஆணையிட்டால்" பிடித்ததோ என்னமோ முத்து படத்தில் ரஜனிகாந்தின் ஒருவன் ஒருவன் முதலாளி பாட்டில் எஸ்.பி யின் குரலில் வைரமுத்துவின் வரிகளில் A.R. ரஹ்மானின் இசையில் வரும் பாடல் வரிகளின் இறுதியில் வரும் "மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது மனம் தான் உணர மறுக்கிறது" எனும் வரிகள் அந்த ஐவருமே மண்ணுடன் மண்ணாகி மக்கி மறைந்து போனதை உணர்த்திவிடுகிறது. மிகப்பெரும் வலி தரும் தருணம் அது. கனடாவில் இருந்து நான்கு தசாப்தங்கள் கழிந்து வந்து கடந்த காலத்தை மீட்ட முனைகையில் வாழ்ந்த எவருமே உயிருடன் இல்லாமை காலத்தின் சகட ஓட்டத்தின் வேகம் உணர்தப்படுகிறது. அதே நேரம் வாழ்வின் சகல சிக்கல்களுக்கும் ஆசை தான் காரணம் ஆசையை துறந்தால் அனைத்தையும் அடையலாம் என கௌதம புத்தர் கூறியதை சாந்தமாமாவில் காண்பது போல அதே பாடல் வரிகளும் “ஆசை துறந்தால் அகிலம் உனக்கு” உணர்த்துவது அழகாக உள்ளது.
தும்புளுவாவாவில் பயணத்தின் இடையே வண்டி இடை நின்று விட அந்த இடத்தில் சாந்தமாமாவை ஒரு பௌத்த பிக்குவாக காணக் கிடைத்தது சதக்காவுக்கு மாட்டுமல்ல சகல் வாசகர்களுக்கும் மகிழ்வான உணர்வை தந்துவிடும் ஆக மொத்தத்தில் நௌஸாத்தின் வக்காத்துக்குளத்தில் வசதியாக நீங்களும் வாசிப்பின் ஊடாக நீந்திக்குளித்து மகிழலாம். உங்கள் கடந்த கால பசிய நினைவுகளையும் இரைமீட்டி மகிழலாம்.
தீராக்கலைப்பசிக்கு
தீரனை அள்ளிப்பருக
வக்காத்துக்குளக்கரைக்கருகில்
வரலாம்
படைப்பாளி கதை சொல்லி நௌசாத் அவர்களுக்கும் கஸல் வழியாக இந்நூலை கொண்டுவந்த சப்ரிக்கும் நன்றிகள்
No comments:
Post a Comment