Abdul Wahid Muhseen is with R.M. Nowsaath.
வக்காத்துக் குளம்
பால்யகால பாலியல் உறைவிலிருந்து
முதுமையின் ஆன்மீக உறைவிடம் நாடி….
நண்பர் ஆர். ஏம். நௌஸாத்தின் ‘வக்காத்துக் குளம்’ குறுநாவல், மனக்குளத்தின் மௌன அலைகளாக மென்தளம்பலுடன் அதிர்கிறது. வயோதிப மனத்தின் பால்ய கால மீட்டல், கனமான சோக ராகமாய் வாசக உள்ளத்துள் நிறைந்துறைகிறது.
வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. கணந்தோறும் சிறுகச் சிறுக நிகழும் மாற்றங்களுடன், அங்கு வாழ்கின்ற மக்கள் தம்மை பழக்கப்படுத்துகிறார்கள், தகவமைக்கிறார்கள். பால்ய வாழ்வின் தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டபோதிலும், பால்யகால நினைவுகள் அவர்களுள் இறவாமல் உறைந்திருக்கின்றன. ஆனால், வாழிடத்திலிருந்து அகன்று, பின் தலைமுறைகள் கடந்து அங்கு வருபவருக்கு நிகழ்ந்து விட்ட மாற்றங்கள் நம்ப முடியாதவையாகின்றன. அவை, அவரது பால்யகால நினைவுகளின் பசுமையான தடயங்களை வேருடன் அகற்றி விட்ட துயரத்தை அவருள் ஏற்படுத்துகின்றன. இதுதான் இக்கதையின் மையம். இது தனிமனித அனுபவம் கடந்த பொதுமைத் தன்மையானது. அதனால் கதையுடன் தம்மை இணைப்பதற்கு வாசகர்களுக்கு எளிதாகின்றது.
கதையின் உளவியல் கட்டமைப்பு வலிமையானது. ஆழ்மனப் பதிவாய் அமைந்துள்ள பால்ய வயதின் பாலியல் உணர்வு, கதையெங்கும் இழையோடுகிறது. நெடுங்காலத்துக்கு பிறகு, பால்யகால சிநேகிதியை சந்திக்கப் போவதை எண்ணியபோது, அறுபதைத் தாண்டிய வயதிலும் கதைநாயகன் சதக்காவின் மனம் குறுகுறுக்கிறது. இது அந்தக் கணத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, நாற்பது வருடத்திற்கும் மேற்பட்ட சதக்காவின் வாழ்வு முழுவதிலும் இது அவரை உள்ளிருந்து அழுத்தியிருக்கின்றது. ஒருவருடைய ஆளுமைக் கட்டமைப்பில் பால்ய கால அனுபவங்கள் ஏற்படுத்துகின்ற வலுமிக்க பாத்திரம் குறித்த, சிக்மண்ட் பிராய்டின் கருத்தாக்கம் முக்கியமானது. இத்தகைய அனுபவங்களில், பாலியல் சார்ந்த அனுபவங்கள் பெரும் வலுவுடன் ஒருவரை உள்ளிருந்து இயக்குகின்றன.
தன்னுடைய ஊரின் வடிவமும் இளமைக்காலமும் இழக்கப்பட்டு விட்டது என்பது மட்டும் சதக்காவின் வேதனை அல்ல, தன்னுடைய முழு வாழ்க்கையும் இழக்கப்பட்டு விட்டது என்பது பற்றி அவர் துயருருகிறார். தனது மனைவி, பிள்ளைகள், வசதியான வாழ்க்கை போன்ற எதுவுமே அவருக்கு நிம்மதியை வழங்கவில்லை. அதற்கான காரணத்தை அவரால் விளங்கவும் முடியவில்லை. கதையின் இறுதியில் அது புரிவதாக அவருக்குத் தோன்றியபோதிலும், அது புரிதல் அல்ல… மீண்டும் அதே கேள்விகள் தொடர்கின்றன.
பால்ய வயதில் மாலைவெள்ளி என்ற சினேகிதியுடன் சிறுபொழுது நிகழ்ந்த உடலிணைவு, சதக்காவுள் ஆழ்மனப் பதிவாய் உறைந்து விட்டது. அதை சதக்கா புரிந்து கொள்ளவில்லை. அவருடைய மனைவி அவருக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை. ஆனால் சுமார் அரைநூற்றாண்டு கடந்த பின்னரும்கூட, அந்த உடலிணைவு சார்ந்த நினைவும் அதன் பின்னர் அவர்களிடையே மலர்ந்த ‘காதல்’ உணர்வும் அவருக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது. இங்கு மாலைவெள்ளி என்ற உடல் பிம்பம் அல்ல, அந்த உறவும் அதன் கறைபடியாத, இழப்புகளில்லாத, நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தாத தூய்மையான உணர்வும்தான் அவரை உள்ளிருந்து அழுத்தி, அவரது நிமமதியின்மைக்குக் காரணமாகியுள்ளன. இவற்றில் எதுவுமே நிஜவாழ்க்கையில் அவருடைய மனைவியிடமிருந்தும், அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளிடமிருந்தும் அவருக்குக் கிடைக்கவில்லை.
சாந்தமாமா சிறப்பான கட்டமைப்பு. சிறுபராயத்தில், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு முற்றிலும் வேறுபட்ட இன, மத, மொழிச் சூழலில் வளர்ந்து, வாழ்ந்த ஒருவனின் உளக்கட்டமைப்பு எவ்வாறிருக்கும்? இதற்கான விடை ஒற்றைப் பரிமாணத்திற்குரியதல்ல. ஆனால் சாந்தமாமாவிடம் பாலியல் உணர்வுகள் வெளிப்படவில்லை. சதக்காவையும் அவனுடைய ஆண், பெண் கூட்டாளிகளையும் விட வயதில் கூடுதலாக இருந்தும், பாலியல் தொடர்பான சில விடயங்கள் அவனுக்குத் தெரிந்திருந்தும், அவன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. எந்தவித பாலியல் உணர்வுகளுமின்றி, அவன் தனது தோளில் வைத்து பெண் பிள்ளைகளை கரைக்குக் கொண்டு செல்கிறான். பின்னாளில், அவன் ஒரு பௌத்த துறவியாக மாறியதற்கும் அவனுடைய இளவயது பாலியல் ஆர்வமின்மைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த முடியுமா? அல்லது வேறுபட்ட வாழ்க்கைச் சூழலின் நிர்ப்பந்தங்கள் அவனைத் துறவியாக மாற்றினவா? அல்லது அவனும் திருமணம் முடித்து, குழந்தைகள் பெற்று, நிம்மதியிழந்து, இறுதியில் துறவறம் பூண்டானா? துறவறம் என்பது நடைமுறையில் இல்லாததால்தான், சதக்காவினால் தன்னுடைய நிம்மதியின்மைக்கு தீர்வைக் காண முடியாதுள்ளதா?
கதையின் முடிவு அலாதியானது. கதையின் உளவியல் கட்டமைப்புடன் அது சிறப்பாக பொருந்துகிறது. உலகியல் துன்பங்களும் நிலையாமையும்தான் கௌதம புத்தர் துறவறம் பூண்டதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஆனால், துறவறம் என்பது அடிப்படையில் பாலியல் இழத்தலாக அமைகின்றது. இவ்வகையில், பாலியலும் அதன் நீட்சியான குடும்பம், உறவுகள் என்பவையும் உலகியல் துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றன எனக் கொள்ள வேண்டும். அப்படியாயின், பால்ய வயது பாலியல் உணர்வின் தாக்கத்தில் நிம்மதியிழந்துள்ள சதக்கா, துறவறம் பூண்ட புத்த பெருமானின் புனித இடமொன்றில், நிம்மதியின்மைக்கான காரணத்தைப் புரிந்து கொண்டதாக உணர்வது தர்க்கப் பொருத்தமிக்கதாக அமைகின்றது.
No comments:
Post a Comment