குறிப்பேடு...புதுவரவு
வக்காத்துக்குளம்
திக்குவல்லை கமால்
0
கெனடாவில் நாற்பது வருடங்களைக் கடத்திய சதக்கா நாடு திரும்புகிறான்.ஊர்ப்பற்று விடுமா ? மூன்று நாட்களை ஒதுக்கி கொழும்பிலிருந்து வக்காத்துக் குளத்துக்கு வருகிறான்.
தனது இளம் பருவத்து நண்பர் வட்டத்தைச் சந்திப்பதில் பேராவல்.ஏற்பாடு செய்யுமாறு முன்கூட்டியே அறிவித்துவிட்டு வந்தபோதும் அங்கு யாரையுமே சந்திக்க முடியாமை பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.நினைவுகள் விடுமா?
நனவிடை தோய்ந்தபடி வக்காத்துக் குளத்தை சுற்றிப் பார்க்கிறான்.இப்போது அது கிராமமாகவே தெரியவில்லை.
சண்முகமும் மாலைவெள்ளியும் பார்வதியும் சுவைதாவும் குண்டனும் குழுத் தலைவனான சந்தமாமாவும் இல்லாவிட்டால் அது எப்படி வக்காத்துக் குளமாக முடியும்.!.
இயற்கையும் இயல்பு வாழ்வும் சிறுவர் குழுமத்தின் கும்மாளமுமாய் கதை நகர்கிறது.
பட்டிப்பாளை ஆற்றில் களிசானைக் கழற்றிவிட்டு சதக்கா பாயும்போது , சிறுமிகள் காணக்கூடாத சூமட்டியைக் கண்டுவிடுவதும்...
மாலைவெள்ளியும் சதக்காவும் சண்டை பிடித்து கட்டிப் புரண்டு உருளும்போது சகபாடிகள் வந்து விலக்கியதை இருவருமே விரும்பாததும்...
முற்றத்தில் சைக்கிள் ஓடப் பழகியபோது வேண்டுமென்றே துள்ளிப் பாய்ந்து காயப்பட்ட மாலைவெள்ளி , பாவாடை எல்லாம் இரத்தத் திட்டுகளோடு வீடு செல்வதும்...
'அவள் எப்படி திடீரென்றி பெரிய மனிசியானாள் 'என்று சகநண்பர்கள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டபோதும்...
சுவைதாவும் பார்வதியும்கூட ' அப்படி' ஆகிவிட்டதால் இனி விளையாட வரமாட்டார்கள் என்றானபோதும்...
இப்படியான கிளுகிளுப்பு
க்களுக்குக் குறைச்சலில்லை.
அக்கினிக் குஞ்சு இணையம் நடாத்திய எஸ்.
பொ.ஞாபகார்த்த குறுநாவல் போட்டிக்கும் , இந்நூல் எஸ்.பொ.விற்கே சமர்ப்பணம் செய்யப் பட்டுள்ளமைக்கும் , இந்த கிளுகிளுப்புக்களுக்கும் எந்தவித சம்பந்தம் கிடையாது.
சாந்தமாமா அங்கிருந்து காணாமல் போய்விட்டான். பார்வதி குண்டு வெடிப்பில் கணவனோடு செத்துப் போனாள்.குண்டன் கடத்தப்பட்டு மையத்துக்கூடக் கிடைக்கவில்லை.மாலைவெள்ளி இரண்டு பிள்ளைகளோடும் கணவனோடும் சுனாமியில் போய்விட்டாள்.இயக்கத்தில் இணைந்த சண்முகத்துக்கு என்ன நடந்தென்றே தெரியவில்லை.சுவைதா பணிப் பெண்ணாகச் சென்று வீடு கட்டி , மகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு சீனி வியாதி பிடித்து மௌத்தாகிப் போனாள்.
முக்கியமான கதாபாத்திரங்களின் கதைகள் விரிந்து பெரு நாவலாகாமல்போனது இது ஒரு குறுநாவல் என்பதால்தானா ?
எவரையும் சந்திக்க முடியாமல் போன சதக்கா மனைவி மக்களோடு கொழும்புக்குப் போகும் இடைநடுவில் கார் ஏதோ கோளாறு காரணமாக சற்று நின்று விடுகிறது.
மலைச்சாரலில் ஒரு பன்சாலை.புத்த பிக்குகள் சிலர் வரிசையாக வருகின்றனர்.நின்று நிதானித்து ...கையை உயர்த்தி..." ஆசைகளிலிருந்து விடுதலை பெற்றால் தான் மோட்சம் அடையலாம் " என்று தமிழில் ஞானபோதம் செய்த பிக்கு , காவியுடையை விரல்களால் விலக்கி...மார்பில் ' சாந்த ' என்று பச்சை குத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் விளங்கிக் கொள்கின்றனர்.சதக்காவின் மனதில் இளமைக் குதூகலம் பிரவாகம் எடுத்தது.சாந்தமாமா திரும்பிப் பாராமலேயே முன்நோக்கி நடந்தார்.
ஆர்.எம்.நௌஸாத் ஒரு நல்ல கதைக்காரன் என்பது யாவரும் அறிந்ததே.அவர் எத்தனையாவது முஸ்லிம் நாவலாசிரியர் என்பது முக்கியமல்ல.எனது ஞாபகத்தின்படி முற்பட்ட நாவலாசிரியர்களை எழுதிப் பார்த்தேன்.பட்டியல் பதினேழைத் தாண்டி இன்னும் போய்க் கொண்டிருக்கிறது.....
அட்டைப் படம் , பக்க வடிவமைப்பு எல்லாம் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்க வைக்கிறது.இது ஓர் கஸல் பதிப்பகத் தயாரிப்பு
No comments:
Post a Comment