10
ஆனால் என்னவோ அதுதான் நடந்தது.
திடீரென்று ஒரு நாள் சாந்தமாமாவைக் காணவி;ல்லை.. அவனை அவனது பெற்றோர்கள் கூட்டிச் சென்றுவிட்டதாகக் கண்ணாரப்பெரியான் தெரிவித்தான். எங்களுக்குள் கவலை வெடித்து இரகசியமாக இரவுகளில் அழுதோம்.
வேறு வழி ஏதுமின்றி குழந்தையனின்
விறாந்தையில் சாந்தமாமாவும்..மாலைவெள்ளியும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருந்தோம்.. ? சாந்தமாமா எங்கே போனாய்..? மாலைவெள்ளி இனி
உன்னைக் காண்பதெங்கே...?
உற்சாகமின்றி
நாட்கள் ஓடிக் கொண்டுதானிருந்தன.
நாங்கள் ஏழாம் வகுப்புக்குச் சித்தியடைந்த அந்த நாளில் திடீரென சுபைதாவும்
பெரியவளாகி வீட்டிலடைந்தாள்.. பார்வதியும் எம்மோடு வருவதில்லை. நானும் சண்முகமும் குண்டனும் சிலகாலம் கூடித் திரிந்தோம். அதற்கும் கூடச்சோதனை காலம் வந்தது. என்னை மட்டக்களப்பு மாநகர பாடசாலையில்
விடுதியில் சேர்த்து விட்டார்கள்.. குண்டன் எங்கோ ஒரு துவிச்சக்கரவண்டிக் கடையில் வேலைக்கு அமர்ந்து விட்டான். சண்முகம் யாழ்ப்பாணத்தில் அவனது
பெரியண்ணா வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட்டான் இப்படித்தான் எங்கள் கனவுக்காலம் ஒரு முடிவுக்கு வந்தது.
|0
மாற்றங்கள் மட்டும்தானே
மாறாதிருக்கின்றன. வாழ்க்கையில் உறவுகளின்
இணைப்புத்தளங்கள் மாறுகின்றன. காட்சிகளும் கோலங்களும் மாறுகின்றன..
உறவுகளின் நிறங்களும் மாறுகின்றன. உடல் மாற்றம் நம்மை அறியாமலேயே நமது வயோதிபத்தை பதித்து விடுகிறது.
மட்டக்களப்பு மாநகரத்திலிருந்து நான்
சாய்ந்தமருதுக்கு தவணை விடுமுறைகளில் வரும் போதெல்லாம் பால்ய எமது நண்பர்கள் எவரையும் சந்திப்பதே இல்லையெனலாம். காரணம் மாலைவெள்ளியும் சுபைதாவும் யார்யாரையோ திருமணம்
செய்து கொண்டு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கித் தொலைந்து போயிருந்தார்கள்.
பார்வதியும் திருமணமாகி தனது கணவனின் ஊருக்குப் போய்விட்டிருந்தாள். சண்முகம்
யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு போதும் திரும்பி வரவில்லை.
குண்டன் மட்டுமே ஊரிலிருந்தான். அவனும் சொந்தமாகச் சைக்கிள் கடை
போட்டு மிக வேலையாக இருந்தான்.
அபூர்வமாகச் சந்திக்கும் போது ஒரு புன்னகை.. சிறு நல விசாரிப்பு.. அவ்வளவுதான்.. எங்கள் ஆறுபேரிலும் எவருக்கும் எவருடனும் ஒரு சிறு தொடர்பு கூட இருக்கவில்லை. பழைய கதைகளைச் சொல்லி மகிழ ஆட்கள் இல்லை. அந்தக் கனவுக்கால உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு இதயமும் தொடர்பில் இல்லை.
௦ .
படித்துக் கிழித்து பரீட்சைகளோடு மல்லுக்கு
நின்று.. ஒரு வழியாகத் தேறி.. அதிலேயே இருபது வருடங்கள் பறந்து விட்டன.. அந்த
வளரிளம் பருவம் முழவதுமே
விரைவில்.
பொசுங்கிய கனவுகளாய்ப் போயொழிந்தன.. பின்னர் சிலிர்த்தெழுந்த வாலிபக் காலம்.. வேறு நண்பர்கள்.. வேறு தளங்கள்.. வேறு வேறு உறவுகள்.. வீணாண சிரிப்புகள்.. இரகசிய விசும்பல்கள்.. பாலியல்த் தேவைகள்.. விரக தாபங்கள்.. கொதிக்கும் கனவுகள்.. இப்படிச் சில காலங்கள்..
. உலகத்தின் சராசரி மனிதரைப் போல அடுத்த கட்டத்தில்
திருமணம். புது மனைவி.. அவளை முழுவதுமாகப் புரிவதற்கிடையில் அவள் பழைய அதிகாரியாகி..
அவளது சொந்தங்கள்.. நமது சொந்தங்களாகிச் சுமக்க வைத்த அநாவஸ்ய சுமைகள் தாங்கி..
பிள்ளகைள் பெற்று.. அவற்றின் சுமைகளோடும்.. பிள்ளைகளின் பிள்ளைகள்.... பந்தக் கடிவாளங்கள் அறுபடாமல் காலக்குதிரை மேலும் தலை தெறிக்க.. இன்னும் எத்தனையோ வருடங்கள் ஒடிக் களைத்து விட்டது
எத்தனையோ வித விசித்திரங்களுடன்..............
“ஹேய்...தள்ளிப் போ...!”
என்று யாரோ கத்திய
குரலில் திடுக்கிட்டு சிந்தனை கலைந்தேன்....ஒரு பாரவண்டிக்காரன்
என்னவோ சொல்லி எனக்கு
ஏசினான்,,கடூரமாக ஹோர்ன்
ஒலித்து கோபத்தைக் காட்டினான்...
“ஒஹ்...வெறி சொறி
,,”
என்று பாதையை
விட்டு விலகினேன்... யோசனையின் ஆழத்தால் நடு
வீதியில் இறங்கிவிட்டேன் போலிருக்கிறது.....
இனி நடை சரிவராது... வீட்டுக்குத் திரும்புவோம்
என்று முடிவு செய்து கொண்டு... .திடீரென எந்தப் பக்கம்
செல்வது என்றே தெரியவில்லை... ஒரு கடையின் ஓரத்தில்
நின்று கொண்டு திசையை அனுமானித்தேன்...பத்து நிமிடமாயிற்று....ஓரளவு
மதிப்புத் தெரிந்து...வீட்டை நோக்கி நடக்க
ஆரம்பித்தேன்....
இந்த
ஊரை அறவே பிடிக்கவில்லை.... மனிதர்களையும்தான் ...அன்று
வாழ்ந்த அந்த கிராமத்த்து
மனிதர்கள்தான்....ஒஹ்...எந்தனை
அன்பாளர்கள்....அமைதியானவர்கள்....
தேநீர்கடை மம்முறாயீன்...டாம் விளையாடும் தங்கொடையான்..
மரமேறிஉச்சுள்ளியன் ...சதா வெற்றிலைசாறு வழியும் வாயுடன்
முட்டாய்க்கார வெள்ளத்தம்பி...விளையாட்டுச் சாமான் கடையுடன் லாஇலா....அழுக்குத் துணி மூட்டையுடன்
காத்தான்...மகள் கருத்த வண்டு....கண்ணாடிக் கைப்பு விற்கும்
சீனிம்மா....நைஸ் விற்கும் பீக் கிழவி ...பொக்கட்டுப் பிச்சைக்காரி... டப்டோஸ்
தங்கம்மா,,,,ஒரு கையில் மட்டுமே
சேர்ட் அணியும் தம்பிராசா...
வண்டிக்காரப் பொறுக்கன்,,,தங்கப்போறால மேசன்....ஒஹ்....எங்கே இந்த
மனிதர்கள்.....? மண்ணோடு மண்ணாகி கிராமத்தின் மண்ணாகவே கலந்து விட்டனரா....? உடனடியாக
சாந்தமாமாவை அல்லது குண்டனை சந்திக்க வேண்டும்......
௦
என் உறவினர்களிடத்தில் சொல்லி எங்கெங்கோ
விசாரித்து சாந்தமாமாவின் இருப்பிடம்
அறிந்து அவனை வரவழைக்க
ஓடோடி வருவான்... ஆச்சரியப் படுவான்... கத்திக்கட்டிக் கொண்டு அழுவான்...அன்பு மீக்குற்றுக் கண்ணீர்
விடுவான் என்றெல்லாம் ஆயிரம்
கற்பனைகளோடு நான் என்னைத் தயார்
செய்து கொண்டு காத்திரூக்க-
ஒருத்தர் கூட வரவில்லை.....அரைகுறையான செய்திகள்
மட்டுமே வந்து சேர்ந்தன... என் உறவினர் ஒரு கிழவரை கூட்டிக் கொண்டு வந்திருந்தார்..
“நீங்க
கூட்டிவரச் சொன்ன ஆட்களை
விசாரித்துப் பார்த்தேன்...யாரையும்
யாருக்கும் தெரியவில்லை...இவர் நம்மட காக்கா முறையானவர்... பழைய ரைவர்.. சில விபரங்கள்
சொன்னார்...இவரை ஞாபகம் இருக்குமோ
உங்களுக்கு,,,>”
அந்தக் கிழவரை எனக்கு சரியாக
ஞாபகம் வரவில்லை...என்னை விட சில வருடங்கள்
மூத்தவராக இருந்தார்........
“நான்... சீனிமண்டையன் ரைவரு....!” என்றார். எனக்கு ஓரளவு ஞாபகம்
வந்தது...அவரது EN 1212 மைனர் கார் சட்டென நினைவில்
பளிச்சிட்டது... அவரிடம் என்
நண்பர்களை விசாரிக்க ஆரம்பித்தேன்... மனிதர் படு கிழவராக
இருந்தாலும் ஞாபக சக்தி நன்றாக
இருந்தது... வக்காத்துக் குளத்தின்
கடைசி விதை....
“தம்பி
நீங்க கேட்கிற ஆட்களை தெரியும்.. .எல்லாரும் மொவுத்தாகிட்டாங்க.எண்டு நெனைக்கன் .....ஒத்தரும் உசிரோட
இல்லப் போல... சாந்தமாமா சிங்களப்
பொடியன்...கண்காலத்துல இஞ்ச இருந்து
ஊரைவிட்டு போயிட்டான். ...அப்புறம்
காணயில்ல.... அவன்ட வெசயம் ஒண்டும்
தெரியா..... பார்வதிய தெரியும் நம்மட
காத்தாண்ட மகள்...ல்லோ..? அவள்
அஞ்சாறு வருசத்துக்கு முன்ன
புரிசனோட பஸ்ஸில போகேக்க குண்டு வெடிச்ச்த்துல செத்துட்டாள்..”
..
“என்ன
பார்வதி செத்துட்டாளா...?”
“மத்தது...குண்டன்,,,,ஊவாயண்ட மகன்... அவன் காத்தான்குடிக்கி போகேக்க எடையில குருக்கழ்மடத்துல வெச்சி கடத்திட்டானுகள்,,, மையித்தும் வெரல்ல......”
“ஒஹ்...கு..கு..குண்டனையா,,,,அப்//போ...அவனும் இல்ல...?”
“ஓம் தம்பி...அவள் அங்காலக் காக்காட மகள் மாலவல்லியும் .ரெண்டு புள்ளயளும்
புருசனும் சுனாமில
போயிட்டாங்க......அக்குபர் பள்ளியில அடக்கியிருக்கி....”
நான்
நெஞ்சைப் பொத்திக்
கொண்டேன்...தொடர் அதிர்ச்சிச்
செய்திகளால்..என் மார்பின் தசைநார்கள் எகிறித் துடித்தன...இரத்த நாளங்கள் பம்மி எழுந்தன....
“சம்முவம் எண்டு ஒருத்தனக் கேட்டியே...
அவன் கண்ணாரப் பெரியாண்ட மருமகந்தானே... அவன் கனகாலத்துல
இயக்கத்துல சேர்ந்து
போயிட்டான்,,,,இருக்கானோ
செத்துட்டானோ தெரியா....”
:....................................”
“நீ
கேட்ட சுவைதா என்கிறவள் மாக்குடிச்சாண்ட பேர்த்தி..ல்லோ....அவளும் அஞ்சாறு தரம் வெளிநாட்டுக்கு போய் வந்தாள்...ஊடு கீடேல்லாம் கட்டி
மகளுக்கு மாப்புள்ள எடுத்துட்டு...
போன வருசந்தான் சீனி கூடி வருத்தப் பட்டு கொழும்புல
மவுத்தாகி,, அங்கான் அடக்கின...”
“.....................................”
~வேற
ஆரக் கேட்கணும் தம்பி...? எனக்கி வீடி
வாங்க யும்
காசில்ல...குளிசையும் வாங்கணும்...கையில ஒண்டுமில்ல...ஹி...ஹி...”
நான்
என்னையறியாமலே எழுந்து விட்டேன்...
சேர்ட் பொக்கற்றுக் குள்ளிருந்த எவ்வளவோ தெரியாது...பணத்தை அள்ளி கிழவனிடம் கொடுத்து விட்டு....மன அழுத்தம்
கூடவே...சட்டென உள் வீட்டுக்குள்
சென்று கட்டிலில் சாய்ந்து விட்டேன்............
௦௦
11
நான் வந்த வேலை முடிந்து விட்டது,,,
முறைப்படி ஒப்பமிட்டு வீடு வளவை ஒப்படைத்தாகிவிட்டது... அடுத்த நாளே கனடா செல்ல
கொழும்புக்குப் புறப்பட்டு விட்டோம்...வக்காத்துக்குளத்துக்கும் எனக்கும்
இனி எந்தத் தொடர்பும் இல்லை... மனது கனத்தது......என்ன ஒரு
விசித்திரமான வாழ்க்கை.....! .ச்சே...
௦
வாழ்வின் ஒவ்வொரு நாளும் பற்பல
விசித்திரங்களில்தானே கழிந்து வருகிறது. பாருங்களேன்.. சிதறிப் பறக்கும் துப்பாக்கிக் குண்டுகள் ஒழிந்திருந்து வெடிக்கும் ‘கிளமோர்’ வெடிகள் புதைந்து மறைந்திருக்கும்
கண்ணிவெடிகள் கண்காகாணா இடத்திலிருந்து
ஏவப்படும் ‘ஷெல்’கள் நேரடியாகச் சீறியெழும் ‘மல்டிபரல்கள்’ எல்லாவற்றையும் அறிந்து
கொண்டே தொழிலுக்காக வீதிகளில் ஓடுகின்றோமே.. முட்டாள்தனமான சாரதிகளுடன் ஒன்றாக சாலைகளில் பயனிக்கின்றோமே..
சுனாமியை எதிர்பாராது கடற்கரைகளில்
குடியிருக்கின்றோமே.. பொருந்தாத துணைவர்களுடனும் பரஸ்பரம் அன்பு கொள்கிறோமே.. வல்லரசுகளின் அணுக்கழிவுகள் பிரபஞ்சத்தில் பரவும் போதெல்லாம் அதைச் சுவாசித்துக் கொண்டும் உயிர் வாழ்கிறோமே.. எதில் விசித்திரம் இல்லை..?
பொதுவாக நாமே ஒரு விசித்திரமான
படைப்புத்தானே.. மனிதன் இறைவனின் கேலிச்சித்திரம் எனக் கவிஞன் வர்ணித்ததில் என்ன
பிழை..?
இத்தனை
விசித்திரங்களுக்கிடையில்
வக்காத்துக் குளத்திலிருந்து
விரக்தியான எண்ணங்களை அள்ளிக் கட்டிக் கொண்டு
கொழும்பு திரும்பும் வழியில் என்னருமை சாந்தமாமாவைச் சந்திப்பேன்
என்று யாரால் கற்பனை செய்திருக்க முடியும்...?
இனியொரு போதும்
பார்க்கமுடியாதென்று தீர்மானித்து சாந்தமாமா என்ற போல்டரை எது அடிமனது என்ற ‘ரீசைக்ளோபின்’னுக்குள் புதைத்துவிட்டு
மறந்திருக்கையில் நான் அதே சாந்தமாமாவை தும்புளுவாவ என்ற ஊரில் பார்த்தேன் என்றால்...............? இது இறைவனின் திட்டமிடப்பட்ட ஏற்பாடு என்பதில் என்ன
சந்தேகம்.... ?
என்னுடைய மனைவி மூத்த மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் சகிதமாக வக்காத்துக்குளத்திலிருந்து காரில் கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். என் மகன்தான் காரைச் செலுத்திக்
கொண்டிருந்தான். நாங்கள் மஹியகங்கன ஊடாக வந்து கொண்டிருந்த போது மாலை மங்கிக்கொண்டிருந்தது. பரிபூரணமான
தூய நிலா மலைகளுக்கு மேலாகப் பெரு வட்டமாக எங்கள் காரைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
சந்திர உதயத்துக்கும் சூரிய மறைவுக்கும் நடுவிலான இந்த
மனநிறை காட்சியில் என் மனம் இறைமாட்சியில் மூழ்கிக் கொண்டிருந்தது. தும்புளவாவ சந்தியை கார் அடைந்த போது காரின் முன் சக்கரத்தில் காற்றழுத்தம் ஏற்பட்டு வெடித்து விட்டது.
திடுக்கிட்டு அலறி விட்டோம். ஆனால் சுதாகரித்து மற்றவர்கள்
சிரிக்க நான் மரணபயம் அடைந்தேன்.
காரை பாதையின் ஓரத்தில் நிறுத்தி என் மகன் சக்கரத்தை மாற்ற முயன்றபோதுதான் இந்த விசித்திர சந்திப்பு
நடைபெற்றது.
பொழுது இருட்டாகவே இருந்தது.
ஆயினும்
கொஞ்சம்
கொஞ்சமாக பூரணைசந்திர பரவ ஆரம்பித்தது... சற்றுத் தூரத்திலிருந்த ஒரு சிறு குன்றில் பெரிய ஒரு புத்த விகாரை தென்பட்டது. வேறு குடியாட்டங்களைக் காணவில்லை.. புத்த விகாரையின் வெள்ளை நிறப் பிரமாண்டமான கோபுரத்தின் பின்னணியில் மலைகளின் பிரமாண்டம் மனதை கொள்ளை கொள்ளும் காட்சியாக இருந்தது
நான் காரை விட்டும் கீழே இறங்கி நின்றேன். மங்கலான வெளிச்சத்தில் புத்த விகாரையின் பெயர்ப்பலகை தெரிந்தது. சிறிமைத்திரி ரஜவிகாரை-
ரஜமல்வத்த என்று மும்மொழிகளிலும் எழுதப்படடிருந்தது. விகாரையின் பெயரை தமிழில் கூட
எழுதியிருக்கிறார்களே என்று
வியப்பாக இருந்தது
என்ன அழகான இடம் அது.. மலைகளும் மேகங்களும் தழுவும் இந்த ஊர்களின் காட்சிப் படிமத்தில் மனம் பரவசத்தில் இலயித்தது. மாலைப்பறவைகளின் ஒலிகள் தவிர.
மற்றப்படி ஒரே அமைதி. விகாரை அமைந்திருந்த சிறு குன்றின் மேல் இரண்டொரு புத்த துறவிகளின்
நடமாட்டம் மங்கலாகத் தெரிந்தது. குன்றின் அடிவாரத்தில் பிரமாண்டமான ஓர் அரச
மரம்.. அதன் வியாபித்துப் பரந்த பாரிய கிளைகள்.. காற்றில் சலசலவென்று இலைகளின்
சத்தம்.. குளிர்..
அரச மரத்தின் அடியில் வெண்பளிங்குப் புத்தர். ஆழ்தியான வடிவச் செதுக்கல். சிலையின் தலைக்கு மேல் நியோன் விளக்கின் வட்ட ஞானஒளி.. பீடத்தில்
அகல் விளக்கு வாடாத மலர்கள்.. பின்னால் பொட்டல் வெளி.. தூரத்தே
விகாரையின் கட்டிடம்... மாட்சிமைமிக்க இறைவனின் ஆட்சியின் வெளிப்பாட்டு
இரகசியங்களைப் புரிந்து கொள்ள உதவும் எத்தனையோ விசயங்கள்.. தூரத்து விகாரையிலிருந்து மெதுவான சில பக்தி சுலோக உச்சாடனங்கள் கேட்க ஆரம்பித்தன..
நமோ..நமோ தத்வய...
முஞ்ச புரெ முஞ்ச பச்சதோ..
மஜ்ஜே முஞ்ச பவஸ்ஸ பாரஹ_
ஸப்பத்த விமுத்த மானஸோ..
நபுன ஸாதிஜரங் உபேஹிஸி..
நான் இந்த சுலோகத்தின் முழுப்பொருளை புரிந்து
கொள்ள முயற்சித்தவனாக அதைப்பற்றிய சிந்தனை ஓட்டத்தோடு என் மகளின்
எச்சரிக்கையையும் மீறி மெதுவாக நடந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தேன். எவ்வித நோக்கமுமின்றி குன்றின் மீது என் மூச்சிரைப்பு நோயையும் மறந்து கொஞ்ச தூரம் ஏற ஆரம்பித்தேன்
வாழ்க்கையின் கசப்பை மூடியிருக்கும்
கவர்ச்சியான ஆசையைப் போல.. பாதங்கள் மலை வீழ்ச்சி ஓடையின்
நீரில் சிலீரிட்டுக் குளிர்ந்தன.. அச்சமயம் எனக்குள் ஏதேதோ இறை ஞாபகங்கள்..
நான்..? உண்மையில் யார்..? திடீரென என் மனம் என்னை
அதட்டிக் கேட்டது.. இது முன்னரும் பல தடவைகள் கேட்டிருந்தாலும் இன்று இப்போது அக் கேள்வியை மனம் மிக வன்மையுடன் ஓங்கிக் கேட்டதும். திகைத்துப் போனேன்.. மழலை.. குழந்தை.. சிறுவம்.. குமரம்.. வாலிபம்,, மத்திமம் எல்லாம் தாண்டி.. நான் யார்..? இந்த அறுபத்திரண்டு
வயதிலும் ஆசையை விட்டேனா..?
என்ன
தேடினேன்.?
என்ன
பெற்றேன்....?
எதைச்
சம்பாதித்தேன்..?
எதை
இழந்தேன்..?
தெரிந்த விடைகள் தாம்.. தேடியதெல்லாம் பணத்தைத்தான்.. மனத்தையல்ல.. சம்பாதித்தெல்லாம் பகையைத்தான்.. உறவையல்ல . இழந்ததெல்லாம் என்னைத்தான்.. உலகத்தையல்ல எல்லாம் தெரிந்திருந்தும்
ஆசை விடவில்லை. காலக் குதிரையின் கடைசிப் பலவீனத் தாவல்கள்.. ஏதேதோ எண்ணங்கள்..
வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபடல்
எப்படி..?
இது
சாத்தியமா..?
என்பது
நாற்பதுக்குப் பின் பிறந்து தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் கேள்வி
விருட்சம். அதன் உப கிளைகள் அனந்தம். இது முதல்ஞானம். இதனால் ஒரு பயனும் இல்லை.
ஆனால் இதன் விடை எல்லோருக்கும் தெரிந்துதுதான் இருக்கிறது. ஆசை.! ஆசைதான்
அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம். ஆசையில் நின்றும் விடுபடுதலைப் பற்றிää உயர்வெய்திய புத்தர்
உபதேசித்த அந்த இறைஞானவரிகள்..
சட்டென்று என் பார்வையில்
குன்றின் மீதிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சில புத்தபிக்குகள் தென்பட்டனர். ஏழு புத்த பிக்குகள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.. நான் அவர்களுக்கு வழி விட்டுச் சற்று ஒதுங்கி மரியாதையுடன் நின்றேன்.
அச்சமயம் திடீரென்று எனக்குள் இன்னதென்று வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு பொங்கிப் பொங்கிப் பிரவாகித்தது. என்ன இது..? என்னால் எதுவும்
தீர்மானிக்க முடியவில்லை. புத்தபிக்குகளின் வரிசை
நெருங்கிக் கொண்டிருந்தது. முன்னால் தலைமைப் பிக்கு பாதி மூடிய கண்களுடன் நிலம் நோக்கி அவசரமேதுமில்லாமல் மிக நிதானமாக வந்து கொண்டிருந்தார்.
நன்hறாக வழி விட்டுச் சரிவில் நின்றிருந்த நான் அவரை இச்சையில் செயலாக
சும்மா உற்றுப் பார்த்தேன்.. என்னருகில் நெருங்கிய அவர்
எதேச்சையாக என்னைப் பார்த்தார். சட்டென ஒரு கணம் தயங்கி நின்றார். பின்னால் வந்து கொண்டிருந்த எல்லாப் பிக்களும் நின்றனர். தலைமைப் பிக்கு மெதுவாக தனது பாதி விழிகளை நன்றாகத் திறந்து என்னைப் பார்த்தார். மழிக்கப்பட்டடிருந்த மொட்டைத் தலையும் சுத்தமாகச் சவரம்
செய்யப்பட்டும் நிர்மலமாகவிருந்த அவரது
முகத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த இரு ஆகர்ஷன சக்திமிக்க கூரிய விழிகளிலும் பரிபூரணையாக கருணையின் ஊற்று தெரிந்தது.
அதேசமயத்தில் அவரது விழிகளில் மின்வெட்டுப் போல ஒரு
வித்தியாசமான ஒளி தென்பட்டு மறைந்தது. நான் மரியாதையாக தலையைக் குனிந்தேன். என் தலையின் மீது படாமல் தனது வலது கையை வைத்த அவர் ஏதோ சிங்களத்தில்
முணுமுணுத்து ஆசி கூறினார்.
அடுத்தகணம் நான் அதிர்ச்சியுற்றுத் திடுக்கிட்டேன். காரணம் என் தாய் மொழியான தமிழில் சிங்களவரான அவர் சரளமான
தமிழ்நடையில் உபதேசித்ததுதான். பாளி மொழியில் சுலொகம் சொல்லி சிங்களத்தில் ஆரம்பித்து திடீரென தமிழில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்..
நான் எதைப்பற்றிச் சுய விசாரனை செய்து கொண்டிருந்தேனோ அதையே சொல்லிக்
கொண்டிருந்தார்.
“மகனே.. இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும்
முக்காலத்தையும் கடந்து எதிர்க் கரைக்குச்
செல்க. உன் மனது முழுவதும் விடுதலையடைந்து விட்டால் நீ மீண்டும் மீண்டும்
பிறந்து இறக்கும் நிலையை அடையமாட்டாய்.. சிலந்தி தான் அமைத்த வலைக் கூட்டில் தானே விழுவது போல ஆசையாகிய வெள்ளத்தில் விழுகிறாய். இ;த வெள்ளத்திலிருந்து
எழுந்து ஆசையை விட்டவர்கள் எல்லாத் துக்கங்களையும் விலக்கி நிர்வான மோட்சத்துக்குச் செல்கிறார்கள். நீயும் ஆயத்தமாகி வா மகனே..”
நான் மஹாவியப்புடன் அவரை நிமிர்ந்து
பார்த்தேன். அதேகணத்தில் அவர் ஒரு மெல்லிய புன்னகையோடு .., தன் மார்போடு
அணைத்திருந்த தனது விசிறியைச் சற்று விலக்கி தனது வலதுபக்க மார்பை எனக்கு மட்டும் காட்சிப்படுத்தி விட்டு சர்வ சாதாரணமாகத்
தொடர்ந்தும் நடக்க ஆரம்பித்தார். அந்த மார்பு.. ஓ.. அந்த மார்பில்.. “சாந்த” என்று சிங்களத்தில் பச்சை குத்தப்பட்டிருந்த
அந்த மார்பு..?
சாந்த..? சாந்த..! சாந்தமாமா..? ஓ.. சாந்தமாமா நீயா..?
நான் எல்லையற்ற பேரதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன். அவர் என்னைக் கடந்து அதே மிக நிதானத்துடன் அமைதியாக தன் சீடர்கள்
பின் தொடர குன்றைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தார். சற்றும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னால் கூப்பிடவும் முடியவில்லை. செய்யும் வகையறியாது விசித்திரமாக சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். ஏ.. சாந்தமாமா எங்கே போகிறாய்..? நான் சதக்கா.....நான் சதக்கா...உன்
நண்பன் வக்காத்துக்குளம் சதக்கா...என்று
மனம் கத்தியது...
சாந்தமாமா எங்க போறாய்.?
மாட்டுக்குப் போறேன்.!
மாடு என்னத்துக்கு.?
மாட்டுப்பீ எடுக்க.!
மாட்டுப்பீ என்னத்துக்கு.?
ஊடு மொளுக.!
ஊடு என்னத்துக்கு.?
புள்ளப் பெற !
புள்ள என்னத்துக்கு.?
எண்ணக்கொடத்துக்க துள்ளிப்பாய..!
சாந்தமாமாவின்
சிறு வயதுப் பழைய பாட்டு இப்போது எனக்கு வேறு புதிய அர்த்ததில் விளங்கியது..
அந்தப் பாடலில் இவ்வளவு தத்துவமா.. ஏழு
வயதில் பாடியதன் அர்த்தம் எழுபதில்
புரிந்தது. ஆசையென்ற எண்ணெய்க் குடத்தினுள் ஆசையுடன் துள்ளிப் பாய..?
பாய்ந்த
பின் மீண்டும் எழுந்து மீண்டும் எங்கே
போகிறோம்.. மாட்டுக்குப் போகிறோம்.. உலகத்திற்கு..! மாடு என்னத்துக்கு..?
மாட்டுப்பீ
எடுக்க.. மாயை என்னும் மலத்தை பூசிக் கொள்ள.. மாட்டுப்பீ என்னத்துக்கு..?
வீடு
கட்ட பிள்ளை பெற.. பிள்ளை என்னத்துக்கு..?
முடிவில்லாத
கேள்விகள்.. ஆயின் மறுபடியும் முதற்கேள்வியில்
வந்து முடியும் சக்கரச் சுழற்சிக் கேள்விகள்..
‘ப்பா..! கார் ரெடி..!
வாங்க..!”
என்ற மகனின் குரல் காதருகில் பலமாகக்
கேட்டது. நான் இளமையில் மட்டுமல்ல..... இந்த முதிய வயதிலும் சாந்தமாமாவிடம் புதிய ஒரு
பாட்டுக் கற்றுக்;
கொண்டவனாக
என் மகனின் கைகளைப் பிடித்தபடி மெதுவாக குன்றிலிருந்து கீழே இறங்க
ஆரம்பித்தேன்.
குன்றின் அடிவாரத்தை அடைந்து சாந்தமாமாவை மெதுவாகத்
திரும்பி மேலே பார்த்தேன். அவரோ என்னைத் திரும்பியும் பாராது தொடர்ந்து
சென்று கொண்டிருந்தார். அவரது தலைக்கு மேல் குன்றின் உச்சியில் பூரணமாக உதித்துக்
கொண்டிருந்த பூரண சந்திரன் பெரிய ஞான வட்டமாகத் தெரிந்தது.
ஹே…
சாந்தமாமா
எங்கே போகிறாய்..?
No comments:
Post a Comment