சாந்தமாமாவைப்
பற்றி உங்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும். நான்
சொல்லப்போவது வானத்தில் வந்து வனப்பூட்டுமே.. அந்தச்
சாந்தமாமாவைப் பற்றியெல்லாம் இல்லை.. 1968களில் எங்கள் கிராமத்தில் சும்மா சுற்றித்
திரிந்த சாந்த எனப்படும் மாமாவைப்
பற்றி.!
எமது
இளம்பிராயத்தின் அமைதிக்காலத்தின் அசகாய
கதாநாயகன் அவன்தான். சதக்கா
எனப்படும் நான், சண்முகம், குண்டன், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா
ஆகிய எமக்கு அவன்தான் வழிகாட்டி... விளையாட்டுத் தோழன்.....
பாதுகாவலன்.......
முதலான எல்லாமும். அந்தக் காலத்தில் அவனில்லாமல்
நாங்களில்லை. எம்மைப் பொறுத்தவரைக்கும், சாந்தமாமாவுக்கு
தெரியாத விஸயமே இந்த உலகத்தில் இல்லை. எல்லாம்
அவனால்முடியும்.
சாந்தமாமா எங்களை விட வயதிலும் உருவத்திலும் சற்றுப் பெரியவன். சாந்தமாமா என்று ஏன் அவனைக் கூப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அவன் மிகக் கறுப்பு நிறத்;தவன். அவனது கறுத்த இடது மார்பில் சிங்கள மொழியில் ‘சாந்த’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அதை வாசிக்க அவனுக்கும் தெரியாது. யாரோ வாசித்துச் சொல்லியதைச் சொல்லிக்கொண்டிருந்தான். சிங்களம் அவனுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அவனை அறிந்த காலமெல்லாம்ää அவன் எங்களோடுதான் வாழ்ந்தான். எப்படியோ தமிழில் மூன்றாம் வகுப்புப் படித்திருந்தான்.
அவனது
பெயர் சாந்த என்பதும்அவனை ஒரு சிங்களத் தாயிடமிருந்து எங்கள் கிராமத்தின்
கலலூட்டுப் போடியார் ஐந்து ரூபாய்க்கு
வாங்கியிருந்தார் என்றும்
கண்ணாரப்பெரியான் என்னிடம் சொல்லியிருந்தான்.. கல்லூட்டுப்
போடியாரின் வீட்டில் அவனை பிள்ளைகள்
சாந்தமாமா என்றுதான் அழைத்ததால் கிராமம் முழுக்க எல்லோருக்கும் வயதுவேறுபாடின்றி
அவன் சாந்தமாமாதான்.
அவனுக்கு
நிரந்தரமாக ஒரு வசிப்பிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் கல்லூட்டுப்
போடியின் வீட்டில் வெளி முற்றத்தில் படுத்துறங்குவான். அவரது
எடுபிடி ஆளாக இருந்தாலும் சர்வ சுதந்திரமாகச்
சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்.
பக்கத்து நகரத்துக்குச் சென்று சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் வாங்கி வருவான். எம்ஜீஆர் படப்பாடல்களை மனப்பாடத்தில் பாடிக்காட்டி நடிப்பான். உயர்ந்த தடிகளில் ஏறி பொய்க்கால் நடந்து காட்டுவான். கூளம் விதானையின் தென்னந்தோப்பில் களவாக ஏறி இளநீர் பிய்த்துப் போடுவான்… அவனிடம் எத்தனையோ திறமைகள்.. நான் சன்முகம்,குண்டன், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா ஆகியோரோடு மட்டும் சாந்தமாமா சற்றுக் கூடுதலான ஒட்டுறவாக இருந்தான்.
௦
இப்படித்தான்
ஒரு நாள் வீட்டாருக்குத் தெரியாமல், சாந்தமாமாவோடு பட்டிப்பளை
ஆற்றங்கரைக்கு குளிக்க வந்திருந்தோம். பட்டிப்பளை ஆறு எங்கள் கிராமத்தின் பொக்கிஷம்..கிராமத்தின் ஒதுக்குப் புறமாக இருந்த ஆயிரத்து
இரு நூறு ஏக்கர் வயல்கரைகளை
அண்மித்து உற்சாகமாகக் கரை புரண்டு ஓடும் ஆழமான நதி,,,
ஆற்றின்
இரு புறமும் அடர்ந்த மூங்கில் புதர்கள்,,,இக்கரையில்
மாபெரிய அரசமர விருட்சம்,,,,மன்ஜோனா மரங்கள்,,,அரச மரங்கள்...பல நூறு
தென்னைகள்....ஆ...ஒரே பசுமை... மேலே
வெப்பமும் உள்ளே குளிர்ச்சியுமான அதிசய நீரோட்டம்...எப்போதும் குளித்துக்
கொண்டிருக்கும் பெரியவர்கள்...மாடு
கழுவும் ஆட்கள்... சலவைத் தொழிலாளர்களின்
பாரிய முண்டுக் கற்கள்... அதில் ஷ்ஷப்பாஹ்... ஷ்ஷப்பாஹ்..
ஷ்ஷப்பாஹ்...என்ற சப்தமாய் வெளுக்கப்படும் ஆடைகள்.....
ஆற்றில் குளிக்க சிறுவர்களுக்கு அனுமதி
கிடையாது...பெரியவர்கள் உடன்
வந்தால் மட்டுமே குளிக்கலாம் ....ஆயினும் பெரியவர்கள்
வராத ஒரு இரண்டு மணி வாக்கில் சாந்தமாமாவை மட்டும்
நம்பி நாங்கள் வந்திருந்தோம்....... எங்கள் உற்சாகமும் பட்டிப்பளை ஆற்று நீரும்
பெருக்கெடுத்தோட நாங்கள்
தயாரானோம்..வழமையாகக்
கேட்பது போல நாங்கள் சத்தமிட்டு கத்திக் கேட்டோம்..
‘சாந்தமாமா...எங்கே
போறாய்..?’
சாந்தமாமா
தன் சாரனை அவிழ்த்து சரியாகத்
தார்ப்பாய்ச்சிக் கட்டியபடி தரையில் சிறிது தூரம் ஓடி அதற்குள் காற்றுவாங்கி சட்டென சாரத்தை
மடித்துக் கட்டி,,, ஒரு பெரிய காற்றுப் பந்தை சாரனுக்குள் அடக்கி அப்படியே.... குளக்கட்டால்.. ஓடி
‘மாட்டுக்குப் போறே..ன்.’
என்று
கத்தியபடியே அரசமர
வேரடியிலிருந்து உயரப்பாய்ந்து ஒரு
தலைகீழ்க்கரணம் அடித்து
உடல் குறுக்கிப் பட்டடிப்பளை ஆற்றில் சுள்ளீரெனத்
தண்ணீர் கிழித்துப் பாய்ந்து நீருக்குள்
புதைந்து மறைந்தான். வெகுநேரம்
அவனைக் காணாமையால்..... நாங்கள் பயந்து போய்
நிற்க... ஆனால்... சட்டென,,
நட்டாற்றில், உடலை உருளையாக்கி நீருக்குள்
சுழன்றடித்து, எழுந்து.. தலையைச் சிலிர்த்து.. எங்களைப்
பார்த்துச் “ஹூ..ஹூ..”வென்று சிரித்தான். பின்
சட்டென்று, அப்படியே
நீர் மீது அந்தரத்தில்
பாய்ந்து,,
தலைகீழாகச் சென்று மறைந்தான்.. தாமதித்து தலைநீட்டி எங்களை
வாய்பிளக்க வைத்தான். நாங்கள் ஆறு பேரும் குளத்தங்கரையில்,, நின்றபடியே..
அவனை நோக்கி உரத்துக் கத்தினோம்..
‘சாந்தமாமா.! எங்க
போறாய்..?’
‘மாட்டுக்குப் போறே..ன்..’ என்று பதில்கத்திவிட்டு
நீரில் மூழ்கினான்.
‘மாடு என்னத்துக்கு..?’
‘மாட்டுப்பீ எடுக்க..’ மேலெழுந்து
கத்தி விட்டு மறைந்தான்.
‘மாட்டுப்பீ என்னத்துக்கு..?’
‘ஊடு மொளுக..’
‘ஊடு என்னத்துக்கு..?’
‘புள்ளப் பொற..’
‘புள்ள என்னத்துக்கு..?’
‘எண்ணக்கொடத்துக்க
துள்ளிப்பாய..!’
என்று
கத்திய சாந்தமாமா ஆற்று நீரைக் கிழித்தபடியே சற்று கரைக்கு வந்து.. குளக்கட்டின் அருகே நின்றுகொண்டு
‘மொதல்ல நீ பாய்ரா குண்டா..!’ என்றான். குண்டன்
முன்பின் யோசிக்காமல் சாந்தமாமா
இருந்த தைரியத்தில் அப்படியே களிசானை
உதிர்த்து விட்டு.. ‘தொபுக்’கெனப் பாய்ந்தான். சாந்தமாமா
அவனைத் தாங்கி தண்ணீரில் மிதக்க விட்டான். பின் எதிர்பாராதவிதமாக
சண்முகம் பாய்ந்தான். சண்முகம் நீந்தத் தெரிந்தவன்.. பின்.. என்னைப் பார்த்தான்..
‘டே.. சதக்கா... நீ
பாயண்டா..” என்றான்.
நான் பக்கத்தில் சிறுமிகள் இருந்ததால் என் களிசானைக் கழற்ற வெட்கப்பட்டு தயங்கினேன். தண்ணீருக்குள்ளிருந்து மூவரும் ‘ டே..சதக்கா! பாய்ரா.. பாய்ரா.. பாய்ரா!’ என்று கத்தவே மாலைவெள்ளியும் பார்வதியும் சுபைதாவும் நாயுண்ணிப் பூக்கள் பறிக்க ஓடிய திடீர் சந்தர்ப்பத்தில் நானும் களிசானைக் கழற்றிவிட்டு குஞ்சாமணியைப் பொத்தியபடி குளக்கட்டில் வேகமாக ஓடி வந்து அரசமர அடிவேரிலிருந்து ‘ஹா.............’என்று கத்தியபடியே பாய்ந்தேன்..
பின்னால் நாயுண்ணிப்
பற்றைக்குள்ளிருந்து சிறுமிகள் ‘கிக்கிக்கிலீ’ ரெனச் சிரிப்பது தண்ணீருக்குள்
கனவு போலக் கேட்டது.. தண்ணீரின்
அடியிற் போய் முக்கித்
திரும்பி உந்தி எழுந்து
விரைவாக மேலெழுந்து பார்த்தேன்.. கரையில்
நின்று கொண்டு சிறுமிகள் என்னைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தனர்..
No comments:
Post a Comment